முக்கிய செய்தி

                        முக்கிய செய்தி


ராமையா...ராமையா   "
     "ராமையா வந்திருக்காரா?  "  வருகை பதிவேட்டிலிருந்து கண்களை எடுக்காமலே கேட்டார் சூப்ரவைசர் ராணி.
          "இதோ இருக்கேம்மா."   தட்டுத் தடுமாறி எழும்பினார் ராமையா.
           "வாங்க  வந்து கையெழுத்துப் போடுங்க"   அவசரப்படுத்தினார்
   ராணி.
        "வாங்க வாங்க.  வரிசையாக வந்து கையெழுத்துப் போடுங்க."
        சொல்லியதுதான் தாமதம்   அனைவரும் வரிசை கட்டி நின்றனர்.
        ஒருவர் கையெழுத்துப் போடுவதும் இன்னொருவர் கைரேகை பதிவு செய்வதும் என்று முண்டியடித்து வேலை விறுவிறுப்பாக     நடந்தது.
        எல்லோரும் கையெழுத்துப் போட்டாயிற்றா? கேட்டபடியே பதிவேட்டை ஆய்வு செய்தார் ராணி.
       " செல்ல வடிவு வரலியா?" கூட்டத்தைப்பார்த்துக் கேட்டார் ராணி.
   "வந்திருக்காங்க...வந்திருக்காங்க.  "
       " செல்லடுவு அம்மா கூப்பிடுறாங்க  .போ ....போய் கையெழுத்து போடு "என்றது ஒரு குரல்.
   "சீக்கிரம் வாங்க எனக்கு அலுவலகத்திற்குப் போய் ரிப்போர்ட் கொடுக்கணும் "தோளில் பையை மாட்டியபடி எழும்பினார் சூப்ரவைசர்.
   ஊன்றுகோலை ஊன்றியபடி தட்டுத் தடுமாறி எழும்பினார் செல்லடுவு.
"  கைகுடுங்க பாட்டி . கையை நீட்டி பாட்டி எழும்புவதற்கு உதவி செய்தாள் "பக்கத்து வீட்டுப் பெண் பார்வதி.
     தட்டுத்தடுமாறி  வந்து கையை நீட்டினார் செல்லடுவு.
   தயாராக கையில் வைத்திருந்த பதிவேட்டையும் கை ரேகை வைக்க  மையையும்  நீட்டினார் ராணி.
      இன்னொரு பெண் கையைப் பிடித்து மையின் மீது
   விரலை வைக்க உதவினார்.
   . "உங்க பெயருக்கு நேராக கைநாட்டு வையுங்க  பாட்டி ."
     கைரேகை வைக்கும்போது  கை வடக்க தெக்க  இழுக்க ஆரம்பித்தது.
      " சரியா வையுங்க பாட்டி . நேரம் ஆகுது." அவசரப்படுத்தினார்  ராணி..
       செல்லடுவுவிடம் கைநாட்டு பதிவு செய்ததும்
"  சரி ...சரி இப்போ எல்லோரும் போங்க. அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்துல உள்ள வேலையை செய்து முடியுங்க."
      "நான் அலுவலகம் போய்விட்டு மூன்று மணிக்கெல்லாம் வந்துடுவேன்.அதற்கு முன்னால் ஆபீசர் யாரும் வந்தா மாட்டிக்காதீங்க...சொல்லிபுட்டேன்" என்றபடியே நடையைக் கட்டினார் ராணி.
    அனைவரும் கையில் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.
   செல்லடுவு பாட்டியைக் கையைப் பிடித்தபடி  கூடவே அழைத்துச்
   சென்றாள் பார்வதி.
      வேலை செய்ய ஒதுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் சென்றதும் அனைவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டனர். 
      வெற்றிலை போடுபவர்கள் வெற்றிலை போட ஆரம்பித்தனர்.
   நடுத்தர வயது பெண்கள் கையோடு கொண்டு வந்திருந்த பீடி இலையை எடுத்து பீடி சுற்றத் தொடங்கினர்.
   பார்வதிக்கு மட்டும் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை."வாங்க போய் வேலையைப் பார்க்கலாம"என்றாள்.
"  நீ போறேன்னா போ. நாங்க இன்னும் நூறு பீடி சுற்றணும்.
சாயங்காலம் பீடிக் கடைக்குப் போகணும்."கருமமே கண்ணாக இருந்து பீடி சுற்றுவதில்  மும்முரமாக இறங்கிவிட்டனர் இந்த காரியவாதிகள்.
   "யாரெல்லாம் வாரீகளோ வாங்க. நான் போய் என் பங்கு வேலையைச் செய்யப் போகிறேன்"கிளம்பினாள் பார்வதி.
