விழுந்த இடத்தில் விதையாக மாறு
விழுந்த இடத்தில் விதையாக மாறு
வீழ்ச்சி என்பது முடிவல்ல; எழுச்சிக்கான தொடக்கம்!
“ஒரு விதை மண்ணுக்குள் புதைக்கப்படும்போது, அது தன் முடிவைச் சந்திப்பதில்லை; ஒரு புதிய வாழ்க்கைக்கான தொடக்கத்தைச் சந்திக்கிறது!” என்பார்கள்.
வாழ்க்கையும் அப்படித்தான். சில நேரங்களில் நாம் சந்திக்கும் தோல்விகள் நம்மை முடக்குவதற்காக வருவதில்லை. நமக்குள் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணர்வதற்காக வருவதாக இருக்கலாம்.விழுந்துவிட்டோமே என்று வருந்தாதே.விழுந்த இடத்திலேயே விதையாக மாறு.உன் வளர்ச்சியை இந்த உலகம் வியந்து பார்க்கட்டும்.
எழுந்து ஓடு
"ஒருபோதும் விழாமல் இருப்பதில் பெருமை இல்லை; ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும் மீண்டும் எழுவதில்தான் உண்மையான பெருமை இருக்கிறது."
என்பார் ஆலிவர் கோல்ட்ஸ்மித்.
வெற்றியாளர்கள் தோல்வியைச் சந்திக்காதவர்கள் அல்ல; தோற்றுவிட்டோமே என்று அந்த இடத்திலேயே நின்று போகாமல் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவர்கள்...விதை ஒரே நாளில் மரமாவதில்லை; அதுபோலச் சாதனையும் ஒரே நாளில் உருவாவதில்லை. ஒவ்வொரு நாளும் நீ செய்யும் சிறிய முயற்சிகள்தான் நாளை உன் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை நிகழ்த்தப் போகின்றன.
விதை சொல்லித் தரும் பாடம்:
ஒரு சிறிய விதையைப் பாருங்கள். அது மண்ணுக்குள் புதைந்து கிடக்கிறது.. இருளைச் சந்திக்கிறது. மண்ணின் அழுத்தத்தைத் தாங்கிக்கொள்கிறது.ஆனாலும் தன் வளர்ச்சியை அது ஒரு போதும் நிறுத்திவிடுவதில்லை.
மண்ணைக் கிழித்துக்கொண்டு முளையாக வெளியே வருகிறது. நாளடைவில் செடியாக வளர்ந்து பெரிய மரமாக நம்மை அண்ணாந்து பார்க்க வைக்கிறது.. அனைவரும் விரும்பும் பலனைத் தந்தது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
விதையின் வளர்ச்சி நமக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடம் ஒன்றுதான்: சூழ்நிலைகள் உன்னை அழுத்தலாம்.முடக்கிப் போட நினைக்கலாம் .ஆனால் உன் வளர்ச்சியைத் தீர்மானிப்பது உனக்குள் இருக்கும் மன உறுதி மட்டுமே!
மலர் விழுந்தால் சருகாகும். விதை விழுந்தால் மரமாகும்.
மலராக விழ வேண்டுமா?விதையாக விழ வேண்டுமா? நீயே முடிவு செய்து கொள்.
முயற்சியைக் கைவிடாதே:
வாழ்க்கையில் தோல்வி வரலாம். முயற்சிகள் பலனளிக்காமல் போகலாம். நம்பியவர்கள் விலகலாம். எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவிப் போகலாம். அப்போது, “என்னால் முடியாது” என்று உனக்கு நீயே முடிவுரை எழுதி வைத்து ஒதுங்கி விடாதே.ஒரு விதை ஒரே நாளில் மரமாவதில்லை; அதுபோலச் சாதனையும் ஒரே நாளில் உருவாவதில்லை. ஒவ்வொரு நாளும் நீ செய்யும் சிறிய முயற்சிகள்தான் நாளை உன் வாழ்க்கையின் மிகப்பெரிய மாற்றமாக அமையப் போகிறது.
தன்னம்பிக்கையோடு காத்திரு:
மூங்கில் விதை முளைப்பதற்கு சிறிது காலம் ஆகும் அதுபோல சில வளர்ச்சிகளுக்கு உரிய காலம் தேவைப்படுகிறது. உடனடியாகப் பலன் கிடைக்கவில்லை என்பதற்காக ஒருநாளும் உனக்கு வளர்ச்சியே இருக்காது என்று நம்பிக்கை இழந்து போகாதே.முயற்சி வீணாகிவிட்டது என்று சோர்ந்துவிட வேண்டாம். உழைக்க பலம் இருக்கிறது.கற்றுக்கொள்ள ஆர்வம் இருக்கிறது.உன்னை நீ மெருகேற்றறிக்கொண்டே இரு. உனக்கான நேரம் வரும்போது, நீ கடந்து வந்த பாதையே உன் வலிமைக்குச் சான்றாக வந்து நிற்கும்.
மண்ணுக்குள் புதைக்கப்பட்ட விதை, மண்ணையே தன் கல்லறையாக நினைத்திருந்தால், உலகுக்குத் தேவையான மரமாக அது ஒருபோதும் வளர்ந்திருக்காது. அதுபோல, தோல்வியையே முடிவாக நினைத்தால் உனக்குள் இருக்கும் திறமைகள் வெளிவருவதற்கான வாய்ப்பை நீயே இழந்துவிடுவாய்.
உலகம் உனக்காக நிற்காது. நீ தான் விழுந்த இடத்திலிருந்து எழ வேண்டும்.
உன்னை நீயே குறைத்து மதிப்பிடாதே. தளர்ந்து போகாதே.தன்னம்பிக்கையோடு காத்திரு .
முடிவுரை
வாழ்க்கை உன்னை வீழ்த்தும்போது, அந்த வீழ்ச்சியை உன் வளர்ச்சிக்கான உரமாக மாற்று. கண்ணீரைத் தன்னம்பிக்கையாகவும் ஏமாற்றத்தைக் கற்றலாகவும், தடைகளைப் புதிய பாதைகளாகவும் மாற்றிக்கொள்.நீ விழுந்த இடம் உன் தோல்வியின் அடையாளமாக இருக்கக்கூடாது . அது உன் எழுச்சியின் அடையாளமாக இருக்கட்டும்!
வெட்டப்பட்டால், மீண்டும் துளிர். நீ எரிக்கப்பட்டால், சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை போல எழுந்து வா.
விழுந்த இடத்தில் விதையாக மாறு!
கருத்துகள்
கருத்துரையிடுக