பேனா உன் கையில்

பேனா உன் கையில்


நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு புத்தகம் .  அந்தப் புத்தகத்தை அழகாக எழுதுவதும் வெறுமனே வெற்றுத்தாள்களாக வைப்பதும் நம் கையில்தான் இருக்கிறது. புத்தகம் 

ஒரே நாளில் எழுதப்படுவதில்லை. நாளும் நல்லதொரு சொல்லெடுத்து அழகாக முடித்து வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பேனா உன் கையில் 

உன் வாழ்க்கையை எழுதுவதற்கான பேனா  உன் கையில் தான் இருக்கிறது. உன்னைச் சுற்றி உள்ளவர்கள் ஆயிரம்  அறிவுரைகள் சொல்லலாம். அப்படிச் செய்யலாம் இப்படிச் செய்யலாம் என்று ஆளுக்கொரு திசையில் நின்று அங்கேயும் இங்கேயும் திசை திருப்ப முயற்சி செய்யலாம். ஆனால் எழுத வேண்டியது நீ மட்டும் தான். இது உனக்கான வாழ்க்கை.

யார் என்ன சொன்னாலும் எடுக்கும் முடிவு உனதாகவே இருக்க வேண்டும்.

அதுத்தான் உன் புத்தகத்தில் எழுதப்பட வேண்டும். காலையில்  எழுப்பும் நேரத்தில் இருந்தே உன் கதை தொடங்குகிறது.


அடுத்தவன் கதையை எழுதாதே

அடுத்தவன் கதையை உன் புத்தகத்தில் எழுத முற்படாதே.

நமக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளுள் ஒன்று  என்ன தெரியுமா? நாம் நம் கதையை எழுதுவதை விட்டுவிட்டு அங்கேயும் இங்கேயும் எட்டிப்பார்த்து அடுத்தவன் கதையைத் திருடி வெட்டி ஒட்டி அழகுபடுத்திப் பார்க்க நினைத்து விடுவோம் .அவன் கார் வாங்கிவிட்டான், இவன் வெளிநாடு போய்விட்டாள் .

எல்லோரும் நிறைய சம்பாதிக்கிறார்கள் என்று அடுத்தவர்களையே பார்த்துக்கொண்டு  நம் பேனாவை கீழே வைத்து நமக்கான கதையின் சில பக்கங்களை எழுதாமலே விட்டுவிடுகிறோம்.

நம் முதல் அத்தியாயத்தை அடுத்தவனின் கடைசி அத்தியாயத்தோடு ஒப்பிடக்கூடாது. 

 பிழையாக எழுதிவிட்டால் என்ன செய்வது?

தவறு ஏற்படுவது மனித இயல்பு.

தவறாக எழுதிவிட்டால் திருத்தி எழுதத் தயங்கக் கூடாது.வாழ்க்கையில் தவறு செய்யாத மனிதனே இல்லை. ஒரு பக்கம் தவறுதலாக எழுதப்பட்டதற்காக  மொத்த புத்தகத்தையும் தூக்கி எறிய முடியுமா?

சில பக்கங்களில் அடித்தல் திருத்தல் இருக்கலாம்.அதற்காக மொத்த பக்கத்தையும் கிழித்துத் தூர வீச வேண்டியதில்லை. அடுத்தப் பக்கம் நல்லதாக  எழுதப்பட வேண்டும் என்று

மெனக்கெட  வேண்டும்.

 கதையை  ஐந்து கோணத்திலிருந்து  பார்த்துப் பார்த்து எழுதினால்  கதை சிறப்பாக அமையும் என்று நினைக்கிறேன்.


முதலாவது உங்கள் கதையில்  வில்லன் நீங்கள் தான் .சோம்பேறித்தனம், பயம், நாளை பார்க்கலாம் என்பது தான் உன்னை தோற்கடிக்கும் வில்லன். ஹீரோவும் நீயே, வில்லனும் நீயே. யார் ஜெயிக்கணும் என்பதை  நீங்கள்தான் முடிவு பண்ண வேண்டும்.


இரண்டாவதாக உங்கள் கதையில் எடிட்டரும் நீங்கள் தான்.. உங்கள் வாழ்க்கையில் இருந்து தேவையில்லாத நபர்களை, பழக்கங்களை, தீய எண்ணங்களை அடித்து விட்டால் கதை சிறப்பாக அமையும்.நம் கதை நல்லதாக அமைய எடிட்டிங் மிகமிக அவசியமான ஒன்று.


மூன்றாவதாக நம் செயல் தான் பேனாவின் மையாக இருக்க வேண்டும்.சிலர் கதை எழுத நினைக்கிறார்கள், ஏதேதோ கற்பனை செய்கிறார்கள்.கனவு மட்டும் காண்கிறார்கள்.செயலிருக்காது. உங்கள் ஒவ்வொரு செயலும் உங்கள் கதையின் ஒவ்வொரு வார்த்தையாக இருக்க வேண்டும்.. நீங்கள் செய்யும் செயல்களால் உங்கள் கதையின் ஒவ்வொரு  பத்தியும்  செதுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.


நான்காவதாக உங்கள் கையில் இருக்கும் பேனாவைப் பிடுங்க பல முயற்சிகள் நடைபெறும். அக்கம்பக்கம் உறவுகள் நண்பர்கள் அனைவரும் அப்படிச் செய் இப்படிச் செய் என்று திசை திரும்பி மாற்றி எழுத வைக்க முனையலாம் .அவர்கள் சொல்வதற்காக உங்கள் கதையின் போக்கை மாற்றி எழுதிவிடக்கூடாது.

அப்படி எழுதிவிட்டால் உங்கள் கதை கடைசிவரை புரியாமலே போய்விடும்.


ஐந்தாவதாக உங்கள் கதையின் முடிவு எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.நீங்கள் நினைத்ததை எழுதாமல் இன்னொருவர் 

உங்கள் கதைக்கு கிளைமாக்ஸ் எழுதி முடித்து வைத்தால் கதை எப்படி சரியாக இருக்கும்.அதனால் நமது கதை நம்மால் தான் எழுதி முடிக்கப்பட வேண்டும் . இதில் அடுத்தவர்கள் தலையீடு இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

இந்த ஐந்தையும் உறுதியாக கடைபிடித்து எழுதப்படும் நமது கதைக்கு நாம்தான் ஹீரோ. 


உங்கள் வாழ்க்கைக் கதையின் ஆசிரியர் நீங்கள்.
உன் எழுதிக்கொண்டிருக்கும் கதையின்  கதாநாயகனும் நீங்கள்தான் .

பேனா உங்கள் கையில் .

உங்கள் கதையின் ஒவ்வொரு பக்கத்தையும்  நீங்களே எழுதுங்கள் 

வாழ்க்கை என்னும் புத்தகம் சிறப்பாக அமைவது உன் கையில்தான் இருக்கிறது.


 



கருத்துகள்

Popular Posts