காமராசர்
காமராசர்
காமராசர் அங்கம் கறுப்பு
உள்ளம் பாலினும் வெளுப்பு
இல்லை இவருக்கு வெறுப்பு
அனைவருக்கும் தந்தார் படிப்பு
திட்டம் தீட்டுவதில் தெரியும் பொறுப்பு
மதிய உணவு திட்டம் அதில் முத்தாய்ப்பு
அணைகள் யாவும் அவருக்கு சிறப்பு
எளிமைதான் அவர் விருப்பு
காமராசர்மேல் எப்போதும்
எமக்கு உண்டு பேரன்பு
தந்தை குமாரசாமிக்கும் தாயார் சிவகாமி
அம்மாளுக்கும் பேர் விளங்க பிறந்த
பிள்ளை காமராசர்.
இவர் பிள்ளைப் பருவத்தில் தடம் பதித்து மகிழும்
பேறுபெற்ற ஊர் விருதுநகர்.
என்ன தவம் செய்ததோ விருதுநகர் பெருநகர்.
இந்தத் தலைமகனாம் நல்மகனை
தமிழ் மண்ணுக்கு ஈந்து
வரலாற்றில் நிரந்தர இடம்
பிடித்துக் கொண்டது விருதுநகர் .
காமராசர் தமிழர் என்பதில் எமக்கு
உண்டு பெருமையினும் பெருமை.
எளிமை அவருக்குச் சொந்தம்.
ஆனால் எளியவர் யாவரும்
அவருக்குச் சொந்தம்.
பொற்கால ஆட்சி தந்த புதுமை மனிதர்
இவர்.
.இவர் முதல் மந்திரியாக இருந்தபோது,
வயிற்றுக்குச் சோறின்றி பள்ளிக்குப்
போகாமல் மாடு மேய்த்துக் கொண்டிருந்த
ஒரு சிறுவனைக் கண்டார்.
" பள்ளிக்கு ஏன் செல்லவில்லை "என கேட்டார். " நான் பள்ளிக்கு சென்று விட்டால் சோறு யார் தருவார்?"
எதிர் கேள்வி கேட்டான் சிறுவன்.
" சோறு தந்தால் பள்ளிக்கு வருவாயா? "
என்றார் காமராசர்.
" ஓ...கண்டிப்பாக" என்றான் சிறுவன்.
அன்றே அவர் உள்ளத்தில் உதயமானதுதான்
மதிய உணவு திட்டம்.
" வயிற்றுக்கு சோறிட வேண்டும்
இங்கு வாழும் உயிர்களுக்கெல்லாம்"
என்பதற்கு இணங்க வயிற்றுப்பசியை போக்கி
கல்வி அளிக்க நினைத்தது காமராசரின்
தாயுள்ளம்.
வயிற்றில் பசி இருக்கும்போது
செவிக்கு உணவளிப்பது பயனளிக்காது.
அதனால் மாணவர் வயிறார உண்டு ,
நெஞ்சார வாழ்த்தி, மனம் ஒன்றிப் படிக்க
வழிவகை செய்தார்.
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.
வயிற்றுப்பசியை நீக்கினால்
மட்டுமே அறிவுப்பசியைத் தூண்ட
முடியும் என்ற உளவியலை நன்கு
அறிந்தவர் காமராசர்.
உடுக்கும் உடையிலும் ஏற்றத்தாழ்வு
இருந்திட கூடாது என நினைத்தார்.
பள்ளியில் சீருடை திட்டம் தந்தார்.
அப்படி இப்படி இருக்கும் அரசியலில்
இப்படித்தான் இருக்க வேண்டும் என
வாழ்ந்து காட்டியவர் காமராசர்.
அதிகம் பேசாதவர்.
"ஆகட்டும் பார்க்கலாம் "என்ற ஒற்றை வரிக்குள் உள்ளங்களைக் கட்டிப் போட்டு வைத்தவர்.
ஆகட்டும் பார்க்கலாம் என்று அவர்
சொல்லி விட்டால் அந்த பணி கண்டிப்பாக
முடித்துக் கொடுக்கப்படும்.
அதனால்தான் கர்மவீரர் என்று பாராட்டப்பெற்றார்.
நீர் மேலாண்மையைத் திறம்பட
கையாண்டு அணைகள் கட்டி வறட்சி
இல்லா தமிழகத்தை உருவாக்கினார்.
காமராசர் ஒரு அரசியல் சாணக்கியர்.
ஆட்சிக்கும் கட்சிக்கும் தனித்தனி
தலைமை இருக்க வேண்டும் என்று
நினைத்தவர் காமராசர்.
அதனால் தான் காங்கிரஸ் கட்சி தலைவராக
இருந்தபோது பக்தவத்சலம் அவர்களை
தலைமை அமைச்சராக்கினார்.
தன்னலம் கருதாது மக்கள் பணி ஆற்றிய மாமேதை.
படிக்காத மேதை.
ஊர்கள்தோறும் படித்த மேதைகளை
உருவாக்க பள்ளிகள் திறந்தார்.
மூன்று பிரதமர்களைத் தந்த பெருமை
காமராசர் உண்டு.
காமராசர் ஒரு தாய்.
அதனால்தான் மக்களின் வயிற்றுப்பசியைப்
போக்கும் திட்டங்களுக்கு முதலிடம் தந்தார்.
காமராசர் ஒரு தந்தை.
அதனால் மக்களின் அன்றாட தேவைகளைப்
பூர்த்தி செய்யும் திட்டங்களில்
அதிக கவனம் செலுத்தினார்.
காமராசர் ஒரு மதி மந்திரி.
அதனால்தான் மதிநுடாபமாக
தொலைநோக்குத் திட்டங்களில்
அதிக கவனம் செலுத்தினார்.
காமராசர் ஒரு விவசாயி.
அதனால்தான் நீர் ஆதாரங்களை
மேம்படுத்துவதின் அவசியத்தை உணர்ந்து
அணைக்கட்டுகளைக் கட்டினார்.
காமராசர் ஒரு சரித்திரம்.
அதனால்தான் என்றென்றும் உலக அரசியலில்
தனி இடம் பிடித்துள்ளார்.
This is very beautiful.
ReplyDelete