சேமிக்க பழக்கிய சின்னப்பிள்ளை

                      சேமிக்க பழக்கிய சின்னப்பிள்ளை


நமக்குத் தெரிந்த ஒரு செயலை நமக்கு பரிச்சயமானவர்களோடு இணைந்து செயலாக்கம் கண்டால் செய்ய இயலாதது என்று எதுவுமே இல்லை.
            நாம் செய்ய நினைக்கும் செயலுக்கு கை கொடுக்க ஒரு கரம் கிடைத்தால் போதும் நாம் எளிதில் மேலேறி வந்துவிடலாம்.
            உழைக்கத் தெரியும். உழைத்தப் பணத்தை உரிய முறையில் பத்திரப்படுத்தத் தெரியாது.
            ஊதாரி கணவன்.நாலு பிள்ளைகளைப் பெத்து வைத்துவிட்டு அவள் என்ன செய்வாள் ?
            ஐந்தும் பத்துமாய் சேமித்து வைத்தால் நாளைக்கு பிள்ளைகள் படிப்பிற்கு ஆகும்.
            எச்சூழலிலும் யாரிடமும் கையேந்தும் நிலை ஏற்படாது.
   ஆனால் பருப்பு டப்பாக்குள்ளும் அரிசிப் பானைக்குள்ளும்   பதுக்கி வைத்திருந்தப் பணம் பல நேரங்களில் காணாமல் போய்விடுகிறதே.
   சேமித்த பணத்தை எப்படி பாதுகாப்பது என்று தெரியாமல் விழித்தவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்ட வந்தவர்தான் சின்னப்பிள்ளை.
   இப்போது இவர் தமிழகத்துப் பெரிய பிள்ளை.பெருமைக்குரிய பிள்ளை.
   பெருமையும் சிறுமையும் அவரவர் கருமத்தால் அறியப்படும்.
   இந்த சின்னப்பிள்ளை செய்த பெரிய காரியம் தான் என்ன?
   வெள்ளி முளைக்கும் முன்னே கள்ளிக் காட்டிடையே துள்ளி நடைபோட்டு உழைக்கத் தெரியும்.
    ஆனால் கடின உழைப்பால் வந்த பணத்தைப் பாதுகாப்பாக வைக்கத் தெரியாது.
    கீழே விழுந்து அடிபட்டு வருகிறான் பிள்ளை.
    ஆளாளுக்கு ஓடி வந்து ஆளுக்கொரு மருந்து கூறுகின்றனர்.
    அப்போது ஒரு பெண் ஓடி வந்து காப்பிப் பொடி வைத்து அழுத்திப் பிடித்தால் இரத்தப்போக்கு உடனே நின்றுவிடும் என்கிறாள்.
    காப்பிப் பொடிக்கு எங்கு போவது?
    காப்பி தண்ணி குடித்தே நாலு நாளாயிற்றே.
     மலங்க மலங்க விழிக்கிறாள்.
     கூரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொங்கிக் கொண்டிருக்கும் நூலாம்படையை எடுத்து இரத்தம் வரும் இடத்தில் வைத்து அமுக்கிப் பிடிக்கிறாள்.
     அவளுக்குத் தெரிந்த மருத்துவம் அது தான்.
     இது ஆராயி வீட்டில் மட்டுமல்ல.
     கிராமத்தில் பல வீடுகளில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுதான்.
     நாளும் உழைத்தும் நாலு காசு கையில் இல்லை.
      ஏதோ ஒன்று இரண்டு சேமித்து வைத்தால் அதுவும் குடிகார கணவன்மார் கண்களுக்குத் தப்புவதில்லை.
      இப்படி கையைப் பிசைந்து நின்றவர்களுக்கு கைபிடித்து விட வந்து நின்றவர் இந்த சின்னப்பிள்ளை.
      ஒன்றும் இரண்டுமாய் சேமித்தப் பணத்தைப் பானைக்குள் பதுக்கி வைப்பதால்தான் பறிகொடுக்க வேண்டியது இருக்கிறது.
      சேமித்தப் பணத்தை ஒரு குழுவிடம் தந்து வைத்தால் ஆத்திர அவசரத்துக்கு உதவுமே என்று சொல்லி புரிய வைத்தார் சின்னப்பிள்ளை.
      கிடைக்கும் பணத்தைக் கொடுத்து வைக்க ஓர் இடம் வேண்டுமே.
      அதற்காக ஓர் அமைப்பை ஏற்படுத்தினார்.
      முதலில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே இந்த குழுவில் இணைந்தனர்.
      நாளடைவில் மளமளவென்று உறுப்பினர் எண்ணிக்கை கூடியது.
      பிள்ளைகள் படிப்புச் செலவு , திருமணம் என்று எல்லாவற்றுக்கும்
    சேமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
    உறுப்பினர் எண்ணிக்கை பெருகபெருக பலகுழுக்கள் உருவாக்கப் பட்டது.
    கிராமத்துப் பெண்களிடம் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கியவர் சின்னப்பிள்ளை .
    அவர்  அன்று விதைத்த சிறு விதை இன்று ஆல மரமாக வளர்ந்து நிற்கிறது.
    சின்னப்பிள்ளை 2004 ஆம் ஆண்டு அன்றைய பாரத பிரதமர் கையால் விருது பெற்றவர்.
    அந்த நிகழ்வின்போது பிரதமர் வாஜ்பாயைத் தன் காலைத் தொட்டு ஆசி பெற வைத்து ஒட்டு மொத்த உலகத்துப் பார்வையையும் ஒரு நொடியில் தன் பக்கம் திரும்ப வைத்த பெருமைக்கு உரியவர்.
     இன்று பாரதத்தின் உயரிய விருதான பத்மஶ்ரீ
    பட்டத்தைப் பெற்றதன் மூலம் பாரதத்தின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியவர்.
        பெண்கள் பெருமைப்படும் செயலுக்கு உரியவர்.
    தன்கையே தனக்கு உதவி என்ற தன்னம்பிக்கை விதையைத் தூவிய சின்னப்பிள்ளை ஒரு சாதனைப் பெண்மணி. சரித்திர நாயகி.
   
   
   
 
  
        

Comments

Popular Posts