தொடர்புக்கு அப்பால்

       தொடர்புக்கு அப்பால்

விட்டத்தைப் பார்த்தபடி அப்படியே 
படுத்திருந்தார் எமிலி பாட்டி.
 
வெகுநேரமாக எதையோ தீவிரமாக
யோசிப்பது போல் இருந்தது.

வேறு என்னத்தை யோசிக்கப் போகிறார்?
சதா பிள்ளைகளின் நினைப்போடு படுக்கையில்
புரண்டு கொண்டிருப்பார்.
வயதான காலத்தில் தூக்கமும்
சட்டுபுட்டுன்னு வரமாட்டேங்குது.
சாக்காலமும் சீக்கிரம் வரமாட்டேங்குது...
என்று புலம்பிக் கொண்டே இருப்பார்.

யாருக்கெல்லாமோ கணக்கு முடிச்சி
வைக்கிற எமனுக்கு வத்தலும்
சொத்தலுமா கிடந்து முனங்குற
முதியவர்கள் பக்கம் சட்டுன்னு திரும்ப
மனம் வராது.
.
இன்றைக்கோ... நாளைக்கோ ...போக வேண்டிய
உயிர்களெல்லாம் வருடக்கணக்கா
கிடந்து நொம்பலப் படுவதும் அதைப்
பார்த்தும் பாராமல் இருப்பதும் இந்த
எமனுக்கு ஒரு விளையாட்டு.

இளமையில் வறுமை கொடிது.
முதுமையில் தனிமை கொடிதினும்
கொடிது.
அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான்
அது எப்படிப்பபட்ட கொடுமை  என்பதை உணர
முடியும். வார்த்தையால் விவரிக்க முடியாத
ஓர் உணர்வு.
அதுவும் பிள்ளைகள் இருந்தும் அநாதையாக
தனிமையில் கிடப்பது ....கொடுமையிலும்
கொடுமை.
 ஒன்று ஒன்றாக நினைக்க ...நினைக்க...
 கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது.
நெஞ்சுக்குழிக்குள் ஏதோ ஒன்று
உருளுவது போன்று இருந்தது.
 
எமிலி பாட்டி ஒன்றும் அநாதை இல்லை.
ஊரு உலகத்தைப் போல அவர்களுக்கும்
இரண்டு மகன்கள் உண்டு.
மூத்தவன் அமெரிக்காவில் குடும்பத்தோடு
வசிக்கிறான்.
இளையவன் இங்குதான் மேற்கு மும்பை
பகுதியில் தன் குடும்பத்தோடு 
இருக்கிறான்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில்
பாட்டி இருக்கும் வீடு மூத்த மகனுடையது.
வந்தா போனா ஒரு வீடு வேணுமே என்று
ஆயிரத்து இருநூறு சதுர அடியில் ஒரு
வீடு வாங்கிஅம்மா, அப்பா  இருவரையும்
அங்கு குடியமர்த்தினான் மூத்தவன்.
நல்ல வசதியான வீடு.
நீச்சல் குளம்....நடை பாதை...பூங்கா என்று
நல்ல வசதியானவர்கள் குடியிருக்கும்
வளாகம்.

ஆனால் யாரும் அவ்வளவு எளிதாக
பழகுவதில்லை.
தானுண்டு.... தன் குடும்பம் உண்டு....
தன் வேலை உண்டு என்பதைத் தவிர
பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள்.?
என்ன நடக்கிறது ?எதுவும் யாருக்கும்
தெரியாது.தெரிந்துகொள்ள வேண்டும்
என்ற விருப்பமும் யாருக்கும் கிடையாது.

பாட்டியும் யாருடனும் பேச வேண்டும்
என்று எந்த சிரத்தையும் எடுத்துக் 
கொள்வதில்லை.

தாத்தா இருக்கும்வரை இது ஒன்றும்
பெரிதாகத் தெரியவில்லை. 
இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக
இருந்ததால்....எந்த சிக்கலும் 
எழவில்லை.

பாட்டி எதைப் பற்றியுமே 
கண்டு கொள்ளமாட்டார்.
யாரையும் எதிர்பார்க்கவும் மாட்டார்.

கடந்த வருடம் தாத்தா திடீரென்று
நெஞ்சுவலி என்று  மருத்துவமனைக்குப்
போனவர்தான்.

