கொண்டானைக் கொல்லும் படை
கொண்டானைக் கொல்லும் படை
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...."
எனப் பாடல் எழுதி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் கண்ணதாசன்.
இந்தப் பாடலில் உண்மை இருக்கிறது.
99 விழுக்காடு பேருக்கு இந்தக் கருத்தில் உடன்பாடு உண்டு.
திருமணம் என்றால் பெருங்கனவுகள் இருக்கும். எதிர்பார்ப்பு இருக்கும்.
அதில் பெரும்பான்மையான எதிர்பார்ப்புகள் நிறைவேற்றுவதில்லை.
என்னவெல்லாமோ நினைத்தேன்.
ஏதோ ஒன்று வாய்த்து என் உயிரை எடுக்கிறது என்று பெரும்பாலான ஆண்கள் ஒரு புலம்பலோடுதான் வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருக்கின்றனர் என்று ஒரு கருத்துக் கணிப்பு சொல்கிறது.
மனைவி சரியாக அமையாவிட்டால் என்ன செய்ய முடியும்.? நீ வேண்டாம் என்று உடனே வெளியேறிவிட முடியாது.
வாழ்ந்துதான் ஆக வேண்டும். ஆனால் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?
குடும்பம் தடுமாறும் .
நிம்மதி போகும்.
வராத நோயெல்லாம் வந்து குடியேறிவிடும்.
வீட்டில் சமைக்காமல் கடையிலேயே
வாங்கித் தின்று நாளையும் பொழுதையும்
கழிக்கும் காலம்.
ஏட்டிக்குப் போட்டி பேசி மல்லுக்கட்டி
நிற்கும் பெண்கள் அதிகமாகி வரும்
காலம்.
பெண்ணுரிமை ...பெண்ணுரிமை என்று
சொல்லி உரிமை எது ? கடமை எது
என்பதுகூட பல நேரங்களில் புரியாமல்
போய்விடுகிறது.
இவர்களை எல்லாம் பார்த்த ஒரு புலவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.
அதனை ஒரு பாடலாக எழுதி வைத்துவிட்டு அவர்பாட்டுக்குப் போய்விட்டார்.
கீழே உள்ள பாடலைப் படியுங்கள்.
"எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம் சிறுகாலை
அட்டில் புகாதால் அரும்பிணி - அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ் பேய்; இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை "
என்கிறது நாலடியார்.
கணவன் ஒன்று சொல்ல மனைவி எதிர்த்துப் பேசி
அடித்துப் பார் என்று மல்லுக்கட்டிக்கொண்டு
நின்றால் அவள் எமனுக்கு ஒப்பானவள்.
காலையில் சமையலறைக்குள் சென்று
உணவு சமைக்காது சோம்பலாக
படுக்கையில் இருக்கும் பெண்
கணவனைக் கொல்லாமல் கொல்லும்
நோய்.
சமைத்த உணவை எடுத்துப் பரிமாறாது வேண்டுமென்றால் எடுத்துத் தின்கட்டும் என்று அலட்சியமாக இருக்கும் பெண்
பிசாசு .
ஏறுக்குமாறாக பேசுவதும்
சமைக்கச் சோம்பேறித்தனமாக இருப்பதும் சமைத்துப் சாப்பாட்டை எடுத்துப் பரிமாறாததும் ஒரு பெண்ணுக்கான
நற்பண்புகள் அல்ல.
எதிர்த்துப் பேசி சதா சண்டையிடும்
பெண்ணால் நிம்மதி போய்விடும்.
நிம்மதி இல்லை என்றால்
நெடுநாள் உயிர் வாழ முடியாது.
அதனால்தான் வந்துபார் என்று
எதிர்த்து நிற்கும் பெண்களைக்
கூற்றம் என்கிறார்.
காலை உணவு எடுத்துக் கொள்வது
மிகவும் இன்றியமையாதது.
காலை உணவு சமைக்காதிருந்தால்
எதை உண்ண முடியும்.?
பட்டினியாய்க் கிடந்தால் நோய்தான் வந்து
சேரும்.
அதனால் தான் அதிகாலை சமையலறைக்குள்
சென்று உணவு சமைத்துக் கொடுக்காத பெண்கள்
கணவனுக்கு நோய்தான் வந்து
சேரும் என்கிறார்.
மூன்றாவதாக சமைத்த உணவை
எடுத்து வைத்து அன்பாக உண்ணத் தராதவள் எப்படி பெண்ணாக இருக்க முடியும்?
அவளைப் பேயன்றி வேறென்ன சொல்வது?
கூற்றுவனோடும்
பிணியோடும்
பேயோடும்
குடித்தனம் நடத்தக் கூடுமோ?
அதனால்தான் அவள் கொண்டானைக் கொல்லும் படை என்கிறார் நாலடியார்.
கணவனைக் கொல்லும் படையாக
சொல்லப்பட்ட செய்தி நமக்குப்
பொருந்தவில்லையல்லவா!
அது போதும். அந்த மூன்றையும்
இல்லத்தில் அண்ட விட்டுவிடாதீர்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக