வெல்லும் சொல்
வெல்லும் சொல்
சொல்லைப் பற்றி எங்களிடமேயா?
அட...போங்கங்க...
நாங்கள் சொல்லுவதையும் சொல்லுவோம்.
சொல்லாததையும் கூட சொல்லுவோமில்ல...
கூட்டிச் சொல்லணுமா?கழித்துச் சொல்லணுமா?
பெருக்கிச் சொல்லணுமா ? வகுத்துச் சொல்லணுமா?
எல்லாம் கணக்குப் போட்டு பேசுவோமில்ல...
கணக்குப் போட்டுப் பேசுவது எல்லாம் சரிதான்.
கணக்கில்லாமல் பேசிவிட்டு பேந்த பேந்த என்று எத்தனை இடங்களில் விழித்திருப்போம்.
" ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே
கண்டதைச் சொல்லி நாவினைக் கடித்த
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே"
மனதிற்குள் இந்த பாடல் ஓடுவதுபோல் கேட்கிறதே.
அதனால்தான் வெல்லும் சொல் அறிந்து பேசுதல் வேண்டும் என்கிறேன்.
" வெல்லும் சொல்... கொல்லும் சொல் ...அனைத்தும் யாம் அறிவோம்...."
"அனைத்தும் அறிந்து விட்டால் ... நீங்கள் பேசும் சொல் யாவும் சரியான சொல் என்று ஆகிவிடுமா .?
"வேறென்ன வேண்டும்....
சுட்ட சொல் வேண்டுமா ?சுடாத சொல் வேண்டுமா?"
"அட...நீங்கள் சுட்ட சொல் என்றதும்தான் எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது."
நாவற்கனி பறித்துத் தரும்படி கேட்கிறார் ஔவை.
" சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா "என்று கேட்டு ஔவையையே சொல்லால் மடக்குகிறான் சிறுவன்.
இதுதாங்க வெல்லும் சொல்.
ஔவையையே வென்ற சொல்.
பேசும் வார்த்தைகள்தான் ஒருவருடைய வெற்றியைத் தீர்மானிக்கும்.
சொற்கள் உயிருள்ளவை. அதனால் பேசுவதில் கவனம் வேண்டும்.
ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும் என்று கூறுவார்கள்
சொல்லை தவறாக பயன்படுத்திவிட்டால் தீராத பழிதான் வந்து சேரும்.
கோவலன் அரசியின் காற்சிலம்பை களவாடியதாக குற்றம் சாட்டப்பட்டான்.
பாண்டிய மன்னன் முன் கொண்டுவந்து நிறுத்தப்படுகிறான்.
மன்னன் எதைப் பற்றியுமே யோசிக்கவில்லை.
சிலம்பு கிடைத்துவிட்டது .அவ்வளவுதான் இனி அதற்குமேல் என்ன விசாரணை என்று நினைத்துவிட்டான்.
"கொன்று அக்கள்வனை கொணர்க" என்று ஆணையிட்டான்.
மன்னன் பேச்சுக்கு மறுபேச்சு ஏது?
வீரர்களும் மன்னன் ஆணைப்படி கோவலனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வந்து தந்தனர்.
கள்வனா? இல்லையா? என்பதை விசாரித்த பின்னர் அல்லவா மன்னன் தீர்ப்பளித்திருக்க வேண்டும்.
ஆராயாமல் தீர்ப்பளித்து தீராத களங்கத்தைத் தேடிக் கொண்டான் பாண்டிய மன்னன்.
மன்னனின் கொல்லும் சொல்லால் கோவலனும் கொலை செய்யப்பட்டான்.
மன்னனும் உயிரிட நேர்ந்தது.
இப்படித்தாங்க...ஒன்று சொல்ல வந்து ...வேறு ஒன்றை சொல்லி மாட்டிக்கொண்டு மலங்க மலங்க விழிப்போம்.
இதற்கு பாண்டிய மன்னனும் விதிவிலக்கா என்ன?
சொற்களை மாற்றி சொல்லிவிட்டால் அதற்கு வேறு பொருள் கற்பிக்கப்பட்டுவிடும்.
தகுந்த நேரத்தில் சொல்லப்பட்ட சொற்கள் வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்கு சமம் என்பார்கள்.
இப்படிதாங்க ... இரண்டாம் உலகப்போர் நேரத்தில் ஜப்பானும் மாட்டிக் கொண்டதாம்.
ஜப்பான் நாட்டிற்கு அமெரிக்கா பிரச்சினை தொடர்பாக ஒரு கடிதம் எழுதியிருந்ததாம்.
ஜப்பானியர்களுக்கு தாய்மொழியில் மட்டுமே நல்ல புலமை உண்டு.
ஆங்கிலத்தில் அத்தனை புலமை இல்லையாம்.
எனவே ஜப்பானிய மொழியில் அதற்கான பதில் கடிதம் அனுப்பப்பட்டதாம்.
கடிதத்தில் உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கிறோம் என்று ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டிருந்ததாம்.
அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்த மொழி பெயர்ப்பாளர் உங்கள் கோரிக்கையை நிராகரிக்கிறோம் என்று தவறுதலாக மொழிபெயர்த்து அமெரிக்காவிடம் தந்து விட்டாராம்.