மறுபடி இரண்டுநாள் கழித்து
பிணமாகத்தான் வந்தார்.

பாட்டிக்கு கண்ணைக்கட்டி காட்டில்
விட்டமாதிரி ஆயிற்று.
நொடிந்துபோய் முடங்கியவர்தான்.
இன்றுவரை எழும்பி நடமாட்டம் இல்லாமல்
கட்டிலே கதி என்று முடங்கிக் கிடக்கிறார்.

தாத்தா இறந்ததும் எந்த மவனாவது
ஒருத்தன் கூடவே கூட்டிட்டு போயிருவான்
என்று நினைத்தார்.

ஆனால் மூத்தவன் "அம்மா வீட்டோட
இங்கேயே இருக்கட்டும் . வீட்டைப்
பூட்டிப்போட்டு அப்படியே வைத்தோம்
 என்றால் வீடு வம்பா போயிரும்.
 வீட்டில் ஒரு ஆள்
இருந்து பார்த்துக்கணும்  "என்று 
அம்மாவைக்கூடவே அழைத்துச்
செல்ல மனமில்லை என்பதை
வேறுவிதமாகச் சொல்லிவிட்டான்.

இளையவனும்" அண்ணண் சொல்லுவதுதான்
சரி . அம்மா வீட்டோடு இங்கேயே இருக்கட்டும்.அம்மாவைப் பார்த்துக்
கொள்வதற்கு ஒரு வேலைக்காரி
ஏற்பாடு பண்ணிக்கொடுத்துவிடுவோம்"
என்று நாசுக்காகப் பேசி தனக்கும்
அம்மா தன்னோடு இருப்பதில் விருப்பம்
இல்லை என்பதை அனைவர் முன்னிலையிலும்
நல்லவிதமாக பதிவு செய்துவிட்டான்.

 "இங்கேயே இருங்கம்மா...
நான் அப்பப்ப வந்து பார்த்துட்டுப் போகிறேன்"
என்று சொல்லி சமாதானப்படுத்தி
இருக்க வைத்தான்.

பெத்த பிள்ளைகள் தாயைக்கூட வைத்து
பார்க்க மனமில்லாமல் போன பின்னர்
பாட்டியால் வேறு என்ன செய்து விட முடியும்?

அப்பப்போ இளையவன் வந்து  பார்த்துக் கொள்வான்.
என்ற நம்பிக்கையில் பாட்டியும்
ஒரு வார்த்தை மறுப்பு சொல்லவில்லை.

கூடமாட ஒத்தாசைக்கு ஒரு வேலைக்காரி
ஏற்பாடு பண்ணித் தருகிறேன் என்ற மூத்தவன்,
"வீட்டோட வேலைக்காரி கிடைக்கவில்லை.
நாளும் வந்து வேலை செய்து கொடுப்பதற்கு
 வேலைக்காரி ஏற்பாடு பண்ணி இருக்கிறேன்"
 என்று பானுவைக் கூட்டிட்டு வந்து
எமிலி பாட்டி முன்னால் நிறுத்தினான்.

"வீட்டுவேலை.... வெளிவேலை எல்லாம்
இந்த பானு பார்த்துக் கொள்வாள்.
நல்ல விவரமானவள்.
நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாதீங்க "என்று
பானு கையில் அம்மாவை ஒப்படைத்துவிட்டு 
அமெரிக்கா சென்றான்.

பானுவும் ஒரு குறையும் வைக்காமல்
நன்றாகத்தான்  பார்த்துக் கொள்கிறாள்.

ஆனால் ஒவ்வொரு நாள் இந்தப்
பாழாய்ப் போன மனசு ....
ஒரு இடத்தில் நில்லாமல்
அலைக்கழித்துவிடும்.நடுகடலில்
தத்தளிக்கும் படகாட்டும் தடுமாற
வைக்கும்.

பிள்ளைகள் தாயை கூட வைத்துப் 
பார்த்துக் கொள்ள மனமில்லாமல்
இருக்கலாம். ஆனால் இந்தத் தாய் மனசு
அவர்களைக் காணாமல் தவியாய்த் தவித்துக்
கிடக்குமே என்பதை யார் 
புரிந்து கொள்வார்கள் ?

