விருப்ப ஓய்வு தந்துவிடு
விருப்ப ஓய்வு தந்துவிடு
காற்றே....
நீஇருப்பதால்தான்
எமக்கு இருக்கிறது மூச்சு
உன்னால்தான்
நாவிலிருந்து வருகிறது பேச்சு
காயமே இது பொய்யடா
காற்றடைத்த பையடா
சொல்லி வைத்தார்
உண்மை நிலை
புரிய வைத்தார்
நீ மட்டும்தான்
மேல் சாதி கீழ் சாதி பார்ப்பதில்லை
எளியவனை தொட்ட கையால்
எஜமானையும் தொட்டுவிட்டு
கண்ணாமூச்சி ஆடுகின்றாய்
மலைமுகடு ஏறி வந்தும்
கர்வம் ஏதும் உன்னில் இல்லை
மறுகணமே பள்ளத்தாக்கில்
வீழ்ந்து சப்தம் செய்யாது
நிசப்தமாய் அடங்கி போகின்றாய்
என்கடன் பணி செய்வதுவே
நின் கடன் யாதென்று
நினைத்துப்பார் மானுடா
ஓயாமல் ஓடி வந்து
காதுகளில்
ஓதிச் செல்கின்றாய்
வாயில்லாபூச்சி உன்னில்
வார்த்தைகள் தாராளம்
வாய் திறந்து பேசாமல்
கற்பிக்கின்றாய்
பாடங்கள் ஏராளம்
என்னோடு நீ இருந்தால்
எதையும் நான் செய்திடுவேன்
உன்னோடு பேசிவர
உள்ளத்தில் ஓராயிரம்
கதைகள் வைத்தேன்
பண்ணோடு நீ வரும்போது
பாவிசைத்து பரவசம்
கொண்டேன்
ஈடில்லா இன்பம்
பெற்றது போல
இன்புற்று களித்திருந்தேன்
மண்ணோடு விளையாடி
மறு கையால்
புழுதி வாரி
தூற்றும்போது
துவண்டு போய்
தூற்றி நின்றேன்
உனக்கு மட்டும் கண்ணில்லை
கண்ணிருந்திருந்தால்
ஆதாயம் தேடி
தோதான இடத்தில்
குடியிருப்பு
அமைத்திருப்பாய்
பணக்காரர்களோடு உடன்படிக்கை
செய்து கொண்டு
பாக்கெட்டில் அடைபட்டிருப்பாய்
எம்மை கூப்பாடு போட
வைத்திருப்பாய்
காற்றே...
பொதுவுடைமை தத்துவத்தை
இறுதிவரை கடைபிடித்து
பொதுவாய்
இருந்துவிடு
அடைபடும் காலம் வந்தால்
விருப்ப ஓய்வு தந்துவிடு
Comments
Post a Comment