பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து 

               

தமிழாசிரியருக்கு

பிறந்தநாள் வாழ்த்தனுப்ப 

வார்த்தைகள் தேடினேன்

பல்லாண்டு பல்லாண்டு

பல்லாயிரம் ஆண்டு வாழ்க

வாழ்த்தொன்று ஓடி வந்து 

உச்சந்தலையில் 

உட்கார்ந்து கொண்டது


இதற்கு மாற்றாக வேறு 

சொற்கள் எதுவுமே இல்லையா

முடிந்த மட்டும் மண்டையை 

உருட்டிப் பார்த்தேன்

வாழ்க வளமுடன்

அடிக்கடி கேட்டக் குரல் 

அனைவர் உள்ளங்களிலும்

குடிகொண்ட குரல்

உள்ளுக்குள் வந்து

ஒத்துக்கொள் என்றது 


வளமான மொழியான 

என் தாய்த் தமிழில்

வாழ்த்திட வார்த்தைக்குப் பஞ்சமா?

இருக்காது இருக்கவும் கூடாது

என் தலைச்சோற்றில்

கற்பனைக்குப் பஞ்சம்

விளைந்ததுதான் 

சொல்லில் கஞ்சம்

விஞ்சும் சொற்கள் கிடைக்காதா 

கொஞ்சமென மனம் கெஞ்ச 

கண்கள் மறுத்தன துஞ்ச


முட்டி மோதிப் பார்க்கையில்

மண்டைக்குள் ஒளிக்கீற்று

மின்னலாய் வந்துபோக 

புரட்டிடு புறநானூற்றை 

என்று மனமுரைக்க

ஒன்றுக்குப்  பத்தாய் வந்து

வாசித்துப் பார் என்று

வரிசைகட்டி நின்றன 

வாழ்த்துகள் 

   

ஞாயிறு போல வாழ்வாயாக

என்றொருவர்  வாழ்த்திப் போக

வானத்து விண்மீன்களுக்கு நடுவே 

விளங்கும் வெண்ணிலவாய்

விளங்கட்டும் உன் புகழ்  என

வார்த்தையால் தோரணம் கட்டி 

வாழ்த்துக என்றார்  

இன்னொரு புலவர்

 

விசும்பின் வீழ்த்துளியன்ன

 நாட்கள் வாழ்கவென 

வாழ்த்துக

பரிந்துரை வழங்கி என் 

பரிதாபம் தீர்த்தார்

பரிசில் வாங்கி திரும்பிய

பாசமிகுப் புலவர்


ப ஃறுழி ஆற்றுமணலினும

பன்நெடுங்காலம் வாழ்க

பாடி மகிழ் தருக

என்று நெட்டிமையார்

நீள் புருவம் உயர்த்தி 

நீட்டோலை வாசித்தளிக்க


நீலமணி மிடற்று ஒருவன் போல 

மன்னுக பெரும! என்ற

குரல் கேட்டு திரும்பிப் பார்க்க 

பொக்கைவாய்த் திறந்து

புன்னகைத்தாள் 

கூழுக்குப் பாடிய

கூனக்கிழவி 


அத்தனை வாழ்த்துக்களையும் 

மொத்தமாய் அள்ளி

கொத்தாய்ப் பாமாலையாக்கி

பூங்கொத்து கரம் சுமக்க

இனிய பிறந்தநாள் 

வாழ்த்துரைத்து மகிழ

வந்தேன்

வாழ்க பல்லாண்டு 

வாழ்த்த யாமுண்டு


👌 🌹 🙏 

அன்புடன் செல்வபாய் 


    















கருத்துகள்

Popular Posts