மனங்களை வெல்லுங்கள்
மனங்களை வெல்லுங்கள்
வெற்றி என்பது எத்தனை பேரை நாம் வென்றோம் என்பதில் இல்லை; எத்தனை பேருடைய இதயங்களில் அன்புக்குரியவர்களாக வாழ்கிறோம் என்பதில்தான் இருக்கிறது!
வாழ்க்கை என்பது வெற்றி பெறுவதில் மட்டுமல்ல; பெற்ற வெற்றியின் வழியாகப் பிறரது மனங்களில் அன்பின் தடங்களைப் பதிப்பதுதான் உண்மையான வெற்றி
பணிவான பேச்சு:
சாதனைகளால் உலகத்தின் கவனத்தை ஈர்க்கலாம்; செல்வத்தால் பலரது மதிப்பைப் பெறலாம்; அதிகாரத்தால் பலரை நம் வழியில் நடக்கச் செய்யலாம். ஆனால், ஒருவரது மனத்தில் நிரந்தரமான இடத்தைப் பிடிக்க வேண்டுமானால், பணிவு வேண்டும். உங்கள் பேச்சில் இருக்கும் பணிவும் கனிவும் உங்களுக்கு பிறரின் உள்ளங்களில் நிரந்தர குடியுரிமை
வாங்கித் தந்துவிடும்.
மனங்களை வெல்வது என்றால் என்ன?
மனங்களை வெல்வது என்பது அனைவரையும் நமக்குப் பிடித்தமானவர்களாக மாற்றுவதோ, அனைவரும் நம்மைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ அல்ல. மாறாக, நம்முடன் பழகும் மனிதர்களை மனிதர்களாக மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும் .அவர்கள் உணர்வுகளை மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
நம் உணர்வுகளை மதிக்கிறார்கள் என்ற நம்பிக்கையைப் பெற்று விட்டாலே அவர்கள் மனங்களை நாம் வென்று விட்டவர்கள் ஆகிவிடுவோம்.
பேசும்போது கேளுங்கள்:
ஒருவர் பேசும்போது குறுக்கிடாமல் அவர் சொல்வதை முழுமையாக கேட்கும் நற்பண்பு வேண்டும். அந்தப் பண்பு நம் உணர்வுகளை எதிரில் இருப்பவர் மதிக்கிறார் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும். பேசும் ஆயிரம் வார்த்தைகளால் ஏற்படாத மாற்றத்தை, அன்புடன் கேட்கும் பண்பும் அவரை நாம் பார்க்கும் பார்வையும் ஏற்படுத்தும்.
வார்த்தைகள் காதுகளைச் சென்றடைகின்றன; ஆனால் அன்பு மட்டுமே இதயத்தைச் சென்றடைகிறது!.
இதயத்தோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. எனவே அடுத்தவர் பேச்சுக்கு மதிப்பளித்துக் கேளுங்கள்.
தன்னம்பிக்கை அளியுங்கள்:
திருவள்ளுவர்,
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.”
என்று அன்பின் உயர்வை எடுத்துரைக்கிறார்.
அன்பு கொண்டவர்கள் தங்களுக்காக மட்டுமே வாழ்வதில்லை; பிறருக்காகவும் வாழ்கிறார்கள் என்பதே இக்குறளின் ஆழமான பொருள். நான் உனக்காக இருக்கிறேன் என்ற என்ற தன்னம்பிக்கை கொடுப்பதாக நமது செயல்கள் இருக்க வேண்டும்.
அன்பு என்பது இனிமையாகப் பேசுவதில் மட்டுமே இல்லை. பிறர் துயரப்படும்போது துணையாக நிற்பதில் இருக்கிறது; அவர்கள் தவறு செய்யும்போது திருத்துவதில் இருக்கிறது; வெற்றி பெறும்போது பொறாமைப்படாமல் மகிழ்வதில் இருக்கிறது; தோல்வியடையும்போது தன்னம்பிக்கை அளிப்பதில் இருக்கிறது. நான் இருக்கிறேன் என்ற தன்னம்பிக்கையைக் கொடுத்துவிட்டால் நாம் அவர்கள் உள்ளத்தை வென்றவர்கள் ஆகிவிடுவோம்.
