நாயைக் கண்டால் கல்லை காணோம்...

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்....
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்"

இது வேடிக்கையாக சொல்லப்படும் பழமொழி.

சிலருக்கு எப்போதும் நாயைக் கண்டால்
போதும். கை தானாக கல்லை எடுத்துவிடும்.
நாய் கடித்துவிடுமோ என்ற
அச்சத்தில் ஒரு பாதுகாப்பிற்காக
கையில் கல்லைத் தூக்கிவிடுவர்.

இன்னும் சிலரோ நாய்மீது கல்லெரிந்துவிட்டு
நாய் காலைக் காலை உயர்த்தி 
நொண்டிக் கொண்டே  ஓடுவதைப் பார்த்து
இன்புற வேண்டும் என்று ஒரு அற்ப ஆசை.

இப்படி கல்லுக்கும் நாய்க்கும் தொடர்பு
இருக்கோ இல்லையோ நமக்கும் கல்லுக்கும்
நெருங்கிய தொடர்பு இருக்கிறது
என்பது இதிலிருந்து தெரிகிறது.

ஆனால் பழமொழி என்பது வெறுமனே சிரித்து
மகிழ மட்டுமே கூறப்பட்ட ஒன்றாக இருக்கமுடியாது.

அதனால் இந்தப் பழமொழிக்கு உள்ளார்ந்த 
இன்னொரு பொருள் கண்டிப்பாக 
இருந்திருக்க வேண்டும். அது கால ஓட்டத்தில்
காணாமல் போயிருக்கலாம்.
அல்லது நாம்தான் அதன் உண்மையான பொருளைத்
தேடாமல் விட்டிருக்கலாம்.

இப்போது அதன் உண்மையான பொருள்
என்னவாக இருந்திருக்கும் என்பதைப்
தேடித்தான் பார்ப்போமே!

ஒரு பெரிய மனிதர் தன் தோட்டத்துக்
காவலுக்காக  நாயை கல்லில் செதுக்கி, 
தன் தோட்ட வாசலில் வைத்திருந்தார்.
நாய் தத்ரூபமாக வடிக்கப்பட்டிருந்தது.

அதை உண்மையிலேயே நாய் என்று நினைத்து
தோட்டத்துப் பக்கம் எந்த கள்வர்களும்
வருவதில்லை.
ஒருநாள் அந்தபக்கமாக வந்த ஒரு
மனிதருக்கு சந்தேகம்.
"என்னடா...நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.
இந்த நாய் அந்த இடத்தைவிட்டே அசையாமல்
அப்படியே கிடக்கிறது" என்று அருகில்
சென்று தொட்டுப் பார்த்தார்.

கல்லில் செதுக்கப்பட்ட
நாய்.
இப்போது அவருடைய கண்களில் அது
நாயாகத் தெரியவில்லை.
கல்லாகவே தெரிந்தது.
கல் என்ற நினைப்பு வரும் முன்னர்
அது நாயாகத் தெரிந்தது.
கல் என்ற நினைப்பு வந்த பின்னர்
நாய் என்ற எண்ணம் முற்றிலுமாக
மறைந்து போயிற்று.
"முழுகல்லில் செதுக்கப்பட்டடுள்ளதா?
கருங்கல்லா....கடப்பா கல்லா....?இப்படி
கல்லைப்பற்றிய
சிந்தனையே ஓடிக் கொண்டிருந்தது.

இப்படித்தான் 
கல்லைக் கண்டபோது நாயைக்
காணவில்லை. நாயைக் கண்டபோது
கல்லைக் காணவில்லை என்ற பழமொழி
வந்திருக்க வேண்டும் என்கின்றனர்.
உண்மையும் அதுவாகத்தான் இருக்க வேண்டும்.

எல்லாமே நமது பார்வையில்தான்
இருக்கிறது.

இதே போன்றதொரு பாடல்
திருமூலரின் திருமந்திரத்தில் வருகிறது.

