எல்லாம் நன்மைக்கே...

                                எல்லாம் நன்மைக்கே...

!
        
 
   காட்டில்  மான்கள் கூட்டமாய் வாழ்ந்து வந்தன.
    துள்ளலும் கும்மாளமுமாய் நாட்கள் இன்பமாய் கழிந்து வந்தன.
      ஒருநாள் பெட்டை மான் ஒன்று குட்டிப் போட்டிட அனைத்து மான்கள் கண்களிலும் உற்சாக விளக்கு கும்மென்று எரிந்தது.
       காடே துள்ளலும் கொண்டாட்டமுமாய் குதுகலித்துக் கொண்டிருந்தது.
      குட்டிமானுக்கு கால் தரையில் நிற்கவில்லை.
      பின்னே இருக்காதா என்ன?
       மூன்று அண்ணன்மார்களுக்கும் ஒற்றை தம்பி இந்த குட்டித் தம்பி.
      நாளாக ஆக தம்பியிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிய ஆரம்பித்தது.
      ஆமாம்...   குட்டிக்கு கொம்பு வளரவே இல்லை.
     இது  பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருந்தது.
.மற்ற மான்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
      ஆனால் குட்டி மான் மட்டும் "எனக்கு கொம்பு 
இல்லையே "என்று சொல்லிச் சொல்லி வருத்தப்படும் .
   "  கொம்பு இல்லை என்றாலும் அழகாய்தான் இருக்கிறாய்"
     என்பார் அம்மா.
    " ஆண்மான் என்றாலே கொம்பு தானே அழகு.
    அந்த அழகை இறைவன் எனக்கு கொடுக்கவில்லையே" என சொல்லி சொல்லி குட்டி  அழும்.
     "கொம்பு என்ன பெரிய கொம்பு.
     என் பிள்ளை கண்ணே அழகு ."என்பார் அம்மா.
   "சும்மா சொல்றீங்க...."
      "உண்மையாகத்தான் சொல்லுகிறேன்.....
 அண்ணன் கொம்பு எல்லாம்  அசிங்கமா 
விறகு கம்பு மாதிரி   ...எனக்கு கொம்பு இல்ல பாரு..."
ஏதேதோ சொல்லி சமாதானப்படுத்துவார் அம்மா.
" நீங்க பொண்ணு...பொண்ணுக்கு எங்கேயாவதுகொம்பு வளருமா...".திருப்பி கேட்கும் குட்டி.
        "உன் அறிவே அறிவு... 
     சரி விடு... விடு...அந்த பேச்சு இப்போ எதுக்கு"
பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பார்த்தார் அம்மா.
"  கடவுள் எனக்கு மட்டும் வஞ்சகம் செய்து விட்டார்"
புலம்பியது குட்டி.
"கடவுள் ஒருநாளும் யாருக்கும் வஞ்சகம் செய்ய மாட்டார்.
எல்லாம் நன்மைக்காகத்தான் இருக்கும் "என்று கூறியபடி
குட்டிமானைத் தடவிக் கொடுத்தார் அம்மா
 ஆனாலும் மான்குட்டி  மொட்டைத்தலையை
 நினைத்து நினைத்து
  ஒவ்வொருநாளும் தேம்பி தேம்பி அழும்.
"அழாதம்மா.....உனக்கு பிடித்த  இலைகளைப் பறித்து வந்து
தரட்டுமா..." அம்மா  மான் பேச்சை திசை திருப்பியது.
"வேண்டாம்...."பிடிவாதம் பிடித்தது குட்டி.
"சரி...நீ வீட்டில் இரு . எங்கும் போகாதே...
நாங்கள் இரை தேடிவிட்டு வருகிறோம்."
சொல்லிவிட்டு மற்ற குட்டிகளோடு காட்டுக்குள்
சென்றார்  அம்மா 
 அம்மா சென்றதும் குட்டிமான் தனியாக இரை தேட புறப்பட்டது.
 தனியாக வந்து பழக்கமில்லை...
எந்தப் பக்கம் போவது என்று தெரியவில்லை.
