சமூக ஊடகங்களால் நாம் இழந்தவை
சமூக ஊடகங்களால் நாம் இழந்தவை
இன்றைய உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அடுத்த நொடியே அறிந்துகொள்கிறோம். தொலைவில் இருப்பவர்களையும் நொடிப்பொழுதில் தொடர்புகொள்கிறோம். இத்தனை வசதிகளைத் தந்த சமூக ஊடகங்கள், நம்மிடமிருந்து சில அரிய பொக்கிஷங்களையும் மெல்ல மெல்லப் தட்டிப் பறித்துக்கொண்டிருக்கின்றன.
1.நேரம்:
முதலாவது சமூக ஊடகங்களால் நாம்
இழந்தது நம் பொன்னான நேரம்.
நம்மை அறியாமலேயே நம் நேரம் சமூக ஊடகங்களால் கொஞ்சம் கொஞ்சமாக களவாடப்படுகிறது. களவுபோனபொருள் என்ன என்றுகூடத் தெரியாமல் நாம் மணிக்கணக்காக சமூக ஊடகங்களில்
மூழ்கிக் கிடக்கிறோம்.
“காலம் பொன்னானது” . ஆனால், இன்று அந்தப் பொன்னான நேரத்தின் பெரும்பகுதி கைப்பேசித் திரைகளில் கரைந்து கொண்டிருக்கிறது.ஒரு செய்தியைப் பார்ப்பதற்காகத் திறக்கும் கைப்பேசி, பல மணி நேரங்களை விழுங்கிவிடுகிறது. செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் தள்ளிப்போகின்றன; நிறைவேற்ற வேண்டிய கனவுகள் நிறைவேறாமலே அப்படியே போய்விடுகின்றன.
.2. உறவு
இரண்டாவதாக உறவுகளின் நெருக்கத்தை சமூக ஊடகங்கள் இழக்க வைக்கின்றன.
ஒரே வீட்டில் இருப்பவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதை தவிர்த்து வருகிறோம் .தொலைவில் இருப்பவர்களுடன் சமூக ஊடகங்களில் உரையாடுவதற்கே அதிக நேரத்தைச் செலவிடுகிறோம்.அருகில் இருப்பவர்களின் முகத்தைப் பார்ப்பதைவிட, திரையில் வரும் முகங்களைப் பார்ப்பதற்கு அதிக ஆர்வம் காட்டுகிறோம்.. அதனால் உறவுகளோடு கொண்ட தொடர்புகள் அறுந்து போகின்றன.ஊடகங்களில் இருக்கும் நண்பர்களோடு பேச காட்டும் ஆர்வத்தை பக்கத்தில் இருக்கும் உடன்பிறப்புகளோடு
பேச முனைப்பு காட்டுவதில்லை.
3. மன அமைதி:
மூன்றாவதாக நிறைய நேரம் சமூக ஊடகங்களில் மூழ்கி இருப்பதால் மன அமைதி இழந்தவர்கள் போல ஆகிவிடுகிறோம். சமூக ஊடகங்களில் வரும் நண்பர்களோடு நம்மையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கி விடுகிறோம் .நம்மைப் பற்றிய ஒரு போலியான பிம்பத்தைக் கட்டமைக்கப் பார்க்கிறோம். நம்மிடம் இல்லாதவற்றை நினைத்து வருந்தத் தொடங்குகிறோம்.அவர்களைப் போன்று நாம் இல்லையே என்ற ஏக்கம் நம்மமை நிம்மதி இழக்க வைக்கிறது அதனால் எப்போது்ம் எதையோ இழந்தது போன்ற ஒரு மனநிலைக்குத் தள்ளப்படுகிறோம்.நம்முடைய மகிழ்ச்சியைப் பிறருடைய விருப்பக்குறிகளாலும் பாராட்டுகளாலும் அளவிடத் தொடங்கினால், மன அமைதி நம்மைவிட்டு விலகிவிடும். பிறர்
4. வாசிப்பு:
நான்காவதாக வாசிக்கும் பழக்கம் குறைய ஆரம்பிக்கிறது.அதனால் சிந்திக்கும் திறனையும் இழந்தவர்களாகிவிடுகிறோம்.ஒரு புத்தகத்தைப் பொறுமையாக வாசிப்பதற்குப் பதிலாக, சில நொடிகளில் மாறும் காணொளிகளைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறோம். தகவல்கள் அதிகமாக ஆனால் அவற்றை ஆழமாகச் சிந்தித்துப் புரிந்துகொள்ளும் பொறுமை குறைந்துகொண்டே போகிறது.
பிரான்சிஸ் பேகன் ,
"வாசிப்பு மனிதனை அறிவால் நிறைவுடையவனாக்குகிறது "என்பார்.
சமூக ஊடகங்கள் அறிவைப் பெறுவதற்கான வாயில்களாக இருக்கலாம். ஆனால், அவற்றில் கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் உண்மை என்று நம்பாமல், ஆராய்ந்து அறியும் பழக்கம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை.
5. தனித்துவம்
சமூக ஊடகங்களால் நமது தனித்துவத்தையும் சுயமதிப்பையும் இழந்து வருகிறோம். எத்தனை விருப்பக்குறிகள் கிடைத்தன? எத்தனை பேர் பாராட்டினார்கள்? எத்தனை பேர் நம்முடைய பதிவைப் பகிர்ந்தார்கள்? இத்தகைய கேள்விகள் சில நேரங்களில் நம்முடைய மகிழ்ச்சியைக்கூடத் தீர்மானிக்கத் தொடங்குகின்றன.நம்முடைய மதிப்பு பிறர் அளிக்கும் பாராட்டுகளில் இருக்கிறது என்று நம்புகிறோம்.
சமூக ஊடகங்கள் பிறரைப் போலவே வாழ வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி விடுவதால் நமக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போய்விடுகிறது.
முடிவுரை
சமூக ஊடகங்கள் நமக்கு உலகத்தை அறிமுகப்படுத்துகின்றன ஆனால், அந்த உலகத்தைப் பார்ப்பதிலேயே மூழ்கி நமக்கான ஓர் உலகம் உண்டு என்பதே மறந்து போய்விடுகிறது.
நாம் இழந்த நேரத்தை மீட்டெடுக்க முடியாது; ஆனால், இனி செலவிடும் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த முடியும். விலகிய உறவுகளை மீண்டும் நெருக்கமாக்க முடியும். சிதறிய கவனத்தை ஒருமுகப்படுத்தவும் தொலைந்துபோன வாசிப்புப் பழக்கத்தையும் மன அமைதியையும் மீண்டும் வளர்த்துக்கொள்ளவும் சமூக ஊடகங்களில் இருந்து சற்று விலகி இருப்போம்.
கைப்பேசி நம் கையில் இருக்கட்டும்; நம் வாழ்க்கை அதன் கையில் சிக்கிவிடாமல் இருப்பது நம் கையில்தான் இருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக