பாரதிதாசன் பார்வையில் தமிழ்

பாரதிதாசன் பார்வையில் தமிழ்


"எங்கள் வாழ்வும் எங்கள்

 வளமும்

 மங்காத தமிழென்று சங்கே 

 முழங்கு

எங்கள் பகைவர் எங்கோ

மறைந்தார்

இங்குள்ள  தமிழர்கள் ஒன்றாதல்

கண்டே.....

சங்கே முழங்கு...சங்கே முழங்கு"

என்று வீர முழக்கமிட்டவர்

பாவேந்தர் பாரதிதாசன்.


தமக்கு அன்பானவர்களைக் மானே...

தேனே ...கண்ணே ...கற்கண்டே ...

கனியமுதே.....என்று

வாயார அழைத்து மகிழ்வோம்.


இது மனிதன்மீது கொண்ட காதலால்

சொல்லப்படும் வார்த்தைகள்.

கேட்பவரை மகிழ்விக்கப்

பயன்படுத்தும் சொற்கள்.


பாரதிதாசனுக்கோ மொழிமீது

தீராத காதல்.

மொழிக்காக தன் வாழ்க்கையையே

அர்ப்பணித்துக் கொண்டவர்.

தமிழ்மீது கொண்ட

காதலால் ...பற்றால்  தமிழை

எப்படி எப்படி எல்லாமோ அழைத்து

மகிழ்கிறார்.


"செந்தமிழே !உயிரே! நறுந்தேனே

செயலினை மூச்சினை

உனக்களித்தேனே

நைந்தாய் எனில்

நைந்துபோகும் என் வாழ்வு

நன்னிலை உனக்கெனில்

எனக்கும் தானே !"


என்று தமிழை வாயார அழைத்து

மனமார வாழ்த்துப் பாடி 

கொண்டாடுகிறார்.

தமிழ் என்றால் பாரதிதாசனுக்கு

உயிர்.


தமிழ் இனிமை:


நன்று என்று சொல்ல உலகில்

எத்தனை எத்தனையோ பொருட்கள் 

கண்முன் அணிவகுத்து நிற்கின்றன.


மழைநாளில் மண்மணம் 

நுகர்தல் இனிது.

பச்சைப்பசுங் காட்டினை

கண்டு மகிழ்தல் இனிது.

கொத்துக் கொத்தாய் 

 பூப்பூத்துக் கிடப்பதைக் காண்பது

இனிதினும்  இனிது.

பெற்றப் பிள்ளையைக் கையில்

ஏந்தல் இனிது.

தாயின் கையால் உணவுண்ணல்

இனிது.

தன்உழைப்பில் உடல் வளர்த்தல்

இனிது.

உறவுகளோடு கூடி இருத்தல்

இனிது.

நட்போடு தோளோடு தோள்சேர்த்து

நடைபயில்தல் இனிது.


இப்படி நமக்கு இனிமையானவை

எது எனச் சொல்லிக்கொள்ள

ஆயிரம் உண்டு. 


ஆனால் பாரதிதாசனுக்கு மட்டும்

இனிமை என்றால் ஒன்றே ஒன்று 

மட்டும்தான்.

இவை எல்லாம் இனிமை என்று

ஒரு சாதாரண மனிதனைப்போல

சொல்லி கடந்துபோக அவரால்

முடியவில்லை.

என்தமிழே எனக்கு இனிமை

என்கிறார்.


கனிந்த பலாச்சுளையில் 

கடுஞ்சுவை உண்டு. 


சொட்டும் மலைத்தேனில்

சொல்லொண்ணா

இனிமை உண்டு.


சுண்டக் காய்ச்சிய

பாலிலின் சுவை கூடுதலாய் 

இருத்தல் உண்டு.


பசும்பாலில் நலந்தரு 

நன்மைகள் தாராளமாய் உண்டு.


இளநீரில் இனிமை தரு

சுவை ஏராளம் உண்டு.


மாற்றுக் கருத்து இல்லை.

இவை எல்லாவற்றையும் கடந்ததோர்

இனிமை ஒன்றுண்டு.

அந்த இனிமை

என் உணர்வினில் உதிரத்தில்

உச்சரிப்பில் உயிரினில் கலந்திருக்கக்

கண்டேன்.

அதனால்தான்  இனிமை என்

தமிழ்மொழி என்பேன் என்கிறார்.



கனியிடை ஏறிய சுளையும் -முற்றல்

கழையிடை ஏறிய சாறும்

பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்

நனிபசு பொழியும் பாலும் - தென்னை

நல்கிய குளிரிள நீரும்

இனியன என்பேன் எனினும்

தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்"

என்று இனிமை தருவது

எதுவாயினும் எனக்கு உயிர்

தமிழ் என்று மார்தட்டுகிறார்.



தமிழ்  இன்பம் :


இன்பம் எதுவென்று கேட்பின்

ஈட்டிய பொருளால் இன்பம் 

காணலாம் என்பார் ஒருவர்.


மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக

வாழ்த்தல் மட்டுமே

இன்பம் என்பார் இன்னொருவர்.


பெற்ற பதவி எனக்குப் பேரின்பம்

தரும் என்பார் பெரும் பதவியில் 

இருக்கும் ஒரு பெரிய நபர்.


புகழும் பதவியும் பொருளும்

சேர்ந்து கிடைப்பதுதான் இன்பம்

என்பார் பேராசைக்காரரான

மற்றுமொரு மனிதர். 


இப்படி ஆளாளுக்கு இன்பம்

எது என்பதில் மாறுபாடும் உண்டு.

வேறுபாடும் உண்டு.


ஆனால் பாரதிதாசனுக்கு மட்டும்

இன்பம் எது என்று சொல்வதில்

எந்த மாறுபாடும் இல்லை.

வேறுபாடும்  இல்லை.

எனக்கு இன்பம் என்றால்

தமிழ்தான்.

தமிழ் மட்டும்தான்.

இதில் எந்த மாற்றுக்

கருத்துக்கும் இடமே இல்லை என்கிறார்.


அதனால்தான்,


"இன்பம் எனப்படுதல்- தமிழ்

இன்பம் எனத் தமிழ் நாட்டினர்

எண்ணுக "

என்கிறார்.

தமிழ் நாட்டினரே! கேள்மின்!

தமிழ் என்றதும் இன்பம் கிட்டும்.

கிட்டிய இன்பத்தை நுகர்ந்து

மகிழ்வு கொள்க ! 

என்று அறிவுரையும் வழங்குகிறார்.


தமிழ்  அமிழ்து:


அமிழ்து என்றால் தேவர்கள் உண்ணும்

உணவு என்று நினைத்திருப்போம்.

அதனை உண்பதால்தான் தேவர்கள்

சாகா வரம் பெற்று வாழ்கிறார்கள்

என்பது பலரது நம்பிக்கை.

எப்போதாவது சுவையான உணவினை

உண்டால் ஆஹா....தேவாமிர்தம் போல்

இருக்கிறது என்று பெருமைபடக் கூறியிருப்போம்.


ஆனால் பாரதிதாசனுக்கு அமிழ்தம்

என்றாலும் தமிழ்தானாம்.


அமிழ்தின் சுவை தமிழ்மொழியில்

உண்டு என்கிறார் புரட்சிக்கவி.

அதனால்தான் பாரதிதாசனுக்கு 

அமிழ்து என்றதும் தேவர்கள்

நினைவுக்கு வரவில்லை.

அவையின் நெல்லிக்கனி நினைவுக்கு

வரவில்லை.

பாற்கடல் நினைவுக்கு வரவில்லை.

பைந்தமிழ் மட்டுமே  நினைவுக்கு

வந்தது.

எனக்கு அமிழ்து தமிழ்

என்று சொல்லி மகிழ்கிறார்

புரட்சிக்கவி.


இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு

இன்பம் தரும்படி வாய்த்த நல் அமுது"


என்று பாடுகிறார்.


தமிழ்ப் பெயர்: 


பேர் சொல்லி அழைக்க ஒரே ஒரு

பெயர் உண்டு.

செல்லமாய் அழைக்க மற்றுமொரு

பெயரும் இருத்தல் உண்டு.

ஆனால் தமிழுக்குத்தான் எத்தனை

எத்தனை பெயர்களைச் சூட்டி

அழகுபடுத்தி ஆனந்திக்கிறார்

பாரதிதாசன்.


தமிழை எப்படி எப்படியெல்லாம்

பேர் சொல்லி அழைக்கலாம்

என்ற புரட்சிக்கவியின் விருப்பம்

எல்லாம் கவியாக நம்

கண்முன்னே விரிந்து நம்மை

கற்பனை தேரேறி காடு மேடெல்லாம்

ஓட வைக்கிறது.

வான்வெளியில் பறந்து 

வானம்பாடியாய் வாய்விட்டுப்

பாட வைக்கிறது.


தமிழைப்  பேர் சொல்லி அழைத்து

வானம்பாடியாய் என்னைக்

கானம்பாட வைத்த பாடல்

இதோ உங்களுக்காக....



"தமிழுக்கும் அமுதென்று பேர் - 

அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள்

உயிருக்கு நேர் 

    (    தமிழுக்கும் அமுதென்று பேர் )


தமிழுக்கு நிலவென்று பேர்-

இன்பத்

தமிழ் எங்கள் விளைவுக்கு நீர்

தமிழுக்கு மணமென்று பேர்- 

இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்

தமிழுக்கு மதுவென்று பேர்-

இன்பத்

தமிழ் எங்கள் உரிமைச்செம்

பயிருக்கு வேர்...

        (    தமிழுக்கும் அமுதென்று பேர்)


தமிழ்எங்கள் இளமைக்குப்பால்

இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு

வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்-

இன்பத்

தமிழ்எங்கள் அசதிக்குச் சுடர்தந்த

தேன்!

          ( தமிழுக்கும் அமுதென்று பேர் )


தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்- 

இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின்

வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத்  தாய் -

இன்பத்

தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ


           ( தமிழுக்கும் அமுதென்று பேர் )

           


தமிழ் மொழியை உணர்வோடும்

உயிரோடும் கலந்ததோர் உறவாய்

கொண்டாடி மகிழ்ந்தவர் பாரதிதாசன்

என்பதற்கு இதைவிட வேறு

சான்றேதும் வேண்டுமோ?





Comments