பிள்ளைகள் கூட இருந்து செய்த குறும்புகள்
எல்லாம் நினைவுக்கு வர மனதிற்குள்
சிரித்துக் கொள்வார் பாட்டி.இந்த பழைய நினைப்பு
தரும் மகிழ்ச்சியில்தான் பாட்டியின்
உயிர் நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கும் காலையில் இருந்து
பேரப்பிள்ளைகளைப் பார்க்க வேண்டும்
என்று ஒரே தேட்டமாக இருந்தது.
சாவதற்கு முன்பு எல்லா பிள்ளைகளையும்
பார்த்திடணும் என்று ஓர் ஆசை.....

மூத்தவன் மகனைக் கைப்பிள்ளையில்
பார்த்தது. ஐந்து ஆறு வருசம் ஆகியாச்சு.
நல்ல நெட்டு நெட்டுன்னு வளர்ந்திருப்பான்.

இளையவனுக்கு ஒரு பொண்ணும் ஒரு
பையனும் .
அவர்களையும் தாத்தா இறந்த வீட்டுக்குள்ள 
பார்த்தது. சரியா பேச முடியல....

ஒரு தடவை கூட்டிட்டு வாப்பான்னு
சொன்னா... அடுத்த லீவுக்கு
கூட்டிட்டு  வாரேன் என்பான்.
மறுபடியும் ஒத்த ஆளா வந்து நிப்பான்.

ஏதேதோ நினைவில் படுக்கையில்
கண்மூடி கிறங்கி கிடந்தார் பாட்டி.
அப்போது...வாசல் கதவு திறக்கும்
சத்தம் கேட்டது.

மெதுவாக கண் திறந்து பார்த்தார்.
அங்கே ...யாரது....பானு கையைப்
பிடித்துக் கொண்டு....
ஏதோ ஒரு ஆர்வத்தில் வேகமாக
எழும்ப முயன்றார்.

"பார்த்து....பார்த்து...என்ன பண்ணுறீங்க..."
ஓடி வந்து பிடித்துக் கொண்டாள் பானு.

"ஒன்றுமில்லை விடு....பையன் யாரு...."
சிறுவன்மீது இருந்த கண்களை எடுக்காமலே
விசாரித்தார்.

"என் பேரன்தாம்மா....மூத்த மகள் புள்ள.
பள்ளி லீவு என்று தாயும் மவனும்
ஆயா வீட்டுக்கு வந்துருக்காவ..."

"ஏன் பானு என் பேரனும் இவ்வளவு உயரம்
வளர்ந்துருபான் இல்ல...."

"உங்க பேரமாரு நெடு நெடுன்னு வளர்ந்துருப்பாவ...
உங்க மக்கமாரு இரண்டு பேரும்
வாட்ட சாட்டமான ஆளுங்க இல்லியா...
இவன் ....அப்பன்காரன் மாதிரி...கொஞ்சம்
குள்ளம் "என்றபடி பேரன் தலையைத்
தடவிக் கொடுத்தாள் பானு.

பையன் பானுவின் தோள் சேலையைப்
பிடித்து வாய்க்குள் வைத்துவிட்டு
கீழ்க்கண் போட்டு எமிலி பாட்டியைப்
பார்த்தான்.

பாட்டியின் கண்கள் இன்னும்
சிறுவன்மீதே இருந்தது.

"அம்மா காபி போட்டு எடுத்து வரவா.."
சமையலறையை நோக்கித் திரும்பினாள்...பானு.

"வேண்டாம் பானு...சுக்கு தண்ணி போட்டுத் தா.
தொண்டை கம்முன மாதிரி இருக்கு..."

"சும்மா மக்கமாரை நினைச்சு அழுதுகிட்டு
இருந்தா...தொண்டை கம்மாம என்ன
செய்யும்? "உரிமையோடு கோபித்துக்
கொண்டாள் பானு.

"ஏன் பானு நான் அநாதையாத்தான் 
கண்ணை மூடப் போறேனா?"

"இன்னொருமுறை நான் இருக்கும்போது
அநாதைன்னு சொல்லாதீங்க....
எனக்கு கெட்ட கோபம் வந்துடும்" கூடப்பிறப்பு
மாதிரி சட்டுன்னு பேசி பாட்டியின்
வாயை அடைத்தாள்.