விளைவு இரண்டாம் உலகப்போர்.
அதனால் பல இலட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இங்கே ' நிராகரிக்கிறோம் ' என்ற ஒற்றைச் சொல் கொல்லும் சொல்லாக மாறி வரலாற்றில் தீராத களங்கத்தை ஏற்படுத்திவிட்டது.
அதனால்தான் சொற்களைக் கையாளுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சொற்களை தகுந்த இடத்தில் சாதுரியமாக கையாளத் தெரிய வேண்டும்.
அப்போதுதான் அந்த சொற்கள் வெல்லும் சொல்லாக அமையும்.
அலெக்சாண்டர் இந்தியாமீது படையெடுத்து வந்தார்.
இந்தியாவின் வளம் அவர் கண்களை உறுத்தியது.
பல இடங்களைக் கைப்பற்றினார்.
போரஸ் மன்னன் ஆண்ட பகுதிகள்மீது அவர் கண் விழுந்தது.
போர் தொடுத்தார். அந்த பகுதிகளையும் தனதாக்கிக் கொண்டார்.
அத்தோடு விட்டுவிடவில்லை.
வீர்களோடு போரஸ் மன்னனையும் சேர்த்து சிறை பிடித்துச் சென்றார்.
வீரர்களோடு வீரர்களாக மன்னனும் சிறையில் அடைக்கப்படுகிறார்.
தனது அடிமைகளைப் பார்ப்பதற்காக சிறைக்கு வருகிறார் அலெக்சாண்டர்
சிறையில் இருக்கும் போரஸ் மன்னனைப் பார்க்கிறார்.
எதிரியாகவே இருந்தாலும் போரஸ் ஒருநாட்டு மன்னனாக இருந்தவர் அல்லவா?
ஆனால் இப்போது அவர் அலெக்சாண்டரின் அடிமை.
ஒரு கர்வத்தோடு மன்னனைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டடார் அலெக்சாண்டர்.
" நீ இப்போது என் அடிமை. அதாவது என்னுடைய கைதி."
பீடிகையோடு பேச்சைத் தொடங்கினார்.
" மன்னனாகிய என்னை மற்ற கைதிகள்போல் நடத்துகிறீர்களே என்று நீ நினைக்கலாம்.
அதனால் உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன்.
உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று நீ எதிர் பார்க்கிறாய் என்பதை நீயே சொல்."
நக்கலாக கேட்டார் அலெக்சாண்டர்.
ஒரு நிமிடம் அலெக்சாண்டர் முகத்தையே பார்த்தார் போரஸ்.
எப்படியும் தனக்கு விடுதலை தரப் போவதில்லை.
மரண தண்டனைதான் விதிக்கப் போகிறார்.
கோழையாக சாவதைவிட ஒரு வீரனாகவே சாகலாமே.
அதனால் துணிச்சலோடு,
"நான் ஒரு மாவீரன் .என்னை ஒரு வீரனைப்போல் நீங்கள் நடத்த வேண்டும் என்று எதிர் பார்க்கிறேன்." என்று துணிச்சலாக பதிலளித்தார்.
நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்ட அலெக்சாண்டர்,
" ம்..அப்புறம்..." என்றார்.
"நான் ஒரு நாட்டின் மன்னன். என்னை ஒரு மன்னனைப் போல நீங்கள் நடத்த வேண்டும் என்று எதிர் பார்க்கிறேன் "
ஒரே போடாக போட்டு வைத்தார் போரஸ்.
ஒரு போர் கைதியிடமிருந்து இந்த பதிலை எதிர் பார்க்காததால் அப்படியே மலைத்துப் போனார் அலெக்சாண்டர்.
தோல்வியிலும் துவளாத போரஸின் துணிச்சல் அலெக்சாண்டரை பிரமிக்க வைத்தது.
"உனது துணிச்சலை நான் மெச்சுகிறேன் "என்றபடி போரஸ் மன்னனின் தோள்களைத் தட்டிக் கொடுத்தார் அலெக்சாண்டர்.
ஒரு மாவீரன் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல என்று கூறி நாட்டை அவரிடமே திரும்ப ஒப்படைத்தார்.
"ஒரு மன்னனாகவே நீ வாழ வேண்டும் "என்று பாராட்டிவிட்டு திரும்ப சென்றார்.
இதுதான் ஒரு வார்த்தையால் வென்றவன் வரலாறு.
நாம் பேசும் பேச்சு நம்மை வாழ வைக்கும்.
நம் பேச்சு எப்போதும் பிறர் உள்ளத்தில் தைப்பதாக இருக்க வேண்டும்.
சொற்களைக் கையாளுதலும் ஒரு கலைதான்.
அந்த கலையைக் கையில் எடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டீர்களல்லவா!
இனி உங்கள் வெற்றிக்கு எந்த குற்றச் சொல்லும் குறுக்கே வந்து நிற்காது.
கொல்லும் சொல்லோடு கொள்ளுங்கள் பிணக்கு.
வெல்லும் சொல்லோடு தொடங்கட்டும் உங்கள் வெற்றி கணக்கு.
I like it very much
ReplyDeleteI really thank for you to give such a wonderful article.
ReplyDelete