அன்பு உனக்கிராவிட்டால்....

அன்பு உனக்கிராவிட்டால்....

எதற்கெடுத்தாலும் நான் அன்பானவன் 
நான் அன்பானவள் என்று சொல்கிறவர்களைப்
பார்த்து ...நிஜமாகவா ?
என்ற ஒரு சொல்லை மட்டும்
கேட்டுப் பாருங்கள்.

அப்போது  அவர்கள் முகம் ஒருமாதிரியாக 
மாறும் பாருங்க ...அதன் பிறகு
ஒருபோதும் அவனோ ..அவளோ
அந்தச் சொல்லை உங்களிடம்
சொல்லமாட்டார்கள்.
ஏய்....சந்தேகப்பட்டுட்டாம்பா.
இவனிடம் கொஞ்சம் உஷாராக
இருக்கணும் என்று ஒதுங்கிப் 
போய்விடுவார்கள்.

என்மீது நம்பிக்கை இல்லை
என்றால் ஒருமுறை உங்கள்
நண்பனிடமோ நண்பியிடமோ கேட்டுப்
பார்த்து நான் சொல்வது உண்மையா?
இல்லையா? என்பதை உறுதி
செய்து கொள்ளுங்கள்.

99 விழுக்காடு இதுதாங்க உண்மை.
அங்கொன்றும் இங்கொன்றுமாக
ஏதோ ஒரு விழுக்காடு
விதிவிலக்கு மனிதர்கள் இருப்பார்கள்.
அவர்களை விட்டுவிடுவோம்.


அன்பு...அன்பு..அன்பு
என்று தம்பட்டம் அடிப்பவர்கள் பக்கம்
திரும்புவோம்.

அன்பு வாயால் பேசுவதோடு
நில்லாது. செயலில் அதை உறுதி
செய்யும்.

செயலில் ஒன்றுமே இல்லையா?
 அப்படிப்பட்டவர்களிடம்
மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்.

அப்படியானால் ஒருவர் அன்பானவர் 
என்பதை எப்படித்தான் 
கண்டு கொள்வது? 


அன்புக்கு என்னதான் அளவுகோல்?
யாரிடம் போய்  கேட்பது?
இப்படி சிலபல நாட்களாக எனக்குள்
ஒரே குழப்பமான தேடல் 
நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போதுதான்  எதற்கும் தீர்வு 
சொல்லித் தரும் வள்ளுவரிடம்
 என் கேள்விக்கு  விடை இல்லாமலா இருக்கும்?
 என்று  நேரே வள்ளுவரிடம் சென்றேன்.
 
" ஐயா.  ....அன்பு என்றால் என்ன ?"
 என்றேன்.

"அன்பு என்றால் பிறர்மீது இரக்கம்
காட்டுவது,
தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாதது,
அடுத்தவர்களுடன் ஒத்திசைவுடன் நடப்பது,
பிறர்மீது கருணையாக இருப்பது,
அறம் காக்கும் பண்புடன் வாழ்வது
இவை எல்லாம்தான் அன்பு "என்றார்
வள்ளுவர்.

"ஒருவர் என்மீது  அன்பு 
வைத்திருக்கிறார் என்பதை நான் எப்படி
அறிந்து கொள்வது ?"என்று கேட்டேன்.

"நல்ல கேள்வி....

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும் "

என்ற குறளை விடையாகத் தந்தார் வள்ளுவர்.

"புரியவில்லை" என்றேன்.

அன்பைத் தாழ்ப்பாள் போட்டு மறைக்க
முடியாது. தன் அன்புக்குரியவருக்கு
ஒரு துன்பம் நேர்ந்ததும் அதனைப்
பார்த்துக்கொண்டு அன்புடைய
ஒருவரால் சும்மா நிற்க  முடியாது.
கண்களிலிருந்து
கண்ணீர் தானாக வடியும்.
கைகள் தானாக உதவிக்கரம்
நீட்டி நிற்கும்.

கண்கள்தான் ஒருவருக்கு அன்பு இருக்கிறது 
என்பதை அறிவிக்கும் கருவி. 

அதனால் ஒருவரின்
கண்களை வைத்தே அவரிடம் 
அன்பு இருக்கிறதா ?இல்லையா ?
என்பதைத் தெரிந்து கொள்ளலாம் "
என்றார்.

"அருமையாகச் சொன்னீர்கள் .
நன்றி ஐயா "என்று கூறிவிட்டு
அங்கிருந்து நகர்ந்தேன்.

மறுநாள் அதிகாலையில்
பைபிளை எடுத்துப் படித்துக்
கொண்டிருந்தேன்.
ஒரு இடத்தில் என் கண்கள் அப்படியே
நிலைகுத்தி நின்று விட்டன.

அன்பு ...அன்பு என்று தேட ஆரம்பித்தாயே!
அன்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று
எத்தனைமுறை படித்திருக்கிறாய்?
இன்னுமா புரியவில்லை....புரியவிலையானால்
புரியவைக்கிறேன் என்று என்னை அங்குமிங்கும்
நகரவிடாமல் தடுத்தன அந்த வரிகள்.

