திரும்பிப் பார்க்கிறேன்
திரும்பிப் பார்க்கிறேன்
கடந்து வந்த நாட்களைத் திரும்பிப்
பார்க்கிறேன்.
பிரமிப்பாகத் தெரிகிறது.
எத்தனை மேடு பள்ளங்கள்.
அத்தனையையும் தாண்டி ஒரு
நதிபோல இன்றுவரை
ஓட வேண்டும் என்று ஆசை.
இடையிடையே குளமாக தேங்கி
நின்றுவிடுகிறேன்.
குளமாகிப்போனால்
மறுபடி வாய்க்காலில்
தானே ஓட முடியும்.
அந்த வாய்க்கால் நீரோட்டமாகத்தான்
என்னுடைய நடை இன்றுவரை
சென்று கொண்டிருக்கிறது.
நம்மோடு நடைபயின்ற எத்தனையோ
பேருக்கு இந்த இடத்திலிருந்து
திரும்பிப் பார்க்கும் வாய்ப்பு
கிடைக்காமலேயே போய்விட்டது.
முதலாவது நம்மை இதுவரைக்கும்
கொண்டுவந்த இறைவனுக்குத்தான் நன்றி
சொல்ல வேண்டும்.
நாம் இப்படி ஒருநாளை
கொண்டாடுவோம் என்று எதிர்பார்த்தோமா?
எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத
வரங்களை வழங்குபவன்தான் இறைவன்!
கடந்த ஆண்டில் நாம் சொல்லிக்
கொள்ளும்படி ஏதாவது செய்தோமா?
இந்த 2022 ஜனவரி ஒன்று என்ற
ஒரு இடத்தில்
வந்து நிற்பதற்குமுன்
வீழ்ந்து எழுந்து ,
வளைந்து நெளிந்து,
முட்டி மோதி, தட்டுத்தடுமாறி
அப்பப்பா எத்தனை தடைகள்!
எத்துணைத் தடுமாற்றங்கள்!
மனம் தடுமாறி கலங்கும்
போதெல்லாம் பாரதியின் "வீழ்வேன்
என்று நினைத்தாயோ ?"
என்ற ஒற்றை வரி என்னை
எழுந்து ஓட வைக்கும்.
வள்ளுவரின் வாய்மொழிகளைப்
பற்றிக்கொண்டு நடந்து வந்திருக்கிறேன்.
ஔவையின் அமுதமொழிகளைக் கற்று
என்னை நானே தேற்றிக்
கொண்டிருக்கிறேன்.
பாரதியையும் பாரதிதாசனையும்
படித்து எனக்குள் ஒரு சக்தியை
ஏற்றியிருக்கிறேன்.
நம்பிக்கைக் கொடுக்கும் சான்றோர்
பெருமக்களின் வரிகள் ஊக்கம்
கொடுத்து கரம் பிடித்து நடத்தும்
என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறேன்.
தேற்ற யாரும் வருவார்கள்
என்று நினைத்தால் தேம்பிக்கொண்டு
அதே இடத்தில் நிற்க வேண்டியதுதான்.
இந்தப் புதிய ஆண்டில் என்
நினைவுகள் எங்கெங்கோ
செல்கின்றன.
தேற்ற ஓராயிரம் வார்த்தைகள்
என்னிடம் உண்டு என்று தமிழ்
அணைத்துக் கொண்டதால்தான்
தட்டுத்தடுமாறியாவது இன்றும்
நடந்து கொண்டிருக்கிறேன்.
நம்பிக்கையோடுதான் இந்தப்
பயணம் ஓடிக் கொண்டிருந்தது.
ஓடிக்கொண்டிருக்கிறது.
நாளையும் ஓடும்.
இதுவரை என்னை வீழ்ந்துவிடாமல்
தூக்கி நிறுத்தியது எது என்று பார்த்தால்....
தமிழ் என்பதைத் தவிர வேறு எவரையும்
என்னால் சொல்லிவிட முடியாது.
அன்று மட்டும் நான் தமிழ் படிக்காது
போயிருந்தால்....
கல்லூரியில் ஆங்கில இலக்கியம்
படிக்க இடம் கிடைக்கவில்லையே என்று
அழுதிருக்கிறேன்.
அவமானமாய் நினைத்திருக்கிறேன்.
