போகி பிறந்த கதை

போகிப் பண்டிகை பிறந்த கதை




கதை இல்லாமல் பண்டிகைகள் இல்லை.
யோகிக்குக் கதை இருக்கும்போது
போகிக்குக் கதை இல்லாமல்
இருக்குமா என்ன?

போகிக்கும் கதை ஒன்று இருக்கிறது.

ஒரு கடினமான சூழலுக்குப் பிறகு
கிடைக்கும் நன்மையைக் கொண்டாடி
மகிழ்வது தான் பண்டிகைகள்.

அந்தவகையில் போகியும் கடினமான
காலத்தைக் கடந்து வந்து விட்டோம்
என்ற மகிழ்ச்சியை அனைவருக்கும்
தெரிவிக்கும் முகமாகவே கொண்டாடப்படும்
ஒரு பண்டிகையாகும்.

பழையவை ஒழிந்தன.
தொல்லைகள் தொலைந்தன.
கர்வம் ஒழிந்தது.
களிப்பு வந்தது.

புதியவை புகுந்தன.
புத்தொளி பிறந்தது
என்ற ஒரு புதுமையான எண்ணத்தோடு
போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

புதிய வாழ்க்கையை எதிர்பார்த்து
பழைய குப்பைகளை எல்லாம் முற்றிலுமாக
அகற்றி தூய்மையோடு வருங்காலத்தை
எதிர் நோக்கி கொண்டாடப்படும்
பண்டிகை  போகிப் பண்டிகை.


போகிப் பண்டிகை பற்றிய
புராணக் கதை ஒன்று உள்ளது.

மழை கடவுள் இந்திரன்.

நீரின்றமையாது உலகம்.

நீர் என்றால் உயிரல்லவா?
நீராதாரம் மழை.

இந்திரனுக்கு எப்போதுமே மனதில்
ஒரு கர்வம் உண்டு.

என்னால்தான் மாதம் மும்மாரி பொழிந்து
நாட்டில் நல்ல விளைச்சல் ஏற்படுகிறது
என்று ஆணவமாக இருப்பான்.


தன்னால்தான்
நாட்டு மக்கள் எல்லாம் நலமாக 
வளமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அப்படியானால் எனக்கு மட்டுமே
அவர்கள் விழா எடுத்துக் கொண்டாட
வேண்டும் என்று நினைத்தான் இந்திரன்.

இந்திரனின் இந்தக் கர்வத்தை அடக்க
நினைத்தான்  கண்ணன்

அதனால் கோகுலத்தில் வாழ்ந்து வந்த
கண்ணபிரான் கோவர்த்தன மலைக்கு
வழிபாடு செய்யும்படி கோகுல மக்களிடம்
கேட்டுக் கொண்டான்.
இதனால் மக்கள் அனைவரும்
கோவர்த்தன மலைக்கு விழா 
எடுத்து கொண்டாடினர்.

 
இதை அறிந்த இந்திரனுக்கு
கோபம் என்றால் கோபம் 
பெருங்கோபம்.

அதெப்படி நான் மழையை அனுப்பினேன்.
நீங்கள் விளைச்சலைப் பெற்றீர்கள்
மகிழ்வான வாழ்க்கை உங்களுக்கு
அமைந்தது.
இப்போது என்னை மறந்துவிட்டு
கண்ணன் சொன்னான் என்பதற்காக
கோவர்த்தன மலையை வழிபடுகிறீர்களா?


இது தவறாக இருக்கிறதே?

இவர்களுக்குச் சரியான பாடம் 
புகட்ட வேண்டும் என்று நினைத்தான்.

என்ன செய்யலாம்.?
....வேண்டாம் வேண்டாம்
என்று சொல்லுமளவிற்கு விடாமழையைக்
கொடுத்து இவர்களை துன்பத்திற்குள்ளாகினால்
என் காலடியில் வந்து விழுவார்கள்
என்று நினைத்தான் இந்திரன்.
ஏழுநாட்கள் விடாமழையை ஏவிவிட்டான்.

அடைமழை ஏழு நாட்கள் பெய்தால்
என்னாவது?

குளம் குட்டை எல்லாம் உடைப்பெடுத்து
ஓடின.
ஊரெங்கும் தண்ணீர்.
மக்கள் என்ன செய்வதென்று அறியாது
திகைத்து நின்றனர்.

கண்ணனிடம் ஓடினர்.

கண்ணா!
நீ சொன்னதால் தானே நாங்கள்
கோவர்த்தன மலையை வழிபட்டோம்.
இந்திரன் எங்கள்மீது 
கோபம் கொண்டு மழையை
ஏவிவிட்டு விட்டானே!

இப்போது நாங்கள் என்ன செய்வது? 
நீதான் இந்தச் சிக்கலிலிருந்து
எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று
முறையிட்டனர்.

கண்ணன் பார்த்தான்.
இத்தனை பேரையும் மழையிலிருந்து
காப்பாற்ற வேண்டுமானால்
அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது.

கோவர்த்தன மலையைக் 
குடையாகப் பிடித்து இந்த மக்களை
எல்லாம் காப்பாற்றுவதைத்
தவிர வேறு வழியில்லை.

கோவர்த்தன மலையை 
தனது ஒற்றைவிரலில் அப்படியே
குடையாகத் தூக்கிப் பிடித்து
ஒட்டுமொத்த மக்களையும் 
மழையிலிருந்து காப்பாற்றினான்.