மறுபடியும் மறுபடியும் படித்தேன்.
பரிசுத்தப் பவுலோடு 
சற்று  உரையாட 
ஆசைப்பட்டேன்.


அன்பு நீடிய சாந்தமும் பொறுமையும்
உள்ளது .

அன்புக்குப் பொறாமை இல்லை.

அன்பு தன்னைப் புகழாது.

அன்பு இறுமாப்பாய் இராது.

அன்பு அயோக்கியத்தனமானதைச்
செய்யாது.

அன்பு தற்பொழிவை நாடாது.

அன்பு சினமடையாது.

அன்பு அநியாயத்தில் சந்தோஷப்படாமல்
சத்தியத்தில் சந்தோஷப்படும்.

அன்பு சகலத்தையும் தாங்கும்.

அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும்.

அன்பு சகலத்தையும் நம்பும்.

அன்பு சகலத்தையும் சகிக்கும்.

அன்பு ஒருக்காலும் ஒழியாது.....

                          (    1  கொரிந்தியர் 13 : 3  )
                             
கடகடவென்று மொத்த
விளக்கத்தையும் சொல்லிவிட்டார்.

அன்பு நீடிய சாந்தமும் பொறுமையும்
உள்ளது.

ஓஹோ...இதுதான் அன்பா?
என்று நான் நினைத்திருக்கும்
வேளையில் ,

"அன்புக்குப் பொறாமை இல்லை"
என்றார்

அன்பு இருக்கும்
இடத்தில் பொறாமைக்கு இடமே 
கிடையாதா?

யார் அந்தப்  பொறாமை இல்லாதவர்கள்?

நீயும் வாழணும். நானும் வாழணும்
என்ற நினைப்பு வந்துவிட்டால்
அந்த இடத்தில் பொறாமைக்கு
இடமில்லையே என்று எனக்கு நானே
சமாதானப்படுத்திக் கொண்டேன்.

அதற்குள்,
 அன்பு தன்னைப் புகழாது
என்ற அடுத்த வரி ஓடி வந்து
 என்முன் நின்றது.


புகழுக்கு மயங்காதார் யார்?
பேரும் புகழும் வாங்கத்தானே இந்த
ஓட்டம் என்று நினைத்திருக்கையில்...

தன்னைத்தானே புகழாதது என்றுதான்
சொல்லப்பட்டதே தவிர வெளியிலிருந்து
ஒரு செயலுக்கான அங்கீகாரமும்
புகழும் கிடைக்கும்போது அது
தற்புகழ்ச்சி ஆகாதே .
அன்பு தற்புகழ்ச்சியை  நாடாது
அவ்வளவுதான் என்று நானாகவே 
விளங்கிக் கொண்டேன்...

உங்களுக்கும் இந்தக் கருத்தில் உடன்பாடு
இருக்கும் என்று நம்புகிறேன்.

அன்பு இறுமாப்பாய் இராது.

அது என்ன இறுமாப்பு?

 நான் பிடித்த முயலுக்கு
மூன்று கால் என்று பிடிவாதமாக
இருப்பதுதான் இறுமாப்பு.
அடுத்தவர்கள் கருத்துக்கும் மதிப்பளிக்க
வேண்டும்.
விட்டுக்கொடுக்கும்
பண்பும் வேண்டும்.
அதுதான் அன்பு.


விட்டுக்கொடுக்கும் பண்பு வந்துவிட்டால்...

அன்பு அயோக்கியத்தனத்தைச்
செய்யாது .

அன்பிருக்கும் இடத்தில் அயோக்கியத்தனத்துக்கு 
இடமிருக்காது இல்லையா?

அன்பு தற்பொழிவை நாடாது.


தற்பொழிவா?
அது என்னப்பா தற்பொழிவு? என்று
பதவுரையும் பொழிப்புரையும்
 தேடிக் கொண்டிருக்கையில்...

தற்பொழிவு என்றால் சுயநலம்
என்பது நினைவிற்கு வந்தது.

அன்பு இருக்குமிடத்தில் சுயநலம் இருக்காது.
உண்மையும் அதுவாகத்தான் இருக்கும்.
இருக்கவும் வேண்டும்.
சுயநலவாதி தன்னைத் தவிர
வேறு யாரைப் பற்றி சிந்திக்கப்
போகிறான்.?
அன்பு இருந்தால்....
பொதுநலம் தானாக வந்து
குடியேறிவிடும்.

அன்பு சினமடையாது.

அன்பு இருக்குமிடத்தில் கோபத்திற்கு
என்ன வேலை?
பொறுத்துப் போகும் பண்பு
இருப்பதால்...சினத்திற்கு
இடமே இருக்காது.


அன்பு அநியாயத்தில் சந்தோஷப்படாமல்
சத்தியத்தில்  சந்தோஷப்படும்.

அன்பு நியாயத்துக்குப் புறம்பான 
காரியங்களுக்காக
மகிழ்ச்சி கொள்ளாது.
அநியாயமாக வந்தப் பொருளையோ 
சொத்தையோ கண்டு மகிழ்ச்சி
கொள்ளாது.அப்படியானால்
அநியாயமான பொருள் தேடல்
நிகழாது.