புரிந்து கொள்ளுங்கள்:
உள்ளங்களைக் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் சூழல்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவர் இடத்திலிருந்து அவர்கள் செய்யும் செயலை ஆராய்ந்து பாருங்கள். குற்றப்படுத்துவது எளிது.
குற்றத்தில் உண்மை இல்லை என்பது அறிய வரும்போது வருந்தி பயனில்லை.
புரிதல் வந்தால் மட்டுமே மனங்களோடு பேச்சு வார்த்தை நடத்த முடியும்.
கேட்பது மரியாதை; புரிந்துகொள்வது அன்பு; ஏற்றுக்கொள்வது பெருந்தன்மை.
ஒருவருடைய கருத்து நமக்கு மாறுபட்டதாக இருக்கலாம். அதற்காக அவரைத் தவறானவர் என்று முத்திரை குத்தி ஒதுக்க வேண்டியதில்லை. ஒருவருடைய கருத்தை ஏற்காமல் இருப்பதற்கும், அவரை அவமதிப்பதற்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.அந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்பவர்களால் மட்டுமே மனிதர்களின் மனங்களை வெல்ல முடியும்.
சிறிய செயல்கள்; பெரிய தாக்கங்கள்:
நாம் செய்யும் சிறிய செயல் அவர்கள் உள்ளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரு புன்னகை, அன்பான விசாரிப்பு, நன்றியுணர்வுடன் கூறும் ஒரு சொல், உதவி தேவைப்படும் நேரத்தில் நீட்டப்படும் ஒரு கை — இவை அனைத்தும் பார்ப்பதற்குச் சிறிய செயல்களாகத் தோன்றலாம். ஆனால், அவற்றின் தாக்கம் ஒருவருடைய மனத்தில் நீண்ட காலம் நிலைத்திருக்கும்.எனவே, மனிதர்களை இணைப்பது ஒரே கூரையின்கீழ் வாழ்வது மட்டுமல்ல; ஒரே அன்பின் கீழ் மனம் விட்டுப் பழகுவதும் சின்னச் சின்ன செயல்களால் அவர்களை நம்புங்கள் ஈர்ப்பதாகும்.
உள்ளங்களோடு உறவாடுங்கள்:
செல்வமும் பதவியும் அதிகாரமும் நம்முடன் வரப்போவதில்லை. ஆனால், நாம் பிறருக்குக் காட்டிய அன்பும் செய்த நன்மைகளும் அவர்களுடைய நினைவுகளில் வாழும். நம்முடைய பெயரை மறந்துவிடலாம்; ஆனால், நம்மால் கிடைத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் பலர் மறக்க மாட்டார்கள்.
பிறரை வெல்வதற்காக வாழாதீர்கள்; பிறருடைய மனங்களில் அன்பை விதைப்பதற்காக வாழுங்கள். உங்களால் யாருடைய மனமும் தேவையின்றிப் புண்படாமல் இருக்கட்டும் என்று எண்ணுங்கள்.
வாழ்க்கையின் இறுதியில், “நான் எத்தனை பேரைத் தோற்கடித்தேன்?” என்று கேட்பதைவிட, “எத்தனை பேருடைய வாழ்வில் அன்பான நினைவாக வாழ்ந்தேன்?” என்று கேட்டுப் பாருங்கள். அந்தக் கேள்விக்குக் கிடைக்கும் பதில்தான் உங்கள் வாழ்க்கையின் உண்மையான வெற்றியைத் தீர்மானிக்கும்!
முடிவுரை:
உலகை வெல்வது சாதனை; மனிதர்களின் நம்பிக்கையை வெல்வது பெருமை; அவர்களின் மனங்களில் அன்பான நினைவாக வாழ்வதுதான் வாழ்க்கையின் மகத்தான வெற்றி! வாழ்ந்து பாருங்கள்!
உலகம் உங்களை வாழ்த்தும்.
கருத்துகள்
கருத்துரையிடுக