நிறைகுடம் நீர் தளும்பல் இல்

நிறைகுடம் நீர் தளும்பல் இல் 


பழமொழிகள் படித்தவர்க்கும் பாமரர்க்கும்

வழிகாட்டும் சான்றோர் பெருமக்களின்

அனுபவமொழிகள்.

உலக நடைமுறையை உள்ளதை உள்ளபடி

உணர்ந்த உண்மையை

நம் முன் வைத்து கவனமாக நடை பயிலுங்கள்

என்று அறிவுரை தந்து நிற்பவை.

வாழ்க்கைத் தத்துவங்களை 

ஒற்றை வரியில் உணர்த்திச்

செல்பவை.

ஒவ்வொரு பழமொழியும் ஒரு அருமையான வாழ்வியல் உண்மையைக் காட்சிப்படுத்திக் கடந்து  செல்லும்.

"பழமொழியில் உமி கிடையாது" என்பார்கள்.

எந்தப் பழமொழியும் பயனற்ற வெற்றுச் சொற்களால் புனையப்பட்டது அல்ல.

எல்லா சொல்லும் பொருள் குறித்தனவாகவே இருக்கும்.

"நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்

எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்

குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்

ஏது நுதலிய முதுமொழி என்ப "

என்று முதுமொழிக்கு இலக்கணம்

சொல்கிறது  தொல்காப்பியம்.

முதுமொழி கூர்மையும் நுட்பமான உலக

நடைமுறை உண்மையும் கொண்டதாக 

இருக்கும்.

சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்

பண்பு முதுமொழிக்கு உண்டு.

குறித்த பொருள் ஒன்றனையே வரையறுத்து உரைக்கும் தன்மை முதுமொழியின் சிறப்பு இதுதான் தொல்காப்பியம் சொல்ல வந்த கருத்து.

எப்போதுமே அறிவுடையவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. நடப்பதை உற்று நோக்கி அமைதியாக இருப்பர்.

பேசும் வாய்ப்பும் சூழலும் இருந்தாலொழிய

அதிகம் பேசமாட்டார்கள்.

"நிறைகுடம் தளும்பாது,

குறைகுடம் கூத்தாடும் "

என்றும்  ஒரு பழமொழி உண்டு.

இந்தப் பழமொழியைக் கொண்ட

பழமொழி நானூறு பாடல் உங்களுக்காக 

"கற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்

பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பர் - தெற்ற

அறைகல் அருவி அணிமலை நாட!

 நிறைகுடம் நீர் தளும்பல் இல்"

 

கற்றவர்களின் அடக்கத்தின் பின்னால்

மறைந்திருக்கும் ஆற்றல்கள் அரைகுறை

அறிவாளிகளுக்குப் புரியாது.

அவர்கள் தன்னைத்தானே புகழ்ந்து

பேசி, தான் ஒரு அறிவாளி என

எல்லோரையும் நம்ப வைக்க வேண்டும்

என்று நினைப்பர்.அதாவது இது குறைகுடம்

கூத்தாடுவது போன்றது.


ஆனால்,

நிறைய கற்றவர்கள் அதாவது மிகுந்த 

அறிவுடையவர்கள் அமைதியாக இருப்பர்.

எனக்கு இவ்வளவு தெரியும். நான்

இவற்றை எல்லாம் செய்திருக்கிறேன்

என்ற தற்பெருமை ஒருபோதும் இருக்காது.

நிறைகுடத்திலிருந்து  நீர்  வெளியில் சிந்துவது இல்லை.

அரைகுறை அறிவு அலட்டும்.

அறிவு  அடக்கமாக இருக்கும்.

 புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த

 சர் ஐசக் நியூட்டன்  இங்கிலாந்து 

 நாட்டின் உயரிய விருதான

 சர் பட்டம் பெற்ற பெருமைமிகு அறிவியலாளர் .

 அவருடைய கண்டுபிடிப்புகளைப்பற்றி

 யாராவது பெருமையாக கூறினால்,

  "கூழாங்கற்களையும் சிப்பிகளையும் 

எடுத்து அவற்றுள் எது சிறப்பானது 

என தேர்வு செய்யும் சாதாரண மனநிலையில்தான் 

நான் இப்போதும் உள்ளேன்.

உண்மை என்னும் பெருங்கடல் என்முன் 

விரிந்து கிடக்கிறது. 

இந்த உலகில் கண்டுபிடிக்கப்படாதவை 

எவ்வளவோ உள்ளன.

நான் கண்டுபிடித்ததைக் காட்டிலும் 

 கண்டுபிடிக்கப்பட வேண்டியவை

எண்ணிலடங்காதவை.

நான் கண்டுபிடித்தது

ஒரு சிறு துளிதான்" என்பார். 

எவ்வளவு தன்னடக்கம் பாருங்கள்.

அறிவாளிகளின் சிந்தனை இப்படித்தான் இருக்கும்.

 

உண்மையான திறமைக்கு

 விளம்பரம் தேவையில்லை.

சூரியன் “நான் ஒளி தருகிறேன்” என்று அறிவிப்பதில்லை;

உதித்ததும் உலகமே அதை உணர்கிறது.

அதுபோல உண்மையான திறமை கொண்ட மனிதர், “நான் திறமைசாலி” என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவரது செயல்களே அதற்குச் சான்றாக நிற்கும்.

"நம்  உயரத்தை  நாம் சொல்லத் தேவையில்லை; நம் செயல்களே நாம் யார் என்பதை  உலகத்திற்கு  அடையாளப்படுத்தும் ”

சாக்ரடீஸ் என்பவரிடம் “உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டபோது, 

“எனக்கு எதுவும் தெரியாது என்பதை நான் அறிவேன்” என்றார் .

உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் அறிவாளிகளின் வாயிலிருந்து வந்த வார்த்தை இது.

நிறைகுடம் நீர் தளும்பல் இல் என்பது இதுதானோ?

கருத்துகள்

Popular Posts