தமிழ்ப் படிங்கடா தம்பி

                      தமிழ்ப் போட்டி நடத்திய சிங்கம்


தமிழ் நாட்டு காட்டிலுள்ள விலங்குகளுக்கு எல்லாம் ஒரு போட்டி அறிவித்தார் காட்டு ராசா சிங்கம்.
         ஆலமரம் போட்டி நடை பெறும் இடமாக அறிவிக்கப்பட்டது.
பதினொருமணிக்கு எல்லா விலங்குகளும ஆலமரத்தடியில் வந்து கூடும்படி தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டது.
   அதன்படி  எல்லா விலங்குகளும் வந்து கூடின.
         சிங்கத்தின் தலைமையில் போட்டி தொடங்கியது.
         ஆசிரியராக இருந்து போட்டியை நடத்தித் தருவதற்கு கரடி ஒப்புக் கொண்டது.
         போட்டியின் விதிமுறைகளைத் தெரிவித்தார் ஆசிரியர்.
         விடை தெரிந்தவர் முன்னால் வந்து நின்று பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
         " தமிழ் எழுத்துகள் எத்தனை? "முதல் கேள்வியைக் கேட்டார் ஆசிரியர்.
"  பன்னிரண்டு "என்று பட்டென்று சொல்லி இடத்தில் போய் அமர்ந்து கொண்டது முயல்.
   ".அவை யாவை?"இரண்டாவது கேள்வியைக் கேட்டார் ஆசிரியர்.
   "அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஒ ஓ ஔ ."..சொல்லிவிட்டு ஓடிப்போய் மரத்தில் தலை கீழாக தொங்கியது குரங்கு.
  " ஐயைய்யோ....தப்பு தப்பு. "..ஒட்டு மொத்தமாக எல்லா விலங்குகளும் கத்தின.
" தவறு...   அடுத்தவர் முயற்சி செய்யலாம் "என்றார் ஆசிரியர்.
   குட்டிக்கரணம் போட்டபடி ஓடி வந்த குட்டி எலி
   "அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ "என்று சரியாக சொல்லி இடத்தில் போய் அமர்ந்து கொண்டது.
"  சரியான விடை..பாராட்டுகள் "என்ற ஆசிரியர்,
   " மெய் எழுத்துகள் எத்தனை ? அவை யாவை?"  என்று ஒட்டு மொத்தமாக  இரண்டு கேள்விகளையும் ஒரே கேள்வியாக  கேட்டு வைத்தார்.
    பதில் சொல்ல ஒருவரும் முன் வரவில்லை.
  " ஏன் ஒருவருக்கும் தெரியாதா? "கோபமாக கேட்டார் ஆசிரியர்.
   தந்திரக்கார நரி ஓடி வந்து "க ச ட த ப ற வல்லினம்"
          "   ய ர ல வ ழ ள இடையினம்"
  " ஞ ங ண ந ம ன மெல்லினம் "ஆக மொத்தம் பதினெட்டு
   அத்தனைக்கும் மேலே புள்ளி வைத்து எழுதுங்கள் .அது தான் மெய் யெழுத்து "என்று தந்திரமாக பதில் சொல்லிவிட்டு ஓடிபோய் அமர்ந்து கொண்டது நரி..
   வரிசையாக சொல்ல தெரியாவிட்டாலும் சாமர்த்தியமாக பதில் சொல்லி அத்தனைபேர் பாராட்டையும் பெற்றுக் கொண்டது நரி.
   "உயிர்மெய் எழுத்துகள் எத்தனை? "கேட்டு வைத்தார் ஆசிரியர்.
   தும்பிக்கையை தூக்கியபடியே முன்னால் வந்த யானை முப்பது என்றது.
   "தவறு" என்றார் ஆசிரியர்.
   "எப்படி" என்பது போல அனைவரும் ஒருவர் ஒருவர் முகத்தைப் பார்த்து் கொண்டனர்.
   இதுவரை எந்த பதிலும் சொல்லாத ஒட்டக சிவிங்கி "இருநூற்றுப் பதினாறு "என்றது.
   சரியான விடை.ஆனால்
   "எப்படி என்று சொல்லத் தெரியுமா? "கேட்டார்  ஆசிரியர்.
"   பன்னிரண்டு உயிர் எழுத்தும் பதினெட்டு மெய் எழுத்தோடு தனித்தனியாக சேர்ந்தால் மொத்தம் இருநூற்று பதினாறு உயிர்மெய் எழுத்துகள் கிடைக்கும் "என்றது ஒட்டகசிவிங்கி.
   இப்போது இறுதியான கேள்வி.
   "தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?"கேட்டார் ஆசிரியர்
   அத்தனை விலங்குகளும் மொத்தமாய் முன்னே ஓடி வந்தன.
"   இதுவரை பதிலளிக்காத புலிக்குட்டிக்குத்தான் இந்த வாய்ப்பு தரப்படுகிறது "என்றார் ஆசிரியர்.
   புலிக்குட்டியும் "இருநூற்று நாற்பத்தாறு"என்று  கூறிவிட்டு பெருமையாக இடத்தில் போய் அமர்ந்து கொண்டது.
   எல்லோரும் கைத்தட்டினார்கள்.
      " தவறு "என்றார் ஆசிரியர்.
      "எப்படி..." என்பதுபோல அனைத்து விலங்குகளும் கரடியைப் பார்த்தன.
   "ஆய்த எழுத்தை விட்டுவிட்டீர்களே."-  என்றார் ஆசிரியர்.
            "ஃ" என்றது நரி.
   "அஃதா? "என்றபடி வாயைப் பிளந்தன அத்தனை விலங்குகளும்.
   அஃதோடு போட்டியும் நிறைவு பெற்றது.
  வெற்றியைக் கொண்டாட  போட்டியில் கலந்து கொண்ட   அனைவருக்கும சிங்கத்தோடு சிற்றுலா  செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
         தமிழைப் படிங்கடா ...தமிழைப் படிங்கடா...பாடிக்கொண்டே கொண்டாட்டம் போட்டன விலங்குகள்.
    

Comments