அத்துமீறல்

                             அத்துமீறல்


படுக்கையில் படுத்திருந்த நளினியின் முகத்தில் யாரோ டார்ச் அடித்தது போல் இருந்தது.
      தூக்கத்தில் இருக்கும் போது யார் இப்படி மூஞ்சியில் டார்ச் அடிப்பது?
      பொசுக்கென்று வந்த கோபத்தில் கண்களைத் திறக்காமலேயே கத்தினாள் சுமதி.
      பதில் வராமல் போகவே கண்களைக் கசக்கியபடி விழித்துப் பார்த்தாள்.யாருமில்லை....மறுபடியும் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
      ஆனால் யாராக இருக்கும் என்ற நினைப்பில் தூக்கம் வர மறுத்தது.
      பொழுதாகி விட்டது .இன்னும் எழும்பாமல் தூங்குகிறா பாரு...பொட்டப் பிள்ளையா இவ ...என்ற அம்மாவின் அர்ச்சனைக்குப் பிறகு தான் நாள்தோறும் பொழுது விடியும்.
      இது என்ன ஒருநாளும் இல்லாத திருநாளாக இன்று டார்ச் அடித்து எழுப்புறாங்க.
      இருக்கட்டும் இருக்கட்டும்...இது எல்லாம் அந்த சங்கருடைய வேலையாகத் தான் இருக்கும்.
      மறுபடியும் வந்து டார்ச் அடிக்கட்டும்.அப்போ வச்சுக்கிறேன்
      அவனுக்கு கச்சேரி.டார்ச்சைப் பிடுங்கி நச்சென்று நடு மண்டையில் ஒன்று கொடுக்கிறேன் கறுவிக் கொண்டே படுத்திருந்தாள்.
      அரைமணி நேரம் ஆகிவிட்டது. இன்னும் யாரும் வந்து எழுப்ப வரவில்லை.
      மெதுவாக எழும்பினாள். கண்களைக் கசக்கியபடியே அறையை விட்டு வெளியே வந்தாள்.
      எதிரே அண்ணன்.கண்டும் காணாதது போல் கைபேசியில் கைகளை அளையவிட்டபடி சென்றான்.
      எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கும் அவனுக்கு?
      தூங்கும்போது முகத்தில் டார்ச் அடித்து விட்டு இப்போது ஒன்றும் தெரியாதவன் போல் போகிறான்.
      ஏய் சங்கர் நில்லு. நீ தானே என் மூஞ்சியில் டார்ச் அடிச்சது.
      சீ...போ ஆளப்பாரு விடிஞ்சும் விடியாமலும் வந்துட்டா சண்டைக்கு.
      போய் முதலில் பல்லை விளக்கு.கைபேசியில் இருந்து கையை எடுக்காமலே இடத்தை விட்டு நடையைக் கட்டினான்.
      எங்க போற...இப்ப நீ சொல்லப் போறியா இல்லையா? எனக்கு இப்ப தெரிஞ்சாகணும்.சட்டையைப் பிடித்து இழுத்து கேட்டாள்.
      அட...சும்மா போவியா ஒருத்தி .போ போ எதுவும் கேட்கணும் என்றால் அம்மாவிடம் போய் கேட்டுக்கோ.
      கையைப் பிடித்து தள்ளி விட்டு விட்டு நகர முயன்றான்.
      நில்லுடா....சும்மா மழுப்பாத .என்முகத்துல நீதானே டார்ச் அடிச்ச..இப்போது நேரடியாகவே கேட்டுவிட்டாள் சுமதி.
      என்னது உன் முகத்தில் நான் டார்ச் அடிச்சேனா? ஏதாவது சொப்பனம் கிப்பனம் கண்டியா?
      நீ என் முகத்தில் டார்ச் அடிக்கல .உண்மையை சொல்லு.உலுக்கி எடுத்தாள் சுமதி.
      ஆமா உன் மூஞ்சியை டார்ச் அடிச்சி தானே பார்க்கணும்.
      சும்மா தெரியவா போகுது...நேரம் காலம் தெரியாமல் கிண்டல செய்தான் சங்கர்.
      உன்னை எல்லாம்...பல்லை நறநற வென்று கடித்தபடி நாற்காலியில் போய் அமர்ந்தாள்.
      ஆனாலும் நினைப்பு முழுவதும் யார் டார்ச் அணிந்திருப்பார்கள் என்று கண்டுபிடிப்பதிலேயே இருந்தது.
      ஏதாவது அமானுஷ்ய சக்தியாக இருக்குமா?
      நாளை பின்ன அந்த அறையில் எப்படி தூங்குவது?
      நாற்காலியில் இருந்து எழுந்து அங்குமிங்கும் நடந்தாள்.
      சரி .என்ன நடந்தாலும் சரி.இன்று கண்டுபிடித்தே ஆகவேண்டும்.ஒரு முடிவோடு மறுபடியும் அறைக்குள் போய் கதவைச் சாத்திக் கொண்டாள்.
      கட்டிலில் படுத்தபடியே தீர்க்கமாக யோசித்தாள்.
      ஒரு பிடியும் கிடைக்கவில்லை.எழும்பி தலையணையை எடுத்து மறு பக்கமாக வைத்தாள்.
      அப்படியே படுக்கையில் சாய்ந்து கண்களை மூடினாள்..
      மறுபடியும்  யாரோ டார்ச் அடிப்பது போல இருந்தது.
      கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று விருட்டென்று எழும்பினாள்.
      அங்கே அவள் கண்ட காட்சி அப்படியே தூக்கிவாரிப் போட்டது.
      நாணத்தால் தலை குனிந்தாள்.கூரையின் ஓட்டை வழியாக ஆதவனின் அத்துமீறல் நடந்து கொண்டிருந்தது.
     
     
       

Comments

Popular Posts