உயிரற்ற பொருட்கள் மீது கோபமா?
உயிரற்ற பொருட்கள் மீது கோபமா?
யாரிடம் கோபம் கொள்ள வேண்டும்?
இப்படிப் பட்டியல் எழுதி வைத்துதான் கோபப்பட வேண்டுமா?
"சினம் தவிர்" என்று படித்திருக்கிறோம்.
அது என்ன ?
யாரிடம் கோபம் கொள்ள வேண்டும்?
அப்படியானால் கோபம் கொள்ளலாமா?
என்ற கேள்வி குறுக்கே வந்து விடை கேட்டு நிற்கிறது.
கோபம் கொள்ளலாமா என்ற கேள்விக்கு
விடை தேடும் முன்னர் கோபம் கொள்ளாதவர்கள் யார் என்று தேடியே ஆக வேண்டும்.
அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் அக்கம்பக்கத்தினர் என்று ஒவ்வொருவராக அலசிப் பார்த்தால்....
யாராவது கிடைக்கிறார்களா?
இல்லையே....ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக யாரிடமாவது கோபப்பட்டவர்களாக
இருக்கிறார்கள்.
ஏன் நான் இல்லையா?
நான் யாரிடமும் கோபப்பட்ட தில்லை. அதனால் யாரிடமும் சண்டையிடதில்லை
என்று கையை உயர்த்திக்கொண்டே ஒருவர்
ஓடி வந்தார்.
யாவர் என்று திரும்பிப் பார்த்தேன்.
அதற்குள் காலில் கல் இடறி ஆ...அம்மா
என்று குரல் கொடுத்தபடி கீழே விழுந்தார்.
உடனே அவருக்கு கோபம் என்றால் கோபம் செம கோபம்.
கல்லை முறைத்தபடி சற்று நேரம் கீழே இருந்தார்.
யாரிவன் கல்லை நடுவழியில் போட்டு வைத்தவன் என்று சொல்லிக்கொண்டே கல்லை எடுத்து பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த ஆற்று நீரில்
தொலைந்து போ என்று வீசினார்.
சற்று தூரம் போயிருப்பார். ஒரு காய்ந்த ஓலை மட்டை முன்னால் வந்து விழுந்தது.
நல்லகாலம் தப்பித்தார்.
ஆனாலும் இந்த மட்டையை என்மீது
வீசியவன் என்று முறைப்படியே
அங்குமிங்கும் தேடினார் .
யாரையும் காணவில்லை.
இந்த மட்டையும் என்மீது தான் வந்து
விழ வேண்டுமா?
அந்த மட்டையையும் காலால் உதைத்து ஆற்றுக்குள் தள்ளிவிட்டார்.
இப்போது மனதில் ஒருவிதமான படபடப்பு.
அவரால் சாதாரணமாக நடக்க முடியவில்லை.
சற்று இளைப்பாற வேண்டும் போல இருந்தது.
ஒரு மரத்தடியில் போய் அமர்ந்து கையில் வைத்திருந்த பையைத் திறந்து தண்ணீர்
பாட்டிலை எடுத்தார்.
மூடியைத் திறந்து தண்ணீர் குடிக்கப் பார்க்கிறார்
பாட்டிலில் தண்ணீர் இல்லை.
இப்போது தண்ணீர் பாட்டில் மீது கோபம்.
தண்ணீர் இல்லாத பாட்டிலை
நான் ஏன் சுமந்து திரிய வேண்டும்?
கோபத்தில் பாட்டிலையும் ஆற்றில் தூக்கி வீசி விடுகிறார்.
அப்போது அப்பாடா என்றபடி முதியவர் ஒருவர் வந்து பக்கத்தில் அமர்கிறார்.
இவருக்கு அவரைப் பார்க்கவே பிடிக்கவில்லை.
எதைப் பார்த்தாலும் கோபம். யாரைப் பார்த்தாலும் கோபம்.
அதற்குள் வந்துஅமர்ந்த நபர் தலையில் கட்டியிருந்த துண்டை தரையில் விரித்து தூங்கிவிட்டார்.
நான் நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன். இவரால் மட்டும் எப்படி இப்படி நிம்மதியாகத் தூங்க முடிகிறது?
நிம்மதியாக இவரைப் போல வாழ என்ன செய்ய வேண்டும்?
யாரிடம் கேட்பது?
சற்று பொறுத்திருந்து இவர் விழித்ததும் இவரிடம் கேட்போம் என்று காத்திருந்தார்.
அவரும் கண் விழித்தார்.
