ஒத்த ரூபாயும் ஓமப்பொடியும்

                    ஒத்த ரூபாயும் ஓமப்பொடியும்
   

  அன்னக்கிளி  அருணாச்சலத்தின் நாலாவது மகள்.
     மூன்றும் பெண் பிள்ளைகளாகப் பிறந்ததால் நாலாவதாவது ஆண் பிள்ளையாக இருக்கும் என்று எதிர் பார்த்தார் அருணாச்சலம்.
     நாலாவதும் பெண் பிள்ளையாக பிறந்ததால் அப்படியே நொடிந்து போய்விட்டார்.
     இதனால் அன்னக்கிளி பிறந்த அன்று வீட்டை விட்டே ஓடி விட்டார்.மாதக்கணக்காக எங்கோ வெளி ஊரில் இருந்துவிட்டு வந்தவர் அன்னக்கிளி முகத்தைக்கூட பார்க்கவில்லை.
    தாய்க்கும் இவள் வந்த நேரத்தில் தன் கணவர் வீட்டை விட்டு சென்று விட்டாரே என்று ஒரு கவலை இருந்தது.
       அதனால் அன்னக்கிளிக்கு மற்ற பிள்ளைகளுக்கு கிடைக்கக் கூடிய அளவு அன்பு கிடைக்கவில்லை.

  அவளும் அது வேண்டும் ...இது வேண்டும் என்று அம்மாவிடம் எதுவும் கேட்பதில்லை.

         ஒருநாள் பக்கத்து வீட்டு லட்சுமி ஓமப்பொடி வாங்கி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
         அவளும் வெகு நேரமாக தன்னையே அன்னக்கிளி பார்ப்பதைக் கண்டதும் "வேண்டுமா "என்றாள்.
       "  ம்கூம்..".ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டாள் அன்னக்கிளி.
        " யாருக்கும் கொடுக்காமல் தின்றால் வயிற்றுவலி வந்துடும்.
         சும்மா கொஞ்சம்போல எடுத்துக்கோ" மறுபடியும்  நீட்டினாள் லட்சுமி.
         ஓமப்பொடியின் வாசனை "எடுத்துக்கோ...எடுத்துக்கோ" என அழைப்பு விடுத்தது.
         நாவிலிருந்து எச்சில் ஊறியது.
        " வேண்டாம்பா...நீயே சாப்பிடு .நீயே ஆசைப்பட்டு வாங்கி இருப்பா"ஒதுங்கினாள் அன்னக்கிளி.
          வலுக்கட்டாயமாக வாயில் திணித்து விட்டாள் லட்சுமி.
       வாயில் திணித்து விட்ட பின்னர் தின்றுதானே ஆக வேண்டும்.  தின்ற பின்னர் "இன்னொரு முறை கிடைக்காதா "என நாக்கு ஏங்கியது.
         அன்னக்கிளியின் மனநிலையைப் புரிந்தவள் போல மறுபடியும் "வேண்டுமா "என்று நீட்டினாள் லட்சுமி.
       "  வேண்டாம்...நான் வீட்டுக்குப் போறேன் "அந்த இடத்தைவிட்டு நழுவி விட்டாள் அன்னக்கிளி.
         ஆனால் அந்த நாள்முதல் எப்படியாவது ஒரு ஓமப்பொடி வாங்கி சாப்பிடணும் என்று ஆசை.
         ஓமப்பொடி வாங்கணும் என்றால் ஒத்த ரூபாய் வேண்டும்.
        " ஒத்த ரூபாய் யார் தருவா?"
         பாட்டி நினைவு வந்தது.
         "பாட்டியிடம் போய் கேட்டால் என்ன?"
         பாட்டி பத்து பைசாவுக்கு அதிகமா ஒருநாளும் தந்ததில்லை.
         வாரந்தோறும்  பத்து பைசா  பாட்டி மாமூலாக தருவாள்.
       "  இப்போ போய் ஒத்த ரூபாய் கேட்டால் பாட்டி தராது" 
       பாட்டி தரும் பைசாவைச் சேர்த்து வைத்து ஓமப்பொடி வாங்கணும் என்றால் பத்து வாரம் காத்திருக்கணும்.
         பத்துவாரம்வரை ஓமப்பொடி சாப்பிடாமல் இருக்க முடியாது."
         பாட்டி வீட்டுக்கு ஓடினாள்.
         அன்னக்கிளியைக் கண்டதும்
      " என்ன திடீர்னு வந்துருக்க...துட்டு ஏதும் வேணுமா?"
         அன்னக்கிளியின் பதிலை எதிர் பாராமல் பத்துப்பைசாவை எடுத்து நீட்டினார் பாட்டி.
        " வேண்டாம் பாட்டி"
        " ஏன் உங்க அம்ம வாங்கபிடாதுன்னு சொன்னாளா"
      "   இல்ல..."
       "  அப்புறம் என்ன... வாங்கிக்க "கையில் திணித்தார் பாட்டி.
       கையைப்  பொத்தி வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக மறுத்தாள் அன்னக்கிளி.
       "வேறு என்னதான் வேணும் "
       ஏதோ ஒன்று கேட்பதற்காகதான் வந்திருக்கிறாள் என்பது    பாட்டிக்குப்  புரிந்தது.
       "பாட்டி எனக்கு ஓமப்பொடி வேணும்"
      "ஓமப்பொடியா? இப்போ எங்க கிடைக்கும்?"
      " காப்பிக்கடையில் இருக்கு"
      " யார் போய் வாங்கி வருவா"
      " நான் போய் வாங்கி வருவேன்"
     " தனியாகவா? அப்படி எல்லாம் போகபிடாது. சாயங்காலம் நேரம்.
       ஊர்மாடு எல்லாம் வரும்."
      " நான் பாத்து ஓரமா போவேன் பாட்டி "
      " ஆசப்படுற...சரி...பத்துரமா போயிட்டு வா" என்றபடியே தோள் சீலையில் முடிச்சி வைத்திருந்த ஒத்த ரூபாயை அவுத்து எடுத்தார் பாட்டி.
       கொடுப்பதற்குமுன் ஒத்த ரூபாய்தானா என மறுபடியும் ஒருமுறை  சரி பார்த்துக் கொண்டார்.
      " பாத்து போ மக்கா."
      " ம்..பத்துரமா போவேன் பாட்டி. "
       ஒத்த ரூபாய் கிடைத்த மகிழ்ச்சியில் இன்னும் ஒரு நிமிடம் கூட அன்னக்கிளியால்  அங்கு நிற்க முடியல.
       காப்பிக்கடையை நோக்கி ஓடினாள்.
      மேல்மூச்சு  கீழ்மூச்சு வாங்க,
       "அண்ணே..ஒரு ஓமப்பொடி. ..".ஒத்த ரூபாயை எடுத்து கடைக்காரரிடம்  நீட்டினாள் அன்னக்கிளி.
       ஒத்த ரூபாயை வாங்கிக் கொண்டு ஒரு ஓமப்பொடியை
        ஒரு தாளில் வைத்து பொதிந்து கொடுத்தார் கடைக்காரர்.
      "  பத்திரமா போ தங்கச்சி. ஊரு மாடு வரும் நேரம் "பாட்டி சொன்னதையே கடைக்காரரும் திருப்பிச் சொன்னார்.
        தலையை ஆட்டியபடி வெளியில் வந்தாள்.
        கையில் இருந்த ஓமப்பொடியின் மணம் இப்போ தின்னு ...இப்போ தின்னு என்பது போல சுண்டி இழுத்தது.
        ஒத்த ரூபாயும் ஓமப் பொடியும் மாறி மாறி கண்களுக்கு முன் வந்து போயின.
        தெருவில் நடந்தவள் கண்கள் முழுவதும் ஓமப்பொடியிலேயே இருந்தது.
        பாட்டி சொன்னது போலவே ஊர் மாடு தொலைவில்  வந்து கொண்டிருந்தது.
        ஒதுங்கி நின்று கொண்டாள்.
        பக்கத்தில் வரவும் மாடு ஒன்று கொம்பை ...கொம்பை ஆட்ட பயத்தில் கையில் இருந்த ஓமப்பொடி பொட்டலம் கீழே விழுந்தது.
        சட்டென்று குனிந்து ஓமப்பொடி பொட்டலத்தை எடுக்க கையை நீட்டினாள்.
        அதற்குள் ஓடி வந்த மாடுக்கார சிறுவன் அன்னக்கிளியை அலாக்காக தூக்கிவிட்டபடி "மாடு மிதிச்சிருக்கும் ...தப்புச்ச "என்றபடி அன்னக்கிளியைப் பிடித்து இழுத்து வைத்துக் கொண்டான்.
     "என் ஓமப் பொடி...என்  ஓமப்பொடி "
     திமிரினாள் அன்னக்கிளி.
     ஓமப்பொடியை நோக்கி கைகளை நீட்டினாள்.
     " ஓமப்பொடி கீழே விழுந்துட்டா ...செத்த நில்லு மாடுகள் போட்டும் எடுத்துத்தாரேன்."
அன்னக்கிளி கண்களில் கண்ணீர் வடிந்தது.
      மாடுகளை விலக்கி விட்டு பொட்டலத்தை எடுத்து கையில் கொடுத்தான் சிறுவன்.
      படக்கென்று பிடுங்கிக் கொண்டு ஓமப்பொடி கிடைத்த மகிழ்ச்சியில் வீட்டை நோக்கி ஓடினாள் அன்னக்கிளி.
      
        
          

Comments

Popular Posts