சாதிப்பவன் ஆத்திரப்படுவதில்லை

சாதிப்பவன் ஆத்திரப்படுவதில்லை


"நேரமும் பொறுமையுமே போராளிகளின் பலம் "

என்றார் டால்ஸ்டாய்.

உங்கள் திறமையை வெற்றியாக 

மாற்றிக் கொடுக்க உதவுவது உங்கள்

பொறுமை மட்டுமே..

பொறுமை கடலினும் பெரிது.

நாம் விரும்பியவற்றை அடைய 
பொறுமையோடு காத்திருக்க வேண்டும்..

பொறுமையாக உழைப்பைக் கொடுத்துக்

கொண்டே இருக்க வேண்டும்.

பொறுமை உடையவன் என்ன சாதிக்க வேண்டும்

என்று நினைக்கிறானோ அதை சாதிக்காமல் ஓயமாட்டான்.

ஒரு வெற்றியை நோக்கிப் பயணிக்கும்போது

இடையில் பல இடையூறுகள் வரலாம்.

நதிபோல நாம் எல்லாத் தடைகளையும்

தாண்டி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்போதுதான் நாம் போய்ச் சேர வேண்டும்

என்று நிர்ணயித்து வைத்துள்ள

இலக்கை அடைய முடியும்.

பொறுமையும் காத்திருப்பும் 

உழைப்பவரோடு கூட்டு சேர்ந்து கொண்டால் 

வெற்றியை எவராலும் தடுத்து 

நிறுத்திவிட முடியாது.


பொறுமைக்கு நல்ல எடுத்துக்காட்டாக

சீனாவில் வளரும் ஒருவகையான மூங்கில் செடியைக் கூறுவர்.

சீன மூங்கில் செடியானது 

நட்டதுமே விறுவிறுவென்று

வளர்ந்துவிடாது.

என்னதான் உரம் போட்டுத் தண்ணீர் ஊற்றி

வளர்த்தாலும் வளர்வேனா என்று

அடம் பிடிப்பதுபோல அப்படியே வளராமல் நிற்கும்.

நான்கு ஆண்டுகள் செடியில் பெருமளவிலான 

எந்தவித  வளர்ச்சியும் தென்படாது.

ஆனால் நம் கண்ணுக்குத் தெரியாமல்

பூமிக்கு அடியில் தன் வேர்களைப் பரப்பி 

அது தன்னை உறுதிப் படுத்திக் கொண்டே இருக்கும்.

இப்படி நான்கு ஆண்டுகள் பொறுமை

 காத்து நின்ற செடியானது

அடுத்த ஒரே ஆண்டில் கடந்த ஆண்டு நாம்

பார்த்த மூங்கிலா இது என ஆச்சரியப்படும்

விதத்தில் சடசடவென 

அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கும்.

இது எப்படி சாத்தியமாயிற்று? என நம்மைத்

தலை நிமிர்ந்துப் பார்க்க வைக்கும். 

சாதாரண உயரமல்ல.

எண்பது அடிவரை உயர்ந்து நிற்கும்.

ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒரு மாறுபட்டத்

தகவமைப்பும் தன்மையும் கொண்டிருக்கும்.

இது இயற்கை அவற்றிற்குக் கொடுத்தக்

கொடையாகக் கூட இருக்கலாம்.


இந்த மூங்கிலுக்கும் இயற்கையாகவே

சில தன்மைகள்  உள்ளன.

முதல் நான்கு ஆண்டுகள் பொறுமையாக

தன்னைநிலைப்படுத்திக் கொள்கிறது .

இனி எவ்வளவு உயர்ந்தாலும் தன்னால் தலை நிமிர்ந்து

நிற்க முடியும்.புயலோ பெருங்காற்றோ தன்னைப்

புரட்டிப் போட்டுவிட முடியாது .

அந்த நம்பிக்கையில் தனது வளர்ச்சியைஉருவாக்குகிறது.

இந்தப் பொறுமை நம்மை மூங்கிலை நோக்கி

அனைவர் கண்களையும் ஈர்க்கிறது.

கீரை ஒரு மாதம்

நெல்  மூன்று மாதம்.

கரும்பு மூன்று வருடம்

சவுக்கு ஆறு வருடம்

தேக்கு பதினெட்டு வருடம்

என்று காத்திருக்க காத்திருக்க அந்தப் பொருளின் மதிப்பு கூடிக் கொண்டே இருக்கும்.

பொறுமையும் நிதானமும் எவ்வளவு 

உயரம் வரையும் கொண்டு செல்லும்.

"ஆக்கப் பொறுத்தவன் ஆறப்

பொறுக்க வேண்டும்."

