விடுகதைகள் நூறு

1. அதிகாலை வெண்மூட்டம் 

ஆதவனைக் கண்டதும் 
எடுக்கும் ஓட்டம். 

அது என்ன?

2.கொம்பை ஆட்டி
  வம்பை இழுப்பான். 

அவன் யார்?

3. தாவி ஓடும் தம்பிக்கு
   மேனியில் உண்டு முக்கோடு. அவன்யார்?

4. பட்டு வண்ண உடம்புக்காரன்
   பஞ்சு வண்ண நிறத்துக்காரன்
    தூங்கிக் தோற்ற வரலாற்று கதாநாயகன்

   அவன் யார்?

5.  வலிய  அழைத்து
   பகிர்ந்து உண்ணுவான் இந்தப் பாசக்காரன்.

அவன் யார்?

6. நாளும் உழைத்து நலிந்து போனவன்

    நடக்க முடியாமல் ஒதுங்கிக் கிடக்கிறான்.

அவன்யார்?

7. ஊரெல்லாம் தூது போகிறவன்
    உடம்பைக் காட்ட மறுக்கிறான். 

அவன் யார்?

8.காலை வந்த மாமனுக்கு
    மாலைக்கு மேல் தங்க மனம் இல்லை.

அவர் யார்?

9. ஆளில்லா வீட்டிற்கு
    இவன்தான் காவல்காரன்.

யாரிவன்?

10.  ஒற்றைக் கையால் ஊஞ்சல் ஆடுகிறான்
      இந்தப்    பச்சைக் குழலான் .

அவன்யார்?

11. படிக்கத் தெரியாதவன் வீட்டில்
      பல நூறு புத்தகம்.

அது என்ன?

12.கன்னங் கருத்த குள்ளன்
      கடைந்தெடுத்த நல்லெண்ணத் தூதுவன்.

அவன் யார்?

13 .ஓராண்டு உழைப்புக்கு
      ஒரு வார அறுவடை .அது என்ன?

14.காற்றைக் குடித்துவிட்டு
      தாறுமாறாய் மிதக்கிறான்.

அவன் யார்? 

15.பரட்டைத் தலையன்
     பவிசாய் அணிந்திருக்கிறான்
     பச்சை சிவப்பு லோலாக்கு.

அவன் யார்?

16.ஒற்றைக் காலன்
      ஊரெங்கும் ஒய்யாரமாய் நிற்கிறான்.

அவன் யார் ?

17. பந்திக்கு முந்துவான்.
       கடைசியில் கையோடு வருவான்.

 அவன் யார்?

18.உருண்டு ஓடும் நீரைப்
       பிடித்து குடிக்க ஆளில்லை.

அது என்ன?

19.      பாறைக்குள்ளே வீடு கட்டி
       நீருக்குள்ளே வாழும் தம்பி.

அவன் யார்?

20.நீச்சல் தெரிந்த சின்னாத்தாளுக்கு
       நிலத்தில் வாழ தெரியவில்லை. 

அவள் யார்?

21.முக்கண் கருப்பன்
       கண்ணைத் திறந்து
       வைத்திடுவான் விருந்து.

அவன் யார்?

22.கண்ணீர் விட்டு
      கதை கதையாய்ப் பேசுவான் .

அவன் யார்?

23.  கருத்த மேனியாள்
         கண்ணீர் விட்டு அழுகிறாள். 

அவள் யார்?


24.மனிதன் நடந்த இடத்தில்
      இவன்கூட எட்டி பார்க்க மறுக்கிறானாம். 

அவன் யார்?

25.தொட்டவனை விட்டதில்லை
       விட்டவனைத் தொட்டதில்லை.

அது என்ன?

26. கூடவே வந்திடும் கோமகன்
       உச்சி வெயிலில் உடன் நடக்க மறுக்கிறான். 

அவன் யார்?

27.பல வண்ண சேலை கட்டி
     பவிசு காட்டுகிறாள்
     இந்த பகட்டுக்காரி. 

அவள் யார்?

28.மீசைக்கார மாமன்
      மீன் விருந்து கேட்டு
      மீசையை முறுக்கித் திரிகிறான்.

அவன் யார்?

29. வெள்ளைக்கார அழகி
      நித்தம் நொந்து
      விருந்து படைக்கிறாள். 

அவள் யார்?