அம்மாவுடன் சண்டையிட்டிருக்கிறேன்.
படிக்க மனமில்லாது புத்தகத்தைத்
தொடாது இருந்திருக்கிறேன்.
தமிழ் படித்தவள் என்று
சொல்ல அவமானப்பட்டு
பம்மியிருக்கிறேன்.
வேலை கிடைக்காமல் மனம்
நொடிந்து போயிருக்கிறேன்.
துரத்தியடிக்கப்பட்டிருக்கிறேன்.
தூக்கி வீசப்பட்டிருக்கிறேன்.
இன்று தமிழால் உங்களோடு
பேசும் வாய்ப்பு கிடைத்தமைக்கு
பெருமைப்படுகிறேன்.
இந்தப் புரிதல் வருவதற்கு
எத்தனை ஆண்டுகள் காத்திருக்க
வேண்டியதாயிற்று.
என்னை நினைத்து நானே
உள்ளுக்குள் சிரித்துக் கொள்கிறேன்.
தமிழுக்கு அந்நிய மண்ணிலும்
மதிப்பு உண்டு என்பதைப் புரிந்து
கொண்டேன்.
தமிழ் கற்றால் நற்பண்புகள்
நம்மையும் அறியாமல் நம் கூடவே
நடக்கும் என்பதை அறிந்து கொண்டேன்.
எத்தனை முறை காயப்படுத்தப்பட்டாலும்
மன்னித்து மறந்துபோகும்
பண்பை நினைக்கிறேன்.
எங்கிருந்து வந்தது இப்பண்பு?
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்துவிடல் "
என்று சொன்ன அய்யன் வள்ளுவனிடம்
பாடம் கற்றதால் வந்ததிந்த மாண்பா?
ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்வேன்.
தமிழை என் உயிர் என்பேன்.
தமிழை என் வாழ்வென்பேன்.
என்று யார்யாரோ பாடிய
பாடல் வரிகளை வாசிக்கும்போது எனக்குள்
பெரிதாக எந்த உணர்வும்
ஏற்பட்டுவிடவில்லை.
இன்று தமிழ் என் உயிராக உணர்வாக
உள்ளத்தின் நினைவாக மாறியபோது
அதனை அனுபவப்பூர்வமாக என்னால்
உணர முடிகிறது.
உணர்கிறேன்.
அந்த உணர்வில் கரைந்து போகிறேன்.
நெகிழ்ந்து போகிறேன்.
பெற்ற பிள்ளையைத் தாய் கைவிட்டாலும்
கற்ற கல்வி கைவிடாது என்று
சொல்வார்கள்.
கற்ற கல்வி என்பதைவிட கற்ற தமிழ்
கடைசிவரை கூட வரும்
என்பதை அனுபவப் பூர்வமாக
உணர்ந்து கொண்டேன்.
ஒவ்வொரு நாளும் தமிழ் படித்ததை
எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.
பேரானந்தமடைகிறேன்.
பெரிய அளவில் எதுவும் எழுதவில்லை
என்றாலும்
இன்னும் நான் அதிகமாக
எழுத வேண்டும். இன்னும் அதிகப்படியாக
வாசிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை
இந்தப் புதிய ஆண்டு
எனக்குக் கொடுத்திருக்கிறது.
.
தரமான கட்டுரைகள் தரவேண்டும்
என்ற கடமை உணர்வும்
கூடவே முன் வந்து நிற்கிறது.
வல்லமை தாராயோ
என்ற பாரதியின் சொல்லையே
கடனாக வாங்கி
வல்லமை தாராயோ
வாழ்நாள் எல்லாம்
தமிழாய் வாழ்ந்திட
என்ற வேண்டுதலை
இறைவனிடம் வைத்து
நிறைவு செய்கிறேன்.
புத்தாண்டில்
புதுமைகள் நிகழட்டும்.
புன்னகை தவழட்டும்.
மகிழ்ச்சி மலரட்டும்.
மனம் விரும்பிதெல்லாம்
நடைபெறட்டும்!
நன்றியும் வாழ்த்துதலும்
இன்றும் என்றும்!
.
புத்தாண்டில் உங்கள் அனைத்து அனுபவங்களுக்கும் எழுத்து வடிவம் தந்து எங்களை மகிழ்விக்க வாழ்த்துகிறேன்.
ReplyDelete