பொறுமையோடு கனிவும் சேர்ந்து கொண்டால் கனியாததையும 

கனிய வைக்க முடியும்.

பணியாததையும் பணிய வைக்க முடியும்.

 ஒருமுறை ஒரு பெரியவரைப்பார்த்து

 ஒரு மூர்க்கன் தாறுமாறாகத்

 திட்டிவிட்டான்.

 அதற்கு அந்தப் பெரியவர் எந்தவித 

 சலனமுமில்லாமல் சிரித்துக் கொண்டே இருந்தார்.

 " நான் இவ்வளவு திட்டியும்

 நீங்கள் சிரித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.

  உங்களுக்கு  சூடு சொரணையே இல்லையா?  "

 என்றான் மூர்க்கன்.

  அதற்கும் அந்தப் பெரியவர் சிரித்துக்

 கொண்டார்.

 இப்போது இந்த மனிதரிடம் பேசிப் பயனில்லை

 என்பதுபோல வந்த வழியே 

 திரும்பிச் செல்லத் தொடங்கினான் .

  தம்பி ! அன்பாக அழைத்தார் பெரியவர்.

 திரும்பிப் பார்த்தான் மூர்க்கன்.

 " நீ கொண்டு வந்த பொருளை 

 விட்டுவிட்டுச் செல்கிறாயே...

 உன் பொருளை நீயே எடுத்துச்

 செல் "என்றார் பெரியவர்.

 " எனக்கு உரிய பொருளா ...

 அங்கேயும் இங்கேயும் திரும்பிப் பார்த்துவிட்டு

 நான் ஒன்றுமே கொண்டு வரவில்லையே" என்றான்

 " நீ கொடுத்த சொற்கள் எதையுமே நான் எடுத்துக்

 கொள்ளவில்லை. நீ கொட்டியவற்றை

 நான் எடுத்துக் கொள்ளவில்லை என்றால்

 அவை உனக்குரியதாகத்தானே இருக்கும்."

 என்றார் பெரியவர் நிதானமாக.

 கலவரத்தோடு பெரியவரின் முகத்தைப்

பார்த்தான்.

பெரியவர் சொன்னதில் உள்ள 

 அர்த்தம் புரிய ஆரம்பித்தது.

  அவமானத்தால் முகம் அப்படியே 

 சுண்டிப் போயிற்று.

 அப்படியே பெரியவர் காலில்

 விழுந்து மன்னிப்பு  கேட்டுக் கொண்டான்.

 இதுதான் பொறுமைக்குக் கிடைத்த வெற்றி.

உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் 

மிகப்பெரிய மந்திரம் பொறுமை என்ற ஒற்றை வரிக்கும் புதைந்து கிடக்கிறது..

காலத்திற்கும்  மக்காப் புகழ் வேண்டுமா? யாரையும் தண்டிக்காதே.. பொறுமையாக கடந்து செல்

"ஒறுத்தாருக்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழ் "

என்றார் வள்ளுவர்.

அப்படி எதற்குப் பொறுத்துப் போக வேண்டும்

என்பவர்களுக்கு திருவள்ளுவர் 

குறள்தான் பதில்.

பொறுமையால் மட்டுமே நிலைத்தப்

புகழைப் பெற்றுவிட முடியும். என்பதுதான்.

பொறுமை இல்லாதிருந்தால் வெற்றிக்கு

அருகில் வந்தும் தமது இலக்கை 

அடைய முடியாமல் போய்விடும் சூழல்

ஏற்பட்டுவிடும் 

இன்னும் எவ்வளவு நாள் காத்திருப்பது? 

என்ற சலிப்பு  நம்மைச் சோர்வடையச் செய்யும்.பின்வாங்க வைக்கும்.

ஆத்திரமாக ஏதேதோ பேசி வைக்கும்.


மரத்தை நட்டுவிட்டு மறுநாளே 

கனியை எதிர்பார்க்க முடியுமா ? 

கனி வரும் வரை காத்திருக்க வேண்டுமல்லவா!

"பொறுமையை இழப்பது என்பது

போரில் தோற்றதற்கு ஒப்பானது"

என்பார் காந்தியடிகள்.

போரில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் பொறுமை இழந்தால் தோற்றுப் போவோம்.

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

வலிமையும் உணர்ச்சியும் சாதித்ததைவிட

பொறுமையும் நிதானமும் சாதித்தவைதான் அதிகம்.

சாதிப்பவன் ஆத்திரப்படுதில்லை..

ஆத்திரப்படுபவன் சாதித்ததில்லை.




கருத்துகள்

Popular Posts