கோபப்பட வேண்டும்...

          கோபப்பட வேண்டும்


சினம் தவிர் என்றுதானே சொல்வார்கள்.
 இது என்ன  கோபப்பட வேண்டும்...
"  சும்மாவே  நான் காச் ...மூச் என்று 
கத்திவிட்டு கையில் கிடைத்ததை
 எல்லாம் தூக்கி வீசுவேன். "   எத்தனை போனை உடைத்திருக்கிறேன் தெரியுமா?"
பெருமைப்பட்டுக் கொள்வது 
 காதுகளில் கேட்கிறது.
"   இல்லை...இல்லை..."
"  நான் எல்லாம் ரொம்ப...ரொம்ப
 நல்ல பிள்ளை.
    ரிமோட் கண்ட்ரோலை மட்டும்தான்
 தூக்கி வீசுவேன்." இப்படியும் சிலர் 
பேசுவது போல் இருக்கிறதே.
   "  என்னிடம் இந்த உடைத்தல்...
கிடைத்தல் எல்லாம் கிடையாது.
  பேனாவால் நோட்டுப் புத்தகத்தில்  
கிறுக்கோ கிறுக்கென்று கிறுக்கித்
 தள்ளி விடுவேன்."
  இது பள்ளி மாணவர்களின் 
கிறுக்கலாகத்தான் இருக்கும்.
 "  நாங்க எல்லாம் வேற...வேற...  
வேற மாதிரி இல்ல.  
  சும்மா நச்சு... நச்சுன்னு 
தலையணையில் நாலு குத்து
 குத்திவிட்டு அந்த இடத்தில் 
இருந்து எஸ்கேப் ஆகி விடுவோமில்ல..."
 " புரிகிறது ...புரிகிறது .
 ஆள் ஆளுக்கு நீங்க வேற 
லெவல் என்பது புரிகிறது."
 எது எப்படியோ எல்லோரும் கோபம் 
வந்தால் ஏதோ ஒரு எதிர்வினை 
ஆற்றுகிறீர்கள் .
   இது மட்டும் கண்டிப்பாக புரிகிறது.
 " இப்போ நீங்க வேறு கோபம் 
வேண்டும்  என்றால்...
 உங்கள் மீதே எங்களுக்கு 
நச்சென்று கோபம் வருகிறது." என்று
 சாடுவீர்கள்.
  நல்ல பிள்ளைகளைப் பார்த்து 
கோபப்படுங்கள் என்று சொன்னால்
 கோபம் வராமல் போய் விடுமா என்ன...
 "  இத... இதத்தாங்க நான் எதிர் பார்த்தேன். 
    என்மீது நீங்கள் கோபப்பட வேண்டும். 
அதுதான் ஞாயம்."
  "  சும்மா இருந்த உங்களைச் சீண்டிப் 
பார்த்த என்மீது கோபப்படுதல் 
ஞாயமான செயல்தானே!
 இந்த ஞாயமான கோபம்தான் 
வேண்டும் என்கிறேன்."
இதைத்தான் பாரதியாரும்" ரௌத்திரம்
பழகு "என்றார்.
கோபத்தைப் பழகிக்கோ என்கிறார் என்றால்
விசயம் இல்லாமலா இருக்கும்.
பாரதியாரும் நம்ம கட்சிதாங்க...
 ஆனால் காரணமில்லாமல் எதற்கு 
எடுத்தாலும் சட்டென்று  கோபப்படக் கூடாது.
  பிறகு இப்படித்தான் கண்டதையும் 
போட்டு உடைக்க வேண்டி இருக்கும்.
 சீனாவில் புதிதாக ஒரு கடை 
திறக்கப்பட்டுள்ளதாம்.
 நமக்கு ஏதாவது உடைக்க வேண்டும் 
என்று ஆசை இருந்தால் அங்கு போய் 
அரைமணி நேரத்திற்கு ஐநூறு ரூபாய்
 கட்டினால் போதுமாம்.
 ஆசை தீர உடைத்துவிட்டு வந்துவிடலாம்.
 "   பார்த்தீர்களா... உங்கள் கோபத்தை
 வைத்து எப்படி எல்லாம் வியாபாரம் 
பண்ணுகிறார்கள் ?"