"என் மனசு அப்படித்தான் சொல்லுது..."

"எல்லோரும் போகும் போது அநாதையாகத்தான்
போவ போறோம். யாரும் யாரையும்
கூட கூட்டிட்டுப் போக போறது இல்ல...
இருங்க சுக்கு தண்ணி போட்டு 
எடுத்து வாரேன்"

சமையலறைக்குள் போய் சுக்குக்காபி
தயார் பண்ணினாள் பானு.
சமைலயலறை வாசலில் நின்று 
எட்டிப் பார்த்தான் சிறுவன்.

கையசைத்து அழைத்தார் பாட்டி.
மாட்டேன் என்பதுபோல உதடுகளைப்
பிதுக்கினான் .
தலையணைக்குக் கீழ் இருந்து ஒரு
சாக்லெட்டை எடுத்து நீட்டினார் பாட்டி.

கதவுக்குப் பின்னால் மறைந்து நின்றவன்
ஓடிவந்து சாக்லெட்டை பிடுங்கிவிட்டு
மறுபடியும் பானுவின் சேலைக்குள் 
உடம்பை மறைத்துக் கொண்டான்.

"சேட்டக்காரப் பையன்..".சொல்லிச்
சிரித்துக் கொண்டார் பாட்டி.

கையில் சுக்குக் காபியோடு வந்தாள் பானு.
பாட்டியின் பின்னால் மறைந்து...
 மறைந்து வந்த சிறுவன்
பாட்டிப் பக்கத்தில் வந்ததும் சேலையை
வாயில் வைத்துக் கொண்டே மெல்ல சிரித்தான்.

"வா...பாட்டி பக்கத்தில் வா..."
கையை நீட்டினார் பாட்டி.

சிறுவன் பானுவின் சேலையைக்
கெட்டியாகப் பிடித்து நகர மறுத்தான்.

பாட்டியின் கரிசனத்தைப் பார்த்த பானு,
"பேரமாரைப் பார்கணும் போல் இருக்கா"
என்றாள்.

"பார்த்து நெடுநாள் ஆயிட்டு இல்ல...
தேட்டமாத்தான் இருக்கு.
 வந்து ஒரு எட்டு பார்த்துட்டு...பிள்ளைகளையும்
 காட்டிட்டிட்டு போப்பான்னேன்.
நேரமில்லை...நேரம் இல்லை என்கிறான்...
அப்படி என்ன வேலையோ?" எமிலி பாட்டியின்
குரலில் விரக்தி தெரிந்தது.

"வருவாங்க ...வருவாங்க....
வராம எங்க போயிருவாவ...

 "அம்மா....குளிக்க வெந்நீர் வைக்கட்டுமா?

" வேண்டாம்... எனக்கு இன்றைக்கு மனசுக்கு
ஒரு மாதிரியா இருக்கு... எதுவுமே செய்ய மனம்
வரல...  "
சற்று நேரம் பானு முகத்தையே பார்த்துக்
கொண்டிருந்த பாட்டியின் கண்களிலிருந்து
கண்ணீர் வடிந்தது.

"சும்மா இருங்கம்மா...நீங்க இப்படி அழுவதைப்
பார்த்தால் எனக்கு மனசே தாங்கல..."
என்று தனது முந்தானையாலேயே
கண்ணீரைத் துடைத்து விட்டாள்.

அந்தப் பரிசம் பாட்டியை நெகிழ வைத்தது.
அப்படியே பானுவைக் கட்டிப் பிடித்துக்
கொண்டார்.

"நான் இருக்கேம்மா...ஒன்றுக்கும் பயப்படாதீங்க..."

"என் மவ போனபிறகு நாளையிலிருந்து
நான் உங்க கூடவே வந்து இருக்கேன். போதுமா? "
படபடவென்று பேசி முடித்தாள் பானு.

பாட்டிக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
என்ன என்னவெல்லாமோ நினைப்பு
வருது. சொல்லத்தான் மொழி இல்லை....
உணர்வுக்கு மொழி ஏது?

பாட்டியைத் தடவிக் கொடுத்தபடி 
பக்கத்திலேயே இருந்தாள் பானு.