30.சிறுக  கட்டிய சிங்கார வீட்டை
      சீண்ட  விடமாட்டாள் இந்த ரோஷக்காரி.

   அவள் யார்?

31.விடியற்காலையிலேயே
       மேளம் வாசிக்கிறான் இந்த மேளக்காரன்.

         அவன் யார்?

32.உச்சியிலே நின்று
      உள்ளங்கை ஏந்தி
      சொட்டுநீர்தேக்கம் அமைக்கிறாள்
      இந்த விஞ்ஞானி. 

அவள் யார்?

33.ஆளைக் கண்டால்
     அடங்க மறுக்கிறாள்
     இந்த அடங்காப்பிடாரி. 

அவள் யார்?

34.நடக்கும் நடை மாறாமல்
      நடுஇரவென்றும் பாராமல்
      அழகு நடை பயின்றிடுவேன். 

நான் யார்?

35.காலையில் சிரித்த மங்கை
     மாலையில் சிணுங்கி முகம் திருப்புகிறாள். 

அவள் யார்?

36.காய்களுக்கு ராஜா
      கவிழ்ந்து கிடக்கிறார்.

அவர் யார்?

37.கூடவே வந்த தம்பி
      குந்தி வெளியில் கிடக்கிறான்.

அவன் யார்?

38.நாலுகால் மாமன்
      நடக்கத் தெரியாமல் விழிக்கிறான். 

அவன் யார்?

39.கடிக்கத்  தெரியாத காரிகைக்கு
      உடம்பெல்லாம் பல். 

அவள் யார்?  

40.முன்னால்      இருக்கிறேன்
      என்னையே தெரியாமல் விழிக்கிறேன்.

நான் யார்?

41.சிரித்தாள் சிரிப்பாள் சீதேவியுமல்ல
      அழுதால் அழுவாள் அழுகுணி மங்கையுமல்ல.

அவள் யார்?

42.வெட்ட வெட்ட வளர்கிறாள்
     குட்ட குட்ட தாங்குகிறாள்.

அவள் யார்?

43.சுட்டக்கனி சுடாத கனி என்று
      பட்டம் இரண்டு பெற்ற கனி.

அது எந்த கனி? 

44.கண்டதையும் கேட்டு விட்டு
      கதைக்கதையாய் அளக்கிறான்.

அவன் யார்?

45.பச்சைத்தம்பி தலையில்
      வெள்ளைத் தொப்பி.

அது என்ன?

46.  ஒற்றைக் காலில் தவமிருப்பான்
         ஓடும் நீரில்கண்   வைப்பான்.

அவன்யார்?

47.வாலை வாலை ஆட்டுவான்
      காலை காலை சுற்றுவான்.

அவன் யார்?

48.தலையை ஆட்டும் தம்பிரான்
      தலையைக் கண்டால் பதுங்குவான்.

அவன் யார்?

49.வெட்டிப் போட்டவன் முகத்திலே
      குட்டி நிலா  தெரியுது.

அது என்ன?

50.துடைத்துப் போட்ட வானத்தில்
     தூவி வைத்த மின்மினிகள்.

அது என்ன?

51.கறுத்த உடம்புக்காரன்
     பெருத்த வயிற்றுக்காரன் .

   அவன் யார்?

52.காசு வாங்காமல்
       ஊசி போடுவான்.

அவன் யார்?

53.பச்சைப் புல்லை தின்று
      வெள்ளை ரத்தம் தருகிறாள்
      இந்த பாசக்கார மாமி.

அவள் யார்?

54.நான்குகால் ராசாவுக்கு
       நடக்கத் தெரியவில்லை.

அவன் யார்?

55.கூடவே வந்த தம்பி
      கூடத்திற்குள் வர மறுக்கிறான்

.அவன்யார்?

56.வீட்டை சுமந்து கொண்டு
      வீதி உலா வருகிறார்
      இந்த காவல்கார சாமி.

அவர் யார்?

57.வாயைக் கொடுத்து
      வாங்கிக் கட்டிக் கொண்டு
      வாய்பேச முடியாமல் விழிக்கிறான்.

அவன் யார்?

58.பச்சை உடம்புக்காரி
      சட்டைப் பைக்குள் ஒளித்து வைத்திருக்கிறாள்
      வெள்ளை முத்து. 

அது என்ன?

59.செக்கச் சிவந்த மேனியாளுக்குக்
       கொண்டையில்  பச்சைப் பூ .

அவள் யார் ? எ

60.மல்லாந்து கிடக்கும் மீசைக்காரனை
        நிமிர்த்திப் போட ஆளில்லை. 

அது என்ன?
   
61. அடங்காப் பிடாரிக்கு
       நாலெட்டு பேர் காவல்.

அது என்ன?

62.வெள்ளைச் சட்டையை உரித்துப் போட்டுவிட்டு
       உறுவி ஓடுகிறான்.

 அவன் யார்?
    

63.மேள தாள சத்தம் கேட்டு
       விடியுமுன்னே குடை பிடித்து நிற்கிறாள்
       இந்த வெள்ளைக்காரி. 

அவள் யார்?

64.குட்டை அக்கா
      போட்டு நிற்பாள் பட்டு சொக்கா.

அவள் யார்?

65.வீ...வீ  எனத்
      தோரணம் கட்டி அழுகிறாள்
      இந்த அழுகுணி மங்கை.

அவள் யார்?

66.கோணவாய்க்காரி
     கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறாள்.

அவள் யார்?

67.வெட்டத் தெரிந்தவனுக்கு
      ஒட்டத் தெரியவில்லை.

அது என்ன?

68.பச்சை விரலுக்குள்ளே
     வெள்ளை வெள்ளை முத்துக்கள்.

அது என்ன?

69.பச்சை மகுடம் சூட்டி
      கச்சையாய் முள்ளைக் கட்டி
      வழங்குகிறாள் வெல்லக்கட்டி.

அவள் யார்?

70.ஒட்டடைக் குச்சி உடம்புக்காரி
      ஓராயிரம் வார்த்தைக்குச் சொந்தக்காரி.

அவள் யார்?

71.வாய்களுக்குள் சண்டை
      நடுவர் வழங்கினார்
      ஒரு தலைப்பட்சமாய்த் தீர்ப்பு.

அது என்ன?

72.செவ்வண்ண உடம்புக்காரி                
தொட்டவரை   துடிதுடிக்க வைக்கிறாள்.

அவள் யார்?
      

73.  சும்மா கிடக்கும் வேலைக்கள்ளன்
      வேளாவேளைக்கு வேண்டும் என்கிறான்.

அவன் யார்?

74.மழையைக் கண்டதும்
     தலை கால் தெரியாமல்
     தலைகீழ் நிற்கிறான்.

அவன் யார் ?

75.கூன் விழுந்த மாமனுக்கு
      குடம் குடமாய்த் தண்ணீர் வேண்டுமாம்.

அவர் யார்?

76.பையில் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு
      ஊர் ஊராய்ச் சுற்றுகிறாள் இந்த பாசக்காரி.

அவள் யார்?

77.உருக்கி விட்ட வெள்ளிக்கம்பி
     உருண்டு விளையாடுது.

அது என்ன?

78.இருட்டைக் கண்டதும்
      முட்டைக் கண்ணை மூடமறுக்கிறான்.

அவன் யார்?

79.மறவாது அழைத்து
      கரவாது உண்பவன் நான்.

நான் யார் தெரியுமா?

80.மாடம் ஏற்றி வைத்திடுவீர்
     மருந்தாய் எடுத்து உண்டிடுவீர் .

என்னைத் தெரியுதா?

81.கோடு போட்ட அண்ணன்
      காடு முழுவதும் ரோடு போடுகிறான்.

அவன் யார்?

82.கற்றை கற்றையாய் முடியை வளர்த்து
      கத்தரிக்க ஆள் தேடி அலைகிறான்.

அவன் யார்?

83.அடுக்கி வைத்த செம்முத்து
      அழகு செம்பில் தொங்குது.

அது என்ன?

84.உதைத்து உதைத்து துரத்தினாலும்
     உடனே அருகில் வந்திடுவான்.

அவன் யார்?

85.உயிரைக் கண்டால் விடமாட்டான்
      பயிரைக் கண்டால் தொடமாட்டான்.

அவன் யார்?

86. கானம் ஆளும் ராசாவுக்கு
      வெண்சாமரம் வீச ஆளில்லை.

அவர் யார்?

87.கள்ளனும் நானும்
           குணத்தால் ஒன்றாம்.

நான் யார் தெரியுமா?

88.காளைகள் இழுக்கும் ஊர்தி
     கழனிக்குள் ஊரும் ஊர்தி.

அது என்ன?

89.துடைத்து விட்ட வானத்தில்
             சிதறிக் கிடந்து சிரிக்கிறாள்.

அவள் யார்?

90.பொதி சுமக்கும் தொழிலாளி
       பொறுமை இல்லாமல் கனைக்கிறான்.

அவன் யார்?

91.படிக்கத் தெரியாதவன்
       நாளும் பள்ளிக்குப் போகிறான். 

அவன் யார்?

92.அடுத்தவள் வீட்டில் பிள்ளை பெற்றுவிட்டு
       ஆனந்தமாய் திரிகிறாள்.

அவள் யார்?

93.அந்தரத்தில் தொங்குகிறான்
      மந்திரத்தால் நீரைச்   சேர்க்கிறான்.

அவன் யார்?

94.ஊரெல்லாம் தூது போகிறவன்
       உடம்பைக் காட்ட மறுக்கிறான்.

அவன் யார்?

95. இது இருக்கும்   பையிலே
        எதற்கும் இடம் கிடையாது.

அது என்ன?

96.     வாசலிலே தோரணம் கட்டும்
              வாரிசு புடைசூழ வாழ்த்து கூறும்.

அது என்ன?

97.வெள்ளை குட்டைக் குள்ளே
           கன்னங் கருத்த நிலா . 

அது என்ன?

98.காற்றைக் கண்டதும்
             தாறுமாறாய்ச் சுற்றுகிறான் .

அவன் யார்?

99.இனிப்பைக் கண்டால்
               நான் செய்வேன் குறும்பு.

நான் யார் தெரியுமா?

100.பூமாலை எடுத்துப்
        பூமாரிப் பொழிவான்..

 அவன் யார்?

      விடைகள்:

1.பனி  2. மாடு  3. அணில்  4.முயல்  5.காகம் 6.துடைப்பம்

7.காற்று  8. சூரியன்  9. பூட்டு  10. புடலங்காய்  11. நூலகம் 12. எள்

13. தேர்வு  14.பலூன்  15. மிளகாய்ச் செடி 16. மரம் 17. வாழை இலை

18.கண்ணீர்  19. ஆமை 20. மீன் 21. நுங்கு  22. பேனா  23. மேகம்

24.புல்  25. மின்சாரம்  26.நிழல்  27. பட்டாம்பூச்சி 28. பூனை 29. இட்லி

30. தேனி 31. சேவல் 32. இளநீர்  33. நாக்கு  34.   கடிகார முள்            

35.சூரியகாந்தி  36. கத்தரிக்காய் 37. செருப்பு 38. நாற்காலி 39.சீப்பு

40. கண்41. கண்ணாடி 42. தலைமுடி 43. நாவற்கனி

44.தொலைபேசி  45. சோளக்கதிர் 46. கொக்கு 47. நாய் 48.ஓணான்

49.நிலா 50.விண்மீன் 51. யானை 52. கொசு 53.பசு 54 கட்டில்

55.செருப்பு 56. நத்தை 57. தவளை 58 பப்பாளிக்காய் 59.தக்காளி

60.கரப்பான்பூச்சி 61.நாக்கு.  62. பாம்பு 63.காளான் 64.வெல்வெட் பூச்சி

65.மழை 66. கிளி 67. கத்தரிக்கோல் 68.வெண்டைக்காய்

69.அன்னாசிப் பழம் 70.பேனா 71.பட்டிமன்றம் 72. தீ 73.வயிறு

74.குடை 75. ஒட்டகம் 76.கங்காரு 77. அருவி 78. ஆந்தை 79.காகம்

80.துளசி 81.ஒட்டகச்சிவிங்கி 82. கரடி 83.மாதுளம்பழம் 84. பந்து

85.புலி 86.சிங்கம் 87. நரி 88.ஏர் 89.மேகம் 90. கழுதை 91.புத்தகம்

92.குயில் 93. இளநீர் 94. காற்று 95.ஓட்டை 96.வாழைமரம்

97.கருவிழி 98.காற்றாடி  99. எறும்பு 100. குரங்கு 

Comments

  1. Your own thought and the method of writing is admirable

    ReplyDelete
  2. கற்பனையை விடுகதையாக பதிவிட்டது மிக அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. விடுகதைகள் மிக அருமை.விடைகளும் தரப்பட்டதால் போட்டி மனப்பான்மையோடு படிக்கத் தூண்டியது.

    ReplyDelete

Post a Comment

Popular Posts