   செல்லடுவு தோள்சீலையை  தரையில் விரித்து தலையை சாய்த்தார். 
   சற்று நேரத்தில் அப்படியே தூங்கி விட்டார்.
   ஒவ்வொருவராக மெதுவாக எழும்பி சென்றனர். யாரும் செல்லடுவு பாட்டியை எழுப்பவில்லை.
    "அவரை எழுப்பாதீர். அப்படியே தூங்கட்டும் "என்று விட்டு விட்டனர்.
   ஏதோ பெயருக்கு அப்படியும் இப்படியும் பாவலா காட்டி மண்வெட்டியைத் திருப்பித் திருப்பி காட்டிக் கொண்டிருந்தனர்.
      முழுதாக ஒருமணி நேரம் கூட ஆகவில்லை.
  மண்வெட்டியைக் கீழே வைத்தனர்.
   சற்று நேரத்திற்கெல்லாம் பெண்கள் அனைவரும் மறுபடியும் மாநாட்டு அரங்குக்கே வந்து சேர்ந்தனர்.
     " என்னா வெயில் நிற்க முடியல ...அனல் அடிக்குது.".சாப்பாட்டு வாளியைத் திறந்தனர்.
   இப்போது பாட்டியை விட்டு விட்டு சாப்பிட மனமில்லை.
"   பாட்டி ...பாட்டி "
   குரல் கொடுத்துப் பார்த்தனர். பாட்டியிடம் எந்த அசைவும் இல்லை.
"   பாட்டி....பாட்டி "உலுக்கிப் பார்த்தனர். இப்போதும் பாட்டி பதில் சொல்வதாக இல்லை.
   இன்னும் கொஞ்ச நேரத்தில் ராணியம்மா வந்திடுவாங்க.பதில் சொல்லணும் .வேகமாக உலுக்கினார் ஒரு பெரியம்மா.
   உலுக்கின உலுக்கலில் மல்லாக்கா   விழுந்தார் செல்லடுவு.
  " ஆ..அலறினார்."அந்த பெண்.
     "என்ன... என்ன..".அனைவரும் ஓடி வந்தனர்.
     பாட்டியைப் பார்த்தனர்.
   பாட்டி உடம்பு ஜில் என்று இருந்தது.
   ஆளாளுக்கு தொட்டுப் பார்த்து உதட்டைப் பிதுக்கினர்.
   பார்வதிக்கு மட்டும் தாங்க முடியவில்லை.வாய்விட்டு கதறினாள்.
    "ராமையா  அண்ணே... ராமையா  அண்ணே ... ஓடியாங்க   ஓடியாங்க "கத்தினாள் ஒரு பெண்.
    "போய் சீக்கிரம் அலுவலகத்தில் தகவல் சொல்லிடுங்க."
     அலுவலகம் நோக்கி ஓடினார் ராமையா.
கையோடு ராணியம்மாவைக் கூட்டி வந்தார்.
    ராணியம்மாவும் தொட்டுப் பார்த்தார்.
   " செல்லடுவம்மா... செல்லடுவம்மா "என்று தன் பங்கிற்கு கூப்பிட்டும் பார்த்தார்.
    பதில் ஏதுமில்லை.
   நிலைமையைப் புரிந்து கொண்ட ராணி "பக்கத்து வீட்டுக்காரங்க யாராவது இருக்காங்களா....வீட்டுக்குத் தகவல் சொல்லணும்"  என்றார்.
     "வீட்டுல யாரும் இல்ல மேடம்.பிள்ளைகள் எல்லாம் வெளியிடங்களில் இருக்காங்க "என்றாள் பக்கத்து வீட்டுப்பெண் பார்வதி.
   "போன் நம்பர் ஏதும் இருக்கா..".என்றபடியே
   "பிள்ளைகளுக்கு தகவல் சொல்லிடுங்க. நான் மேலே என்ன பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிக்கணுமோ அத முடிக்கணும்.."
   ."முதல்ல  நூற்று எட்டுக்குத் தகவல் சொல்லுங்க" விரைவுபடுத்தினார் ராணி.
   எல்லோரும் ஆளாளுக்கு அங்கேயும் இங்கேயும் ஓடி தகவல் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
   நூற்று எட்டும் வந்தது.ராணியம்மா தன்னோடு ராமையாவையும்  இன்னும் இரண்டு பெண்களையும் கூட்டிக் கொண்டு வண்டியில் ஏறினார்.
   மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
"   என்ன.. யாது ..".என்று விசாரித்தபடி மீடியா நண்பர்கள் சூழ்ந்து கொண்டனர்.
    மறுநாள் ...பணியில் இருந்தபோதே வெயில் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து சாலைப் பணியாளர் செல்லடுவு மரணம்.
    முக்கிய செய்தியானார் செல்லடுவு பாட்டி.






  

  
  
  
  

    
                   

Comments

Post a Comment