"இருந்தாலும் உங்கப் பிள்ளைகள்
இப்படி இருக்கப்பிடாது. பெத்தத் தாயை
கடைசி காலத்தில கூட வைத்துப்
பார்ப்பதுல அப்படி என்ன சங்கடம்....
எனக்கு இந்த ஒத்த பொட்ட பிள்ளதான்...
பக்கத்து ஊருல கட்டி கொடுத்துருக்கோமே 
ஒரு ஆத்திர அவசரத்துக்கு வந்து
நிப்பாளோ ....என்னமோன்னு நினைச்சேன்.
அம்மைக்கு ஒரு மாதிரி இருக்குன்னு
ஒரு போனு போட்டா போதும்.
கடனவுடன வாங்கிகிட்டு அடுத்த பஸ் ஏறி
வந்து நிப்பா..."
பானு சொல்லச் சொல்ல பானு கையை 
இறுக்கமாகப் பற்றிக் கொண்டார் பாட்டி.

கண்கள் பானுவைப் பார்த்துக் கெஞ்சின.
நீ கொடுத்து வச்சவ....
என்று சொல்ல வந்த
வார்த்தைகள் தொண்டைக்குள்
கிடந்து திக்குமுக்காடின.

"அம்மா.. உங்க மவனுக்கு போன் போட்டு
வரச் சொல்லட்டுமா?"

"வேண்டாம்...
தொலைவில் இருக்கிற பிள்ளைகள்.
நீ போன் போட்டால் அம்மைக்கு என்னவோ
என்று பதறிப் போயிடுவானுவ....
நானே பாத்துக்கிறேன் நீ போய்
வேலையைப் பாரு."

"கோபப்படட்டும்...நல்லா கோபப்படட்டும்..
அப்படி என்ன தூரம் ....தாயை வந்து பார்க்க
முடியாத தூரம்....என்று நான் கேட்டுப்புடுறேன்."

"போ...போ...போயி வேலையைப் பாரு.
சட்டுபுட்டுன்னு வேலையை முடிச்சுகிட்டு
வீட்டுக்குப் போவதை பாரு. வீட்டுல உன்
மவ காத்துகிட்டு இருப்பா"
என்று பேச்சைத் திசை திருப்பினார்  பாட்டி.

"மவனுவள ஒண்ணு சொல்லிறபிடாது....
எனக்கென்ன....இப்படியே கிடங்க" என்று
முணுமுணுத்தபடியே வேலை செய்ய
ஆரம்பித்தாள் பானு.

ஆனாலும் மனசு கேட்காம
இடையிடையே எமிலிப் பாட்டியிடம் வந்து
பேச்சு கொடுத்துவிட்டுப்போனாள்.

வேலை எல்லாம் முடித்துவிட்டு கிளம்ப
தயாரான  பானு,
பேரனிடம் "பாட்டியம்மா கிட்ட 
போயிட்டு வாரேன்
என்று சொல்லு..."என்றாள்.

சிறுவன் பானுவின்
கைகளை பற்றிக் கொண்டு,
 "போயேன்..."என்று சொல்லிவிட்டு
பாட்டியின் பின்னால் போய்
ஒளிந்து கொண்டான்.

"போயேன் சொல்லப்பிடாது....
போயிட்டு வாறேன் சொல்லணும்...." சொல்லிக்
கொடுத்தார் எமிலி பாட்டி.

சிரித்துவிட்டு வாயைத் திறக்க மறுத்தான்
சிறுவன்.

"இப்படித்தான் ஒரு ஆளுகிட்ட பேசமாட்டான்...
வா " என்று கையைப்பிடித்து இழுத்துகிட்டு
வாசலை நோக்கி நடந்தாள் பானு.

"பானு...."

"அம்மா.. "

"நாளைக்கு சீக்கிரம் வந்துருவா இல்ல...."

"வந்துருவேம்மா....நீங்க பத்திரமா இருங்க.
  மருந்து மாத்திரை எல்லாம்
 பக்கத்தில் வைத்திருக்கிறேன்.
 மறக்காம சாப்பிட்டுருங்க....
வெந்நீர் எல்லாம் பக்கத்துல இருக்கு...
அதை எடுக்கப்போறேன் இதை எடுக்கப்போறேன்
என்று தடுமாறி விழுந்துறாதீங்க...
சொல்லிப்புட்டேன்" கறாராக பேசிவிட்டுப் 
போனாள் பானு.