  நம்மை சுற்றி உலகில் ஏதேதோ
 நடந்து கொண்டிருக்கிறது.
 அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் 
ஓடிக் கொண்டிருப்பதற்கு நாம்
 ஒன்றும் இயந்திரம் அல்ல. 
பெட்டைக்கோழி தன் குஞ்சுகளின்
 அருகில் யாரையும் நெருங்க விடுவதில்லை.
  நெருங்கினால் ஆக்ரோசமாக பறந்து 
வந்து துரத்தித் துரத்திக் கொத்தும்.
 சாதுவாகத் திரியும் கோழிக்கு
 இத்தனை ஆக்ரோசம் எங்கிருந்து வந்தது.?
  தன் பிள்ளைகளைக் காப்பதற்காக 
கோழிக்கு வரும் கோபம் ஞாயமான 
ஒன்றுதான்.
  மறுப்பதற்கில்லை.
கோழிக்கு  கோபம் வராமல் இருந்திருந்தால்
தால் அதுதான் தவறு என்பேன்.

 பொன்வண்டு எனப்படும் வண்டு 
இனம் அடிக்கடி தன் நிறத்தை 
இரத்த சிவப்பாக மாற்றிவிடுமாம். 
கோபம் ஏற்படும்போது மட்டுமே் 
அதன் நிறம் அவ்வாறு மாறுமாம்.
பொன்வண்டு தன் நிறத்தை இப்படி  
மாற்றிக் கொள்வது எதிரிகளைப் 
பயமுறுத்துவதற்குத் தானாம்.
எதிரிகளிடமிருந்து தன்னைப்
 பாதுகாத்துக் கொள்ள பொன்வண்டு
 இப்படி கோபப்பட்டே ஆகவேண்டும். 
    வேறு வழி இல்லை.
 அல்லது எதிரிகளுக்கு இரையாக
 வேண்டியதுதான்.
  இப்போது பொன்வண்டின் கோபம் 
நமக்கு நியாயமாகத் தெரியும் .
  தனக்கு எதிராக இழைக்கப்படும்
 அநீதியைப் பார்த்துக் கொண்டு 
யாரும் சும்மா இருந்து விடுவதில்லை.
அவரவர்க்கு இன்றவரையில் இயன்ற 
வழியில் எதிர்ப்பைக் கோபமாக 
வெளிப்படுத்துகின்றனர்.

  இதற்கு எந்த உயிர்களும் விதிவிலக்கு அல்ல.
   இத்தகைய சூழல்களில் இந்த விலங்குகள் 
கோபப்படாமல் இருப்பதுதான் தவறு.
  சிலர் தங்களுக்கு எதிராக அநீதி 
இழைக்கப்படும்போது பொங்கி எழுவதுண்டு.   

    நேற்றுவரை சாதுவாக இருந்த 
கண்ணகி தன் கணவனுக்கு அநீதி 
இழைக்கப்பட்டபோது பொங்கி எழுந்தாள்.
 நீயோ அரசன் என்று கேட்கும் துணிவு 
அவளுக்கு  எங்கிருந்து வந்தது?
 தன் கணவன்மீது அநியாயமாக
 திருட்டுப் பழி சுமத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறான்.
  தன் கணவன் கள்வன் அல்லன் 
என்பதை நிரூபிக்ண்டிய கட்டாயம்.
 தனியாக வெளியில் சென்று பழக்கம் இல்லை. 
 கையில் சிலம்போடு அரண்மனையை நோக்கிப் புறப்படுகிறாள்.
 யாரிடம் எப்படி பேச வேண்டும் 
என்ற எந்தச் சிந்தனையுமே சி்ந்தையில் 
எழவில்லை.
  அரசனிடம் பேசுகிறோமே என்ற அச்சம்கூட 
கண்ணகியிடம் இல்லை.
  தேரா மன்னா என்று வார்த்தைக்
 கணைகளை வீசுகிறாள்.
  பேசி தன் கணவன் கள்வன் அல்லன்
 என்ற உண்மையை உலகுக்குப் 
புரிய வைக்கிறாள்.
 இந்த இடத்தில் கண்ணகியின் கோபம் 
நியாயமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