"மரத்தில் மறைந்தது மாமத யானை
மரத்தை மறைத்தது மாமத யானை 
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே"

 என்று திருமூலர் சொல்லி இருப்பார்.
                                     
ஒரு மரவேலை  செய்யும் ஒரு தொழிலாளி
விதவிதமான சிற்பங்களைச் செதுக்கி
விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒருநாள் ஒரு பெரிய யானை சிற்பத்தைச்
செதுக்கி  விற்பனைக்காக 
வீட்டு வாசலில் வைத்திருந்தார்.

அந்தவழியாக வந்த பாலு,
"என்ன...இவர்..வீட்டுவாசலில் யானை
நிற்கிறது ?"என்று அஞ்சி விலகி
ஓடினார்.

எதிரே நண்பர் ஒருவர் வந்தார்.

"என்ன..பாலு....இப்படி மூச்சிறைக்க ஓடி வருகிறீர்கள்?"
என்று விசாரித்தார்.
"தச்சர் வீட்டு வாசலில் ஒரு யானை நிற்கிறது
அதனால்தான் பயந்து ஓடி வந்துவிட்டேன்"
என்றார் என்றார் பாலு.

"அதெப்படி யானை ஊருக்குள் வரும்?
என்னோடு வாரும் பார்த்துவருவோம்" என்று 
பாலுவையும் திரும்ப அழைத்து  வந்தார் நண்பர்.

மனமில்லாமல் தச்சர் வீட்டுப்பக்கம் 
நண்பரோடு திரும்பவும் வந்தார் பாலு.

இப்போது வந்த வேகத்தில் நண்பர்
யானையைத் தொட்டுப் பார்த்தார்.

"இந்த யானையை எந்த மரத்தில்
செய்திருப்பார் ?"
என்று கேட்டார்.

"எந்த மரத்திலா....என்ன சொல்கிறீர்கள்?"
அதிர்ந்து போனார் பாலு.

"இந்த யானை மரத்தில் செய்யப்பட்டதுதானே.
அதைத்தான் எந்த மரத்தில் செய்யப்பட்டது
என்று கேட்கிறேன் "என்றார் நண்பர்.

"ஓ...இது மரத்தில் செய்யப்பட்ட யானையா?
நான் உண்மையான யானை என்றல்லவா
நினைத்தேன் "என்றார் பாலு.

அதுதாங்க....ஒரே சிற்பம் .
இருவராலும் இருவேறு கண்ணோட்டத்தில்
 பார்க்கப்படுகிறது.
 ஒருவர் மரம் என்கிறார். இன்னொருவர்
 யானை என்கிறார்.
 
 இப்படித்தாங்க... ஒரு செய்தியைப் பற்றியோ
 ஒரு நிகழ்வைப் பற்றியோ 
 மனிதர்களைப் பற்றியோ
 ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் வெவ்வேறு
 விதமாகத்தான் இருக்கும்.
 உண்மை என்று நினைத்தால் உண்மை.
 பொய் என்று நினைத்தால் பொய்.
 பரத்தைப் பார்க்கிறவர் பாரினைப்
 பார்க்கமாட்டார்.
 பாரினைப் பார்க்கிறவர் பரத்தைப்
 பார்க்க மாட்டார்.

உலக சிந்தனைகள் உள்ளவர்கள் கண்களில்
 இறைவன் தெரிவதில்லை.
இறைவனைப் பற்றிய சிந்தனை மட்டுமே 
இருப்பவருக்கு இவ்வுலகமும் இவ்வுலகைப்
பற்றிய எண்ணமும் முற்றிலும் மறைந்து
இறைவன் மட்டுமே கண்களுக்குத் தெரிகிறான்.
என்பது இதன் இப்பாடலின்  கருத்து.

எல்லாம் நம்ம பார்வையில்தாங்க இருக்கிறது.
எவ்வளவு அருமையான கருத்து.... இல்லையா!





Comments

  1. பழமொழிக்கு மிகச்சிறப்பான விளக்கம் தந்து பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts