கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் யைத் தும்பி

காதல் என்று வந்துவிட்டால் அதில்

மிகைப்படுத்தல் மிகுந்திருக்கும்.

காதலன் காதலியைப் புகழ்வதும்

காதலி காதலனைப் புகழ்வதும்

இன்று நேற்று நடப்பதல்ல. உலகம்

தோன்றிய காலம் தொட்டு

இதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

நாளையும் இதுதான் நடக்கும்.


இதைத்தான் நாம் எல்லா 

அகப்பாடல்களிலும்

பார்க்கிறோம். படிக்கிறோம்.

உள்ளுக்குள்ளேயே சிரித்து

மகிழ்கிறோம்.

பெயர் சுட்டப்படாத யாரோ இருவருக்குள்

நிகழ்ந்த காதல் பொதுமையாக நம்முன்

வைக்கப்படும் போது அந்த இலக்கிய 

இன்பத்தை நம்மால் நுகரமுடிகிறது.

அந்த உணர்வு அனைவராலும்

ஈர்க்கப்படுகிறது.

பெயர் சொல்லப்படாமல் தலைவன்

தலைவி என்றே சொல்லப்படும் 

ஒரு பொதுமைத் தன்மை அகப்பாடல்களில்

இருப்பதைப் பார்க்கலாம்.




இப்போது தலைவன் ஒருவன் தன் அன்புக்குரிய

தன்  தலைவியைப் பார்த்து எப்படி எல்லாம் 

 புகழ்வான் என்று

வள்ளுவர் சொல்வதைக்  கேளுங்கள்.



"முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு"



மூங்கில் போன்ற தோளையுடைய

என் தலைவிக்கு தளிரே மேனி.

 முத்தே பல் .உடல் மணமோ நறுமணம்.

 வேலே மை உண்ட கண் 

என்று தலைவியைப் பார்த்து வானளாவப்

புகழ்கிறானாம் தலைவன்.



இந்தக் குறளில் தலைவன் தன்

தலைவி இயற்கையிலேயே 

நறுமணம்  கொண்டவள் என்று சொல்வதைத்

கவனித்தீர்களா?

மிகையாகப் பேசுவதுபோல் இருக்கிறதல்லவா!

காதல் வந்தால் எல்லாம் மிகையாகத்தான்

இருக்கும்.


இதனைப் போன்ற கருத்து

இதற்கு முன்னால் எங்கேயோ கேட்டது

போலிருக்கிறதே!


அதனை  யாரிடமாவது 

கேட்டு உறுதி

செய்து கொள்ள வேண்டும் 

என்று எனக்குள் ஓர் ஆசை.


எனக்கு இன்று ஓர் உண்மை 

தெரிஞ்சாகணும்.


யாரிடம் கேட்பேன்?

எங்கே போய் கேட்பேன்?

என்னவென்று கேட்பேன்?

எப்படி  கேட்பேன்?

எனக்கு வேணும்....எனக்கு வேணும்....


தருமியைப் போல் 

இப்படி புலம்ப

வைத்துவிட்டாரே இந்த வள்ளுவர்.


ஆ.....தருமி என்றதும்

நினைவு வந்துவிட்டது.


திருவிளையாடல் திரைப்படத்தில்

தருமி புலம்பியிருப்பாரே ....

அந்தப் பாடலுக்கும் இந்தத் திருக்குறளுக்கும்

ஓர் ஒற்றுமை உண்டு.


இந்தக் குறளில் காதலியின் உடலுக்கு 

இயற்கையாகவே நறுமணம் உண்டு

என்கிறார் வள்ளுவர்.


தலைவியின் கூந்தலுக்கு 

இயற்கையாகவே நறுமணம்

உண்டு என்று கூறியிருப்பார்

இறையனார்.


எது எப்படியோ பெண்களுக்கு

இயற்கையாகவே நறுமணம் உண்டு

என்று இருவரும் சொல்லிவிட்டனர்.


இருபெரு ஆளுமைகள் சொல்லிய கருத்தில்

உண்மை இல்லாமலா இருக்கும்?


ஆனாலும் மனதில் ஒரு சின்ன

ஐயப்பாடு....துணிந்து நக்கீரரைப் போல

கேட்கமுடியாத நிலை.



உண்மையிலேயே

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?

இந்தக் கேள்வி உங்களுக்கும் எனக்கும்

எழுந்து போல ஒரு கேள்வி

செண்பகப் பாண்டியன்

என்ற மன்னனுக்கும் ஏற்பட்டதாம்.


மன்னனுக்கு ஐயம் எழுந்தால் அது

கேள்வியாக அவையினர் முன் வைக்கப்

படுவது தானே முறை.


அதேபோன்று மன்னனும் தனது 

ஐயப்பாட்டினைத்

தீர்த்து வைக்கும்படி

கேட்டுக் கொண்டாராம்.


காதல் மிகுதியால் காதலன் தன் 

அன்புக்குரியவளை

வானளாவ புகழ்ந்து பேசுதல் 

இயல்புதானே!


இதில் என்ன தவறு இருக்கப்போகிறது?


இதில் போய் உண்மையைத் தேடலாமா?

இதைப்போய் ஐயப்படலாமா?

இந்த எண்ணம் மன்னன் மனதில் எழவில்லை.


கேள்வி விவாதப் பொருளாக மாறியது.


விவாதப் பொருளாக மாறிய

பாடல் இதோ உங்களுக்காக:


கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின், மயிலியற்

செறி எயிற்று, அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?


                                 -   குறுந்தொகை 

                                

பாடியவர்               -   இறையனார்

எத்தனையோ குறுந்தொகைப் பாடல்களை

நாம் படித்திருக்கலாம்.

ஆனால் இந்த  ஒரு குறுந்தொகைப் பாடலை

படிக்கும்போது மட்டும் எதோ ஓர்

உணர்வு உள்ளுக்குள் இருந்து தட்டி

எழுப்புகிறது.

சிம்மக் குரலோனின் கர்ஜனைக் குரல் 

காதுக்குள் கம்பீரமாக

ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

கம்பீரத்தொனியில் பாடலைப்

பாடிவிட்டு கேட்டக் கேள்விகளும்

அதற்கான விளக்கங்களும் நம்மை

விவாதத்துக்குள் இழுத்துச் செல்கின்றன.

அந்த விவாதம் அனைவர் மனங்களிலும்

இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது.

நாளையும் நடக்கும்.

"தேன் தேடும் வாழ்க்கையை இயல்பாகக்

கொண்ட அழகிய சிறு தும்பியே! 

உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். 

தேன் உண்ணும் விருப்பத்தினால்

 மயக்கம் கொண்டு

ஒருபக்கம் சாயாமல் நடுநிலையோடு

எனக்கு நீ

ஓர் உண்மையைச் சொல்ல வேண்டும்.

நீ எத்தனையோ மலர்களிடம் 

சென்றிருப்பாய்.

தேன் எடுத்து உண்டிருப்பாய்.

அதன் இனிமையைச் சுவைத்திருப்பாய்.

பூக்களின் மணத்தை நுகர்ந்திருப்பாய்.

அதன் வேறுபாட்டினை அறிந்திருப்பாய்.

அதனால் உன்னிடம் கேள்வி கேட்பதுதான் 

சாலச் சிறந்தது. 

மயில் தோகை போன்ற 

மென்மையான இயல்புடையவள்

என் தலைவி.

அவள் கூந்தல் வாசனையைவிடவும்

வாசனையுள்ள மலர் நீ பார்த்த

மலர்களில் எங்கும் 

உண்டோ?  என்பதைச் சொல்"

என்று கேட்கிறான் தலைவன்.



இதுதான் பாடலின் பொருள்.

வில்லங்கமான கேள்விதான்.

அதனால்தான் அந்தக் கேள்வி இன்றுவரை

நம்மோடு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதனைப் பசுமரத்தாணி போல பதிய

வைத்தது திருவிளையாடல்

திரைப்படம் என்றால் மிகையாகாது.

அதுவும் இறையனாரும் நக்கீரரும் 

தருமியும் நம் நினைவுகளில் அப்படியே பதிந்து

போய்விட்டனர்.


பாடல் பாடியவர் இறையனார் என்பதால்

இறைவனே நேரில் வந்து

விவாதத்தில் கலந்து கொண்டது

போன்ற காட்சி

நம் கண்முன் வந்து நிற்கிறது.


இறையனாரின் இந்தப் பாடலில்

அப்படி என்னதான் இருக்கிறது?


என் தலைவி கூந்தலுக்கு இயற்கையிலேயே

மணம் உள்ளது என்று கூறிவிட்டார்.

அவ்வளவுதானே!


காதல் வந்தால் ....

கூடவே பொய்யும் வரும்.


அப்படிச் சொல்வது தப்பா?


தப்பில்லை என்று எல்லோராலும் 

முழுவதுமாக

ஒத்துக் கொள்ள முடியவில்லை.

தப்பு என்று சொல்லும் துணிச்சல்

நக்கீரரைப்போல வேறு எவருக்கும்

இல்லவும் இல்லை.


அப்படியானால் பெண்களின் கூந்தலுக்கு

இயற்கையாகவே மணம் உண்டா?

இல்லையா?


எத்தனைமுறை கேட்டாலும் பதில்

என்னவோ ஒன்றாகத்தான்

இருக்கும். இருக்க முடியும்.

இறையனார் பேச்சுக்கு மறு

பேச்சு ஏது?


காதல் கொண்ட ஒரு தலைவன்

தன் தலைவியைப் பார்த்துப் பாடும்

பாடல் இப்படித்தான் இருக்கும்.


அதனால்தான் இறையனாரும் தன் தலைவியின்

கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம்

உண்டு என்று உறுதியாகக்

கூறியிருக்கிறார்.


இயற்கையிலேயே பெண்களின்

கூந்தலுக்கு மணம் உண்டோ என்று

இறையனார் கேட்க 

பொருளில் 

குற்றம் உண்டென்று

நக்கீரர் ஏற்க மறுக்க

 இறையனார் தன்

கருத்தில் உறுதியாக இருக்க

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம்

குற்றமே என்று நக்கீரரும் 

ஒத்துக்கொள்ள மறுக்க

அதனால் இருவருக்குமிடையில்  விவாத அனல் பறக்க...

நமக்கு நல்ல இலக்கிய விருந்து

கிடைக்க  

 நாம் கேட்டு மகிழ்ந்த

குறுந்தொகைப் பாடல் ...


அந்தப் பாடலுக்குப் பெருமை சேர்ந்த

சிம்மக் குரலோன்...இவை 

எல்லாவற்றையும்

எப்படி சொல்வது? என்னவென்று

விவரிப்பது?


அவரில்லை யென்றால் இந்தப்பாடல்

இந்த அளவு விவாதப்பொருளாகியிருக்காது

என்பது என் கருத்து.


இந்தக் குறுந்தொகைப் பாடலை மக்களிடம்

கொண்டு சேர்த்த பெருமை

திருவிளையாடல் திரைப்படத்திற்குத்தான்

உண்டு.


பாடலில் உண்மை உண்டா? இல்லையா ?என

ஆராய்ந்தால் பாடலின் சுவை

அந்த விவாதத்திற்குள் மறைந்து 

போய்விடும்.

அதை விட்டுவிடுங்கள்.

கவிதை என்றால் அதில்

ஆயிரம் பொய் இருக்கும்.

அந்தப் பொய்தான் கவிதைக்கு

அழகு.

இதைத்தான் கவிப்பேரரசும்,


கண்ணுக்கு மை அழகு

கவிதைக்கு பொய் அழகு 

கன்னத்தில் குழி அழகு

கார் கூந்தல் பெண் அழகு....


என்ற பாடலில்

கவிதைக்குப் பொய் அழகு என்று

ஒப்புதல் வாக்குமூலம் 

அளித்திருப்பார்.


அப்புறம் என்னங்க....

கவிதைக்குப் பொய்தாங்க 

அழகோ அழகு!


இந்தப் பாடலுக்கும் அதுதாங்க

அழகு!








Comments