அங்கமிங்கும் சுற்றி கடைசியில்
 வழி தவறி ஒரு குகைக்குள் போய் நின்றது.
   " ஆ.... என்ன இது? சிங்கத்தின் குகை போல்தெரிகிறதே ."
பயத்தில்  வெடவெடத்துப் போனது குட்டி.
 " நல்ல வேளை சிங்கம் குகைக்குள் இல்லை. தப்பித்தோம்"
   என்று சொல்லியபடி  திரும்பியது .
அவ்வளவுதான்....
 திடீரென  எங்கிருந்தோ வந்தது ஒரு அதிரும் குரல்...
  "ஆ....சிங்கத்தின் கர்ஜனை...  அம்மா...நான் என்ன செய்யப் 
போறேன்"
 நடுநடுங்கிப் போயிற்று மான்குட்டி.
" ஐயோ...அம்மா ....சிங்கம் வருவது போல்  இருக்கிறதே...
 எப்படி தப்பிப்பது.?"
சுற்றும் முற்றும் பார்த்தது.
குகை வாசலில் புதர் மண்டிக் கிடப்பது தெரிந்தது.
முன்பின் யோசிக்காமல் 
ஓடிப்போய் புதருக்குள் போய் படுத்துக்கொண்டது.
பயத்தில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.
மான்குட்டிக்கு கொம்பு இல்லாததால்
குட்டையான புதருக்குள் மான் கிடப்பது 
வெளியில் தெரியவில்லை.
 புதருக்குள் மான்குட்டி மூச்சடக்கிப் படுத்துக் கொண்டது.
  சிங்கம் உருமியபடியே குகை வாசலில் வந்து நின்றது.
மறுபடியும்  கர்ஜனை....ஒரு உறுமல்....குகையே அதிர்ந்தது.
அங்குமிங்கும் பார்த்துவிட்டு கர்வத்தோடு
குகைக்குள் சென்றுவிட்டது.
  இதுதான் தருணம் என நினைத்த குட்டி" தப்பித்தோம் பிழைத்தோம் "என தாவி வெளியில் ஓடியது.
 மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க,
" அம்மா...அம்மா  "என்று அழைத்தபடி
 அம்மா முன் வந்து நின்றது.
"  என்னாயிற்று...என்னாயிற்று...ரிலாக்ஸ்...ரிலாக்ஸ்.."
தடவிக்கொடுத்தபடியே குட்டியின்
 முகத்தைப் பார்த்தார்  அம்மா.
  "  நல்ல காலம் இன்று நான் பிழைத்தேம்மா....."
 "  ஏன்.... என்னாயிற்று..." பதற்றத்தோடு கேட்டார் அம்மா.
"அம்மா கேட்டீங்களா.... ஒரு சிங்கத்தின் குகையில் போய் மாட்டிகிட்டேன்..." நெஞ்சு படபடக்க பேசியது குட்டி.
   "ம்... அப்புறம்..."
"    அப்புறம் என்ன...சட்டென்று ஒரு புதரில் போய் படுத்து
 மறைந்து கொண்டேன். ."
"நல்லகாலம்..."
" நல்லகாலம்தாம்மா... சிங்கம் என்னைப் பார்க்கல.".
"கடவுள் காப்பாற்றிட்டார்...." என்றார் அம்மா.
"கடவுள்தான் காப்பாற்றினார்...எனக்கு மட்டும் கொம்பு
இருந்திருந்தால் ...
சிங்கத்தின் கண்ணில் பட்டு...என் உயிர் போயிருக்கும்.  "
நடுங்கியபடியே பேசியது குட்டி.    
"பரவாயில்லை....பரவாயில்லை...கடவுள்
 காப்பாத்திட்டாருல்ல..... அது போதும்...
 எல்லாம் நன்மைக்குத்தான்   என்பது இப்போது புரிகிறதா.."   என்றது அம்மா.
  " நீங்க சொன்னது சரிதாம்மா....மொட்டையாகப் 
பிறந்ததும் நன்மைக்குதான்
என்பதை இன்றுதான் புரிந்து கொண்டேன்." என்ற குட்டி
 அம்மாவின் முகத்தோடு முகம் வைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
     
      
    
      
      

Comments

Popular Posts