பெயரெச்சம் என்றால் என்ன?

பெயரெச்சம் என்றால் என்ன?


முற்று பெறாத ஒரு வினைச்சொல்
ஒரு பெயரைக் கொண்டு முடியுமானால்
அது பெயரெச்சம் எனப்படும்.

எடுத்துக்காட்டு:

வந்த மாணவன்.
படித்த பையன்.
ஓடிய குதிரை
பாடிய குயில்.
வாழ்ந்த வீடு.

ஓடிய குதிரை

ஓடிய  என்பது முற்றுபெறாத வினைச்சொல்.

குதிரை  - பெயர்ச்சொல்

இப்படி முற்றுபெறாத வினைச்சொல்
ஒரு பெயரைக் கொண்டு முடிவதால்
இது பெயரெச்சம் எனப்படும்.

இப்போது உங்களுக்கு ஒரு ஐயம் எழலாம்.

அது என்ன பெயரெச்சம்?

எச்சம் என்றால் முற்றுபெறாத சொல்.

இங்கே முற்றுபெறாத சொல் ஓடிய
என்ற வினைச்சொல்.

அப்படியானால் வினையெச்சம் 
என்றுதானே எழுத வேண்டும்

அது எப்படி பெயரெச்சமாகும்? என்று
உங்களுக்குள் ஒரு சிறு ஐயப்பாடு
எழலாம்.
நான் படிக்கும் காலத்தில் அப்படி
எனக்குள் ஒரு ஐயம் எழுந்தது.
அதனால்தான் இந்தக் கேள்வியை 
இங்கே உங்கள் முன் வைக்கிறேன்.


இங்கு நாம் குறிப்பிடுவது
குதிரையைத்தான்.


அதனால் குதிரை என்ற பெயர்ச்சொல்தான்
முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

அதனால்தான் ஓடிய குதிரை என்பது 
பெயரெச்சம்.
 இப்படி நானாகவே
விளங்கிக் கொண்டேன்.

இப்படியே நீங்களும் மனதில் பதிய 
வைத்துக் கொள்ளுங்கள்.
அல்லது பெயெரெச்சமா?
வினையெச்சமா என்ற குழப்பம்
நீடித்துக் கொண்டே இருக்கும்.


பெயரெச்சத்தின் வகைகள் :

பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம்,
குறிப்பு பெயரெச்சம் என இரண்டு
வகைப்படும்.

1.தெரிநிலை பெயரெச்சம் :

ஒரு செயலையும் காலத்தையும்
வெளிப்படையாகத் தெரியுமாறு
காட்டும் வினையெச்சச் சொல்
பெயரைக் கொண்டு முடிந்தால்
அது தெரிநிலைப் பெயரெச்சம்
எனப்படும்.


அ, உம் ஆகிய இரண்டு விகுதிகள்
பெரும்பாலும் தெரிநிலை பெயரெச்சத்தில்
 காணப்படும்.

படித்த மாணவன்
படிக்கின்ற மாணவன்
படிக்கும் மாணவன்


மேலும் சில எடுத்துக்காட்டுகள் உங்களுக்காக

கேட்ட பாட்டு
கற்ற கல்வி
பெற்ற செல்வம்
நின்ற சிறுவன்
பாடிய பாடல்

2.குறிப்பு பெயரெச்சம் :

காலத்தினையோ செயலையோ உணர்த்தாமல்
பண்பினை மட்டும் உணர்த்தி நிற்கும்
ஒரு வினைச்சொல் பெயரைக்
கொண்டு முடியுமானால் அது 
குறிப்புப் பெயரெச்சம்.

நல்ல மாணவன்.

நல்ல என்பது ஒரு முடிவுபெறாத
சொல்.

இது காலத்தை உணர்த்தியிருக்கிறதா?
என்றால் இல்லை.

செயலை உணர்த்தியிருக்கிறதா ?
என்றால் இல்லை.

அதனால் இது குறிப்புப் பெயரெச்சம்.


நல்ல பூ 
நல்ல மனிதர்
நல்ல புத்தகம் 
நல்ல வீடு.
நல்ல நண்பன்.

அழகிய கவிதை
புதிய பாடம்
பழைய சோறு
கரிய உருவம்
நெடிய பனை
பெரிய வீடு

எதிர்மறைப் பெயரெச்சம்


பாடாத குயில்
ஓடாத மான்
பேசாத பெண்
கேட்காத செவி
பெய்யாத மழை
மலராத பூ
வீசாத தென்றல்

இதில் பாடாத ,ஓடாத ,பேசாத ,கேட்காத,
பெய்யாத ,மலராத , வீசாத
ஆகிய வினையெச்சச் சொற்கள் எதிர்மறைப் பொருளை
உணர்த்துகின்றன.
ஆனால் பெயரைக் கொண்டு
முடிகின்றன.

இதனால் இதனை எதிர்மறைப்
பெயரெச்சம் என்கிறோம்.



ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்:


ஈற்றெழுத்து கெட்டு 
அதாவது மறைந்து
எதிர்மறைப்
பொருளில் வரும் பெயரெச்சம்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும்.


வாடா மலர்

வாடாத  என்ற சொல் ஈற்றெழுத்து
இல்லாமல் வாடா  என்று
வந்துள்ளதைக் காண்க.

அதனால் வாடா மலர் ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சமாகும்.


மாறா அன்பு
பொய்யா மொழி
தேரா மன்னன்
பெய்யா மழை


( குறிப்பு : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில்
க,ச ,த ,ப   என்ற  வல்லினம் மிகும் என்பதையும்
நினைவில் வைத்துக் கொள்க .
அப்போதுதான் எழுதும்போது
தவறு வராது.)

செல்லாக் காசு
கேளாச் செவி
ஓயாத் தொல்லை
அழியாப் புகழ்
வணங்காத் தலை
வளையாச் செங்கோல்
உலவாத் தென்றல்
பேசாப் பேச்சு


நினைவூட்டலுக்காக:


முற்று பெறாத ஒரு வினைச்சொல் பெயரைக்
கொண்டு முடியுமானால்
அது பெயரெச்சம் எனப்படும்.

பெயரெச்சம் பெயரைக் கொண்டு
முடியும் என்பதை நினைவில்
கொள்க.



Comments

Popular Posts