"ஐயா,உங்களால் மட்டும் எப்படி நிம்மதியாகத் தூங்க முடிகிறது" என்று கேட்டார்.
மெதுவாகப் புன்னகைத்தப் பெரியவர்
"ஏன் உங்களால் தூங்க முடியவில்லையா?
ஏதும் பிரச்சினையா?
நல்ல நிழல். அருமையான காற்று ... அப்புறம் ஏன் தூக்கம் வரவில்லை.?
வரும் வழியில் யாரிடமாவது சண்டையிட்டீர்களா?
இல்லை.
கோபம் வரும் படியான ஏதாவது
நிகழ்வுகள் நடந்தனவா?"
"ஆம்....கல் காலில் இடறியது.
அப்புறம் தென்னம் மட்டை தலையில் விழப் பார்த்தது தப்பித்தேன்."
"அதற்கெல்லாமா கோபப்படுவது?
கோபம் வந்தால் தண்ணீர் குடிக்க வேண்டியதுதானே ?"
"தண்ணீர் குடிக்க நினைத்தேன். பாட்டிலில்
தண்ணீர் இல்லை.அதையும் கோபத்தில் தூக்கி வீசி விட்டேன்."
இப்படி எதற்கெடுத்தாலும்
கோபப்பட்டால் நிம்மதி எப்படி கிடைக்கும்?
முதலாவது நீங்கள் கோபப்பட்டவற்றிடம்
மன்னிப்பு கேளுங்கள்.
"அவை வெறும் கல்லும் மட்டையும்
பாட்டிலும்.
இவற்றிடமெல்லாமா மன்னிப்பு கேட்க வேண்டும்.?"
ஆம்... உங்கள் மனதின் பாரம் குறைந்து நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால்
மன்னிப்பு கேட்டுத்தான் ஆக வேண்டும்.
வேண்டுமென்றே கல் காலில் வந்து இடிக்கவில்லை.
நீங்களாகத்தான் கல்லில் காலை இடறிக் கொண்டீர்கள்.
அது உங்கள் தவறு. நீங்கள் தான் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
ஓலை மட்டை காற்று வீசியதால் கீழே அத
விழுந்தது.
அது விழும்போது நீங்கள் அந்த வழியாக வந்திருக்கிறீர்கள்.
அது ஓலை மட்டையின் தவறல்ல.
தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி வைக்காது யார் குற்றம்?
சொல்லுங்கள் யார் குற்றம்?
நீங்கள் செய்த தவறுக்கு எல்லாம்
பிறர் மீதும் பிற பொருட்கள் மீதும் கோபப்பட்டால் எப்படி நிம்மதி கிடைக்கும்?
முதலாவது என்ன நிகழ்ந்தாலும்
அடுத்தவர்கள் மீது குற்றம் சுமத்தும் தை
விட்டுவிட்டு இயல்பாக இருந்து பழகுங்கள்.
காரண காரியம் தேடி
குற்றம் சுமத்துத் தொடங்கினால்
உங்களைச் சுற்றியுள்ள எந்தப்
பொருளையும் ஏன் எந்த உயிரையும்
உங்களால் நேசிக்க முடியாது.
முதலாவது உங்களைச் சுற்றியிருக்கும்
உயிருள்ளவற்றையும் உயிரற்றவற்றையும்
நேசித்துப் பாருங்கள்.
அந்த வாசம் உங்களைச் சூட்டும்.
சுற்றி இருப்பவை மகிழ்ச்சியாக
இருப்பதுபோல உணர்ந்தால் நாம்
மகிழ்ச்சியாக மாறிவிடுவோம்.
மகிழ்ச்சி நிம்மதி தரும்."
என்றபடி தரையில் விரித்திருந்த துண்டை உதறி தோளில் போட்டபடி
அவர் பாட்டுக்கு நடந்து போனார்.
அவரை வியந்து பார்த்தபடியே
அமர்ந்திருந்தார் .
எவ்வளவு பெரிய உண்மையை
சப்தமில்லாமல் சொல்லிவிட்டு கடந்து
போய்விட்டார்.
நாம் உயிரில்லாத பொருட்கள் மீது
எத்தனை முறை கோபப்பட்டிருப்போம்.
சிறிய செயலாகத்தான் இருக்கும்.
அவைதான் நம் நிம்மதியைத் தொலைய வைக்கும்.
கோபம் தவிர்ப்போம்.
மகிழ்ச்சியை நமதாக்கிக் கொள்வோம்.
Comments
Post a Comment