 கன்றை இழந்த பசு ஒன்று ஆராய்ச்சி
 மணியை அடித்து மன்னிடம் நீதி கேட்கிறது.
  எந்த விதி மீறலும் செய்யாமல் தன் 
வழியில் சென்றபோது அநியாயமாக தன் கன்று கொல்லப்பட்டு விட்டதே என்ற கோபம் 
பசுவை மன்னனிடம் போய் நீதி 
கேட்க வைத்தது.

  செய்தது மன்னன் மகனே ஆனாலும்
 நீதி வேண்டும் என்று மன்னனிடம் 
கண்ணீர் விட்டது.
  இந்த வாயில்லா பூச்சி என்ன 
செய்துவிடப் போகிறது என்று மன்னனும்
 பூசி மறைத்துவிடப் பார்க்கவில்லை.
    குற்றம் புரிந்த தன் மகனைத் 
தேர்க்காலில் இட்டு கொன்றுவிடக்
 கட்டளையிடுகிறான்  அந்த மனுநீதிச் சோழன்.
   இங்கே  பசுவிற்கு வந்த கோபம்
 நியாயப்படுத்தப்படுகிறது.

 இப்படி நியாயம் வேண்டுமானால் நம்
 குரலை உயர்த்திதான் ஆக வேண்டும்.
 தெருவில் போகும் நாயின் மீது கல்லை
 வீசுபவன் மீது கோபப்பட வேண்டும்.
  மாற்றுத்திறனாளிகளைக் கிண்டல்
 செய்யும் சக மனிதர்கள் மீது 
கோபப்பட வேண்டும்.
 தாறுமாறாக வண்டியோட்டி விபத்து
 ஏற்படுத்துபவர் மீது கோபப்பட வேண்டும்.
       
காரணமில்லாமல் தம்பியை அடிக்கும்
 அண்ணன் மீது கோபப்பட வேண்டும்.
  தேவையில்லாமல் அடுத்தவர்களை 
நக்கல் அடிக்கும்
 நண்பன் மீது கோபப்பட வேண்டும். 
மொத்தத்தில் தப்பு செய்வோர் மீது  
கோபப்பட வேண்டும்.
 அநீதிக்கு எதிராக கோபப்படுபவன் 
தான் மனிதனாக இருக்க முடியும்.
  குறைந்தபட்சம் நம் எதிர்ப்பையாவது 
வெளிப்படுத்த வேண்டும்.

 அப்போதுதான் நாம் மனிதர்களாக 
இருக்க முடியும்..
  மனிதனாய் இருந்தால் அவனுக்குள் 
மனிதம் இருக்க வேண்டும்.
  மனிதம் இல்லா மனிதனை எப்படி 
மனிதனாக ஏற்றுக் கொள்வது?

  நீங்கள் சமூக அக்கறை உடையவரா?
   அப்படியானால் கோபப்படுங்கள்.   
  உங்கள் கோபம் நியாயமானதாக இருக்கட்டும்.
 நியாயமான வழியில் அதனை வெளிப்படுத்துங்கள்.
  உங்கள் கோபத்தால் சமூகத்திற்கு 
நன்மை விளையட்டும்.

   நல்லதை நோக்கிய உங்கள் 
பயணத்தில் இதுவும் ஒரு அங்கமாக இருக்கட்டும்.
  கோபப்பட வேண்டும் என்று முடிவெடுத்து
விட்டீர்களல்லவா!
எனக்கென்ன வந்தது என்று 
இதுவரை சுயநலவாதியாக
இருந்தது போதும்.உங்கள் சிந்தனை
பொதுநலம் சார்ந்ததாக இருக்கட்டும்.
இன்றே தொடங்கட்டும் உங்கள் 
வெற்றி கணக்கு.
    
        







          

Comments