இதை அறிந்த இந்திரனுக்கு 
என்ன செய்வதென்று
தெரியவில்லை.
என்னவொரு வல்லமை.!
ஆச்சரியப்பட்டு
அப்படியே நின்றுவிட்டான்.
என்னைவிட இந்த கண்ணன்
சிறந்தவன்தான் என்று
கண்ணனை எண்ணிப்
பெருமைப்பட்டுக் கொண்டான்.


நேரே கண்ணனிடம் வந்தான்.

கண்ணா!

நீராதாரமே என் கையில்தான்
இருக்கிறது.
என்னால்தான் இவ்வுலகம் வாழ்ந்து
கொண்டிருக்கிறது. நான் இல்லை என்றால்
இவ்வுலகில் ஒரு ஜீவராசிகள் கூட
வாழ்ந்துவிட முடியாது.அதனால்
என்னை விடப் பெரியவன் இவ்வுலகில்
எவனும் இல்லை என்று இதுவரை
 ஆணவத்தோடு இருந்தேன்.
 
ஆனால் மலையைக் குடையாகப்
பிடித்து  ஒரு நொடியில் என்
ஆணவத்தை தவிடுபொடியாக
நொறுக்கிவிட்டாய்.
நீதான் என்னை விடப் பெரியவன்
என் ஆர்வம் இன்றோடு அழிந்தது

என்று கண்ணனிடம் இந்திரன்
சரணடைந்துவிட்டான்.

இந்திரனின் கர்வம் 
அடியோடு அழிந்தது.

என்ன இருந்தாலும் மழைக் கடவுள்
இந்திரன் அல்லவா?

அவரைக் கொண்டாடாமல்
 அப்படியே விட்டுவிடலாமா?
 அவருக்கும் ஒரு விழா எடுப்பதுதான்
 சிறப்பாக இருக்கும்.
 
 அதனால்  இந்திரன் கர்வம் தொலைந்த
 இந்த நாளில் அதே இந்திரனுக்கு
 இந்திரவிழா எடுத்துக்
 கொண்டாடும்படி கண்ணன் 
 கேட்டுக் கொண்டானாம்.
 
 அதனால் அந்தநாளில் இந்திர விழா எடுத்து
 இந்திரனையும் மகிழ்ச்சிபடுத்துவது
 வழக்கமாக நடைபெற்று வருகிறதாம்.
 
 அதுதான் போகிப்
 பண்டிகையாக இன்றுவரை
 கொண்டாடப்பட்டு வருகிறது
 என்பது புராண வரலாறு கூறும்
 செய்தி.

 போகி என்றால் மகிழ்ச்சி.
மகிழ்ச்சியைக் கொண்டாடும்போது
மனமும் இடமும் தூய்மையாக 
இருக்க வேண்டியது
அவசியமல்லவா?

அதனால்தான் போகிப் பண்டிகை நாளில்
பழைய பொருட்களை எல்லாம் எரித்து
இருந்த இடத்தைத் தூய்மைப்படுத்து
கின்றனர்.பயன்படாத பழைய
பொருட்களை எல்லாம் எரிக்கின்றனர்.

 மனமும் தூய்மையாக கர்வமற்றதாக
இருக்க வேண்டுமல்லவா?
கர்வம் ஒழிந்த நாளை
 நினைவில் கொள்வதற்காக
இந்திரவிழா.

விழாக்கள் என்றாலே மகிழ்ச்சிதானே!
அந்த மகிழ்ச்சியோடு
இரண்டாம் வகுப்பில் படித்த ஒரு பாடல்
ஒன்று என் நினைவுக்கு வருகிறது.

நீங்களும் படித்திருந்தால் நினைவு
படுத்திப் பாருங்கள்.

பாடல் உங்களுக்காக.....



கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார்மேக வண்ணனாம்

வெண்ணெய் உண்ட கண்ணனாம்
மண்ணை உண்ட கண்ணனாம்

                          -    (  கண்ணன் எங்கள்....)

குழலினாலே மாடுகள்
கூடச் செய்த கண்ணனாம்

கூட்டமாகக் கோபியர்
கூட ஆடும் கண்ணனாம்

                              - (   கண்ணன் எங்கள்......)


மழைக்கு நல்ல குடையென
மலைபிடித்தக் கண்ணனாம்

நச்சுப் பாம்பு மீதிலே
நடனமாடும் கண்ணனாம்


                           - ( கண்ணன் எங்கள்.... )


கொடுமைமிக்கக் கம்சனை
கொன்று வென்ற கண்ணனாம்

தூது சென்று பாண்டவர்
துயரம் தீர்த்தக் கண்ணனாம்

 கண்ணன் எங்கள் கண்ணனாம்
 கார்மேக வண்ணனாம்
 
 வெண்ணை உண்ட கண்ணனாம்
 மண்ணை உண்ட கண்ணனாம்


நினைவு வருகிறதா?...



ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு
புராணக்கதையைச் சுமந்து நிற்கிறது.

போகிப்பண்டிகைக்கைக்கான கதை

"மழைக்கு நல்ல குடையென
மலைபிடித்தக் கண்ணனாம்"

என்ற வரியில் பொதிந்து கிடந்திருந்திருக்கிறது
என்பது இப்போது புரிந்திருக்குமே!

புராணக் கதைகளைச் சொல்லித்தரும்
அருமையான பாடல் !










Comments

Popular Posts