உண்மை எதுவா?
உலகம் ஒப்பது எதுவோ 
அதற்கு மட்டுமே தன்  மகிழ்ச்சியை 
வெளிப்படுத்தும்.
அதுதான் அன்பு.

அன்பு சகலத்தையும் தாங்கும்.

 தனக்கு அன்பானவர்களுக்காக
எவ்வளவு கஷ்டத்தையும் தாங்கும்.
பழிச்சொற்களை ஏற்றுக்கொள்ளும்.
தானே எல்லா கஷ்டங்களையும் சுமக்கும்.

அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும்.

 ஒருவர் மாட்டு அன்பு வைத்துவிட்டால்
அவர்மீது நம்பிக்கை இருக்க வேண்டும்.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு
நம்பிக்கை.
அதுதான் விசுவாசம்.
விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக்
காண்பாய்.
அன்பு இருக்குமிடத்தில் விசுவாசம் இருக்கும்.

அன்பு சகலத்தையும் நம்பும்.

விசுவாசம் இருக்குமிடத்தில்
நம்பிக்கை இல்லாமல் போகுமா?

அன்பு இருப்பவரிடம் சகிப்புத்தன்மை 
இருக்கும்.வெறுப்பு காணாமல் போகும்.
அவநம்பிக்கையின்மை இல்லாமல் போகும்.
நம்பிக்கை மட்டுமே நிலைத்திருக்கும்.


இத்தனைப் பண்புகளும் கொண்ட...

அன்பு ஒருக்காலும் ஒழியாது

என்று முத்தாய்ப்பாய்
கடைசி வரியை என்கண்முன் 
கொண்டு வந்து நிறுத்தினார்.

நேற்று அன்பு இருந்தது.
இன்று இல்லை.
நாளை அன்பு வரவும் செய்யலாம்
வராமலும் போகலாம்.

இந்தக் குணம் அன்பிற்கு கிடையவே
கிடையாது.
ஒருமுறை அன்பாக இருந்தால்
அது நிரந்தர அன்பாக இருந்தால் மட்டுமே 
அது அன்பாக ஏற்றுக் கொள்ளப்படும்.
காலத்திற்கு ஏற்ப ...
சந்தர்ப்பத்துக்கு ஏற்ப...
ஆட்களுக்கு  ஏற்ப....
இடத்திற்கு இடம் 
மாறும் பண்பு கொண்டதல்ல அன்பு.

அப்பப்பா....எவ்வளவு அருமையான
விளக்கம்.
இனி அன்பைப் பற்றி எந்தவிதமான
ஐயப்பாடும் இருக்காது என்று
நினைக்கிறேன்.

ஏன் இருக்காது..?
இப்போதுதான் ஐயப்பாடே தொடங்குகிறது
என்கிறீர்களா?

ஆமாம்... யாரெல்லாம் நம்மீது
நேற்று அன்பு  வைத்திருந்தார்கள்.
இன்று  அன்பு வைத்திருக்கிறார்கள்.
 நாளை அன்பு  வைத்திருப்பார்.....
 ஒன்றுமே புரியலியே......என்ற 
 புலம்பலா?


யாரறிவார்...யாரறிவார்...
இந்த மானிட மனதை யாரறிவார்?


அடுத்தவர்களிடம் அன்பைத் தேடாதீர்கள்.


"உன்னிடத்தில் அன்புகூருவதுபோல
பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக" என்ற
ஒற்றைவரியை மனதில் பதிய வைத்துக்
கொள்ளுங்கள்.

நாம் நலமாக இருக்க வேண்டும்.
என்ற ஆசை இருக்கிறதில்லையா?
அதேபோல் அடுத்தவனும் நலமாக
வாழ வேண்டும் என்று நினை. 
அதுதான் அன்பு என்கிறது வேதம்.

எவ்வளவு அருமையான வரிகள்.

ஒருவர் அன்பாக இருக்கிறார் என்பதை
எப்படி அறிந்து கொள்வது?
என்ற ஒற்றைக் கேள்விக்கு 
எவ்வளவு பெரிய விளக்கம் அளித்துவிட்டார்
பரிசுத்த பவுல்.

இப்போது அன்பைப் பற்றிய தெளிவான
புரிதல் வந்திருக்குமே!

புரிந்தபடி நடந்தால் ...நல்லது.

நடக்கவில்லையானால்....
என்ன செய்யமுடியும்?

காதுள்ளவன் கேட்கக் கடவன்.


விசுவாசம், நம்பிக்கை,அன்பு....
இவைகளில் அன்பே பெரியது.



Comments

  1. Life is the flower for which love is the honey." " Love your neighbours as you love yourself"

    ReplyDelete
  2. சாதி மத வேறுபாடின்றி பிறப்பதே உண்மையான அன்பு.பைபிள் வசனங்களை தந்து அன்பை விளக்கியது மிக அருமை.

    ReplyDelete
  3. 1 Corinthians 13 is the best example of charity. Very good explanation. Keep it up.

    ReplyDelete

Post a Comment

Popular Posts