வாசலுக்கு வெளியில் நின்று கையசைத்தான்
சிறுவன்.

பாட்டியும் பதிலுக்கு கையசைத்துவிட்டு
"நாளைக்கு வா... "என்று விடை கொடுத்தார்.

"வாறேன் "என்பதுபோல சிரித்துக் கொண்டே
தலையசைத்தான் சிறுவன்.

சிறுவன் தலை மறைந்ததும்...பாட்டியால்
நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.

தலை சுற்றுவதுபோல் இருந்தது.
ஆயிரம் கேள்விகள் வந்து மண்டையைக்
குடைந்து எடுத்தன.

அநாதையா போனேனே....என்று
மறுபடியும் புலம்ப ஆரம்பித்தார்.
புலம்பலோடே விம்பலும் கூடிவிட
எட்டி தண்ணீரை எடுக்க கையை நீட்டினார்.
கை தட்டி...தண்ணீர் குவளை சரிந்து
தண்ணீர் முழுவதும் தரையில் ஓடியது.
எழும்ப முடியவில்லை....கை..கால்கள்
எல்லாம் இழுப்பதுபோல் இருந்தது.
யாராவது காலை நீவி விட்டால் தேவலாம்
போல் இருந்தது.

யார் இருக்கிறார்கள்? 
யார் வரப்போகிறார்கள்?

மறுபடியும் அந்த நினைப்பு வர...
நெஞ்சு உலர்ந்து அப்படியே
கட்டிலில் சாய்ந்தார்.

மறுநாள்.... வழக்கம்போல காலையில்
வந்தாள் பானு.
"அம்மா...அம்மா..."கூப்பிட்டுப் பார்த்தாள்.
பதிலில்லை
தூங்கிட்டாங்க போல என்றபடி
வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.

வேலையை முடித்துவிட்டு மறுபடியும்
அழைத்துப் பார்த்தாள். சத்தமில்லை.

என்னாச்சோ.. ஏதாச்சோ பதற்றத்தோடு
கையைப் பிடித்தாள். கை விறகு கட்டை மாதிரி
மரத்துக் கிடந்தது.

"அம்மா...பெரியம்மா "உரக்க கத்திப் பார்த்தாள்...
எந்தவித சலனமுமில்லை. பதறிப்போன
பானு..." அம்மா.....அநாதையாகவே
போவேன் போலிருக்கே என்று
சொல்லிச்சொல்லி அநாதையாகவே
போயிட்டீங்களே! " கதறினாள்.

ஓடிப்போய் எமிலியின் மகன்களுக்கு
போன் போட்டு" உங்க அம்மா
நம்மை எல்லாம் அநாதையாக்கிவிட்டு
 போயிட்டாங்க தம்பி"
என்று சொல்ல நினைத்தாள்.

கைபேசியை எடுத்து இளைய மகனுக்குப்
போன் செய்தாள் பானு.
ரிங் போய்க் கொண்டே இருந்தது.
யாரும் எடுக்கவில்லை.
 
பதற்றத்தோடு அமெரிக்காவில் இருக்கும்
 மூத்த மகனுக்குப் போன் செய்தாள்.
"இந்த நம்பர் தொடர்பு எல்லைக்கு
அப்பால் உள்ளது....
மறுபடியும் சிறிது நேரத்திற்குப் பிறகு
முயற்சி செய்க "என்ற பதில் மட்டும் வந்தது.

அப்படியே தலையில் கைவைத்து
கீழே அமர்ந்தாள் பானு.
என்ன செய்வது ....யாரைக் கூப்பிடுவது
என்று ஒன்றும் தெரியாமல்
 பாட்டியின் அருகில் அப்படியே
அமர்ந்து அந்த...
முகத்தையே பார்த்தாள்...

 அந்தப் பார்வையில் உங்க பிள்ளைகள் 
 எப்போதும் தொடர்புக்கு அப்பால் தானா?
 என்ற கேள்வி இருந்தது.





         

Comments

  1. சிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவு.படிக்க படிக்க மனதில் ஒ ரு நெகிழ்வு ஏற்பட்டது.

    ReplyDelete

Post a Comment

Popular Posts