ஜெபிக்கும் கரங்கள் பிறந்த கதை
ஜெபிக்கும் கரங்கள் பிறந்த கதை
சில படங்கள் ஆயிரம் கதைகளைப் பேசும்.
சில கரங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையையே சொல்லும்.
ஒருவருடைய கரம் அவர் யார் எப்படிப்பட்டவர் என்பதை அறிய வைக்கும்.
அத்தகைய புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றுதான் ஜெர்மானிய ஓவியக் கலைஞர் ஆல்பிரெக்ட் டியூரர் வரைந்த “ஜெபிக்கும் கரங்கள் "
இணைந்து குவிந்திருக்கும் இரண்டு கரங்கள்…
கரங்களில் உழைப்பின் தடங்கள்…
ஏதோ ஒரு வலி
ஒருவிதமான அமைதி
பக்தியைத் தூண்டும் ஓர் ஈர்ப்பு
ஆகியவை இந்தக் கரங்களுக்குப் பின்னால் என்ன கதை இருக்கிறது...?ஏதோ ஒரு கதை மறைந்திருக்கிறது என்று பேச வைக்கிறது. அதை அறிய வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டி நிற்கிறது.
கிறிஸ்தவ தேவாலயங்களில்
கிறிஸ்தவ வாராந்திர, மாதாந்திர பத்திரிகைகளில் ஜெபிக்கும் கரங்கள் படம் இல்லாமல் இருக்காது.
நைந்து போன அந்தக் கரங்கள் ஏசு கிறிஸ்து தங்களுக்காக பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்ளும் கரங்கள் என்பது இறை நம்பிக்கையாளர்கள் அனைவரின் நம்பிக்கை.
ஜெர்மனி நாட்டில் ஆல்பிரெச் ,ஆல்பிரெக்ட் என்ற இரு சகோதரர்கள் இருந்தனர்.
இருவருக்கும் ஓவியம் கற்றுக்கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று வெகுநாட்களாக ஆசை.
ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? ஆசையை நிறைவேற்றிக்கொள்ள போதுமான பணம் வேணுமே...
பணத்திற்கு எங்கே போவது?
வீட்டில் வறுமை.
போதுமான பண வசதி இல்லாததால் இருவராலும் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனாலும் இருவருக்கும் எப்படியாவது படிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைந்தபாடில்லை.
இருவரும் என்ன செய்யலாம் என்று யோசித்தனர்.
இறுதியாக இருவரில் ஒருவர் முதலாவது வேலைக்குப் போகலாம்.
ஒருவர் வேலை செய்து இன்னொருவரை படிக்க வைக்க வேண்டும்.
ஒருவர் படிப்பு முடித்து வந்ததும்
அவர் வேலைக்குச் சேர்ந்து இன்னொருவரைப் படிக்க வைக்கலாம் என்று முடிவு எடுத்தனர்.
இப்போது யார் முதலாவது படிக்க செல்வது என்பதில் குழப்பம்.
பூவா ...தலையா ...போட்டுப் பார்த்துவிட வேண்டியதுதான். வேறு வழியில்லை.
பூ ...விழுந்தவர் முதலில் படிக்கச் செல்ல வேண்டும்.
தலை... விழுந்தால் அந்த நபர் வேலை செய்து மற்றவரை படிக்க வைக்க வேண்டும்.
இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி பூவா...தலையா போட்டுப் பார்க்கப்பட்டது.
முடிவு ஆல்பிரெக்ட்டுக்குச் சாதகமாக அமைந்தது.
ஆம்...ஆல்பிரெக்ட் படிக்க வேண்டும் என்ற முடிவு வந்தது.
அதன்படி படிப்பதற்காக ஆல்பிரக்ட் வெளி மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
ஒரு பட்டறையில் வேலை செய்து ஆல்பிரெக்ட் தன் சகோதரன் படிப்பிற்காக மாதம்தோறும் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார் .
சகோதரன் படிப்பு நல்லபடியாக முடிந்தது.
படித்து முடித்ததும் நல்ல வேலையும் கிடைத்தது.
இனி ஊருக்குப் போய் தன் சகோதரனைப் படிக்க வைக்க வேண்டும் என்று மகிழ்ச்சியோடு நாடு திரும்பினார் ஆல்பிரெக்ட்.
வீட்டில் வந்து சகோதரனைப் பார்க்கின்றார் .
தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஆவலோடு கரங்களைப் பிடித்து முத்தமிடச் சென்றார்.
அப்படியே அதிர்ந்து போனார்.
பட்டறையில் வேலை பார்த்த சகோதரனின் கை உருக்குலைந்து போய் இருந்தது.
இனி தன் சகோதரனால் ஓவியம் வரைவதற்கு தூரிகை பிடிக்க கூட முடியாது.
அந்த அளவுக்கு அவர் கை நைந்து போய் இருந்தது.
சகோதரனின் கைகளை விட்டு கண்கள் அகலவில்லை.
கண்கள் பனித்தன.
பேச நா எழவில்லை.
தன்னைப் படிக்க வைத்து உயர் நிலைக்கு கொண்டு வர தன்னையே தியாகம் செய்துவிட்ட தன் சகோதரனை நினைத்து
அப்படியே அதிர்ந்துபோய் நின்றார்.
என் சகோதரனுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று புலம்பினார்.
எனது முதல் ஓவியம் என் சகோதரனின் கரங்களாகத் தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
தூரிகையை எடுத்து சகோதரனின் நைந்து போன கரங்களை ஓவியமாக தீட்டினார்.
அந்த ஓவியம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகியது.
இதுதான் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஜெபிக்கும் கரங்களாக தியாகத்தின் கரங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
தியாகத்தின் கரம் என்று கிறிஸ்தவர்களால் வணங்கப்பட்டு வருகிறது
இன்றுவரை அனைவரும் வணங்கும் கரமாக இருந்து வருவது ஆல்பிரெக்ட் தன் சகோதரனுக்குச் செய்த மரியாதை
என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜெபிக்கும் கரங்களுக்குப் பின்னால் ஒரு தியாகம் உள்ளது என்பதை இன்றும் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது
அந்த ஓவியம்.
மேலும் ஜெபிக்கும் கரங்கள் நமக்கு ஒரு அழகான உலகியல் உண்மையை நினைவூட்டுகின்றது.
வெற்றியின் பின்னால் பல நேரங்களில் நம் கண்களுக்குத் தெரியாத யாரோ ஒருவரின் உழைப்பும் தியாகமும் இருந்துகொண்டுதான் இருக்கும்.
ஆனால் நாம் உயரும்போது, நம்மை உயர்த்திய அந்தக் கரங்களை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
நம் வாழ்க்கையில் நமக்காக உழைத்த பெற்றோர்,
நம்மை வழிநடத்திய ஆசிரியர்கள்,
நமக்காக விட்டுக்கொடுத்த உடன்பிறப்புகள், நண்பர்கள் என்று நம் வெற்றிக்காக அமைதியாக உழைத்த இன்னும் பலர் இருக்கக்கூடும்.
அவர்கள் அனைவரின்
கரங்களும் ஒரு “ஜெபிக்கும் கரம்”
என்பதை மறந்துவிடக்கூடாது.
நாம் அடைந்திருக்கின்ற உயரம் நம்முடைய முயற்சியால் மட்டும் கிடைத்ததல்ல.
நமக்காக உழைத்த பலரின் அன்பாலும் தியாகத்தாலும் கிடைக்கப்பெற்றது.
எனவே, வாழ்க்கையில் உயரும்போது
நம்மை உயர்த்தியவர்களின் கரங்களை நினைவுகூர வேண்டும்.
கூப்பிய கரங்கள் ஜெபிப்பதற்காக மட்டுமல்ல…
நன்றி சொல்வதற்காகவும்
என்பதை மறந்துவிடக்கூடாது.
வெற்றி பெற்றவர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள் அல்லர்.
தன் வெற்றிக்குப் பின்னால் இருந்த தியாகத்தை நினைவில் வைத்திருந்து
வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பவர்களே உயர்ந்தவவர்கள்; கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக