காலமெல்லாம் படிப்பு
காலமெல்லாம் படிப்பு
"கற்றது கைமண்ணளவு
கல்லாதது உலகளவு "
யாராவது நான் இந்த உலகத்தில்
எல்லாவற்றையும் படித்து முடித்துவிட்டேன்
என்று சொல்ல முடியுமா?
அப்படி ஒருவர் இருந்ததாக சரித்திரம்
சொன்னதில்லை.
பேரறிவாளர்கள் என்று நாம்
நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம்
இறுதிவரை புத்தகத்தோடு புத்தகமாக
வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் என்றுதான்
சொல்லுவேன்.
கற்க வேண்டியவை உலகில் ஏராளம் உள்ளன.
நான் ஆசிரியர். ஆதலால் எனக்கு எல்லாம்
தெரியும். இனி எனக்குக் கற்பித்தல்
மட்டுமே தொழில் என்று யாரும்
கற்றலை விட்டுவிட முடியாது.
படித்த ஆசிரியரைவிட படிக்கின்ற
ஆசிரியர்கள் கற்பித்தலில் ஒரு
முழுமை இருக்கும். பாடத்திட்டத்தைத்
தாண்டிய கருத்தும் இருக்கும்.
மாணவர்களுக்குப் புதிய புதிய
செய்திகளைக் கற்றுக்கொடுத்துக்
கொண்டே இருக்கும்.
ஆசிரியர்கள் வாயிலிருந்து விழும்
ஒவ்வொரு சொல்லும் நாளை விருட்சமாக
வளர்ந்து நிற்கும்.
ஆதலால் நாளும் கற்றல்
நடைபெற வேண்டும்.
கற்றதோடு நிறுத்திக் கொள்ளாமல்
கற்றவற்றை மாணவர்கள் மத்தியில்
விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
"அரைமணி நேரம் பாடம் நடத்த
குறைந்தது இரண்டுமணி நேரமாவது
படித்தல் வேண்டும் "என்பர்.
கூர்த்தீட்டப்படாத ஆயுதம் துருபிடித்து
பயன்படுத்த லாயக்கற்றுப் போய்விடும்.
அது போன்றதுதான் நாம் கற்றக் கல்வியும்.
நாளும் புத்தகங்களைப் படித்து
நம்மை கூர்த்தீட்டிக் கொண்டே
இருக்க வேண்டும்.
நாம் படித்தவை மாணவர்களுக்குப்
பயன்படத் தக்கதாய் இருக்க வேண்டும்.
மடங்கொன்று அறம் பயப்பதாய்
இருத்தல்தான் கல்வி .
மடமையைப் போக்க வல்ல கல்விதான்
உண்மையான கல்வியாக இருக்கும்.
அலெக்சாண்டரிடம் உங்களால் எப்படி
இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை
உருவாக்க முடிந்தது என்று கேள்வி
கேட்கப்பட்டது.
அதற்கு அவர் சொன்ன பதில்
தன் படைபலம்.... திறமை... ஆற்றல்...
இப்படி ஏதாவது இருக்கும் என்றுதானே
நினைக்கிறீர்கள்.
அதுதான் இல்லை.
" தன்னால் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை
உருவாக்க முடிந்தமைக்குக் காரணம்
தன் ஆசிரியர் அரிஸ்டாட்டில் மட்டும்தான்" என்று பெருமையாகக் கூறினார் அலெக்சாண்டர்.
ஆம்...நல்ல ஆசிரியர் வழிகாட்டியாக
வாய்க்கப் பெற்ற ஒரு மாணவனால்
தான் நினைத்ததைச் சாதிக்க முடியும்
என்பதைத்தான் அலெக்சாண்டர் இவ்வாறு
கூறினார்.
ஒருமுறை அரிஸ்டாட்டிலிடம் அலெக்சாண்டர்
பேசிக் கொண்டிருந்தார். "நீங்கள் எனக்கு
ஆசிரியராக கிடைத்ததால்தான் என்னால்
இத்தனை வெற்றிகளைப் பெற முடிந்தது.
உங்களுக்கு அதற்குக் கைமாறாக
ஏதாவது செய்தாக வேண்டும்.
உங்களுக்கு என்ன வேண்டும்
சொல்லுங்கள் . அத்தனையையும்
நான் செய்து தருகிறேன் "என்றார்
அலெக்சாண்டர் .
தனது ஆசிரியர் ஒரு பேரரசனிடம்
ஏதாவது பெரிதாக எதிர்பார்ப்பார்
என்று நினைத்தார் அலெக்சாண்டர்.
ஆனால் அவருடைய நினைப்பு
பொய்த்துப் போயிற்று.
"பெரிதாக எனக்கு ஒன்றும் தேவையில்லை.
ஒரே ஒரு நூலகம் மட்டும் அமைத்துத்
தந்தால் போதும் "என்றார் அந்த மாமேதை
அரிஸ்டாட்டில்.
பெரிய தத்துவமேதை என்று உலகத்தோரால்
அறியப்பட்டவர்.அவர் வாய்மொழி கேட்க
உலகமே காத்துக் கிடக்கிறது.
அந்த மாமேதைக்குப் படிப்பதற்கு
இன்னும் புத்தகங்கள் வேண்டுமாம்.
அதனால் ஒரு நூலகம் அமைத்துத் தா
என்று கேட்கிறார் அரிஸ்டாட்டில்.
படிப்பு முடிந்துவிடுவதில்லை. இறப்புவரை
தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்
என்பது அரிஸ்டாட்டில் கருத்து.
மாமேதைகள் என்று அறியப்பட்டவர்கள்
எல்லாம் ஒருபோதும் தாம் படிப்பதை
நிறுத்திக் கொள்வதேயில்லை.
இதுதான் உண்மை.
அறிஞர் அண்ணா இரவுபகல் பாராது
எப்போதும் படித்துக்கொண்டே இருப்பார்.
அண்ணாவுக்கு அறுவைசிகிச்சை
நடைபெற இருந்த நேரம்.அப்போதும்
மருத்துவமனையிலிருந்து அண்ணா
புத்தகம் படித்துக்கொண்டே இருக்கிறார்.
அவருக்கான அறுவை சிகிச்சைக்குக்
குறிப்பிடப்பட்ட அந்த நேரம் வந்தது.
ஆனால் அண்ணா கையில் வைத்திருந்த
புத்தகத்தை இன்னும் படித்து முடிக்கவில்லை.
"நான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை
இன்னும் படித்து முடிக்கவில்லை.
அறுவை சிகிச்சையை நாளை
வைத்துக் கொள்ளுங்கள்" என்று மருத்துவரிடம்
கூறினாராம் அண்ணா.
பேரறிஞர் அண்ணாவுக்கும் அறிவுத் தேடல்
இருந்து கொண்டே இருந்தது.
தான் எல்லாம் கற்றுவிட்டோம் என்ற
நினைப்பு அண்ணாவிடம் ஒருபோதும்
இருந்ததில்லை.
அதனால்தான் அவரால் படிப்பதை
நிறுத்திக்கொள்ள முடியவில்லை.
நம் எல்லோருக்கும் பகத்சிங்கை
ஒரு விடுதலைப் போராட்ட வீரராகத்தான்
தெரியும் .தூக்குக்கயிற்றை முத்தமிடும்வரை
படித்துக் கொண்டிருந்தவர் பகத்சிங்.
சிறையில் இருக்கும்போதும் படித்துக்கொண்டே
இருந்தாராம்.
தூக்கிலிடும் நாள் வந்தது.
பகத்சிங் கையில் லெனின் எழுதிய
புத்தகம் இருந்திருக்கிறது.
விடியற்காலை தூக்கிலிடுவதற்காக ஜெயிலர்
பகத்சிங்கை அழைத்து வருவதற்காக
பகத்சிங்கின் அறைக்குச் செல்கிறார்.
அங்கே பகத்சிங் கையில் புத்தகத்தோடு
உட்கார்ந்திருக்கிறார்.
கையில் இருந்தது லெனின் வாழ்க்கை
வரலாறு என்ற புத்தகம்.
ஜெயிலரைப் பார்த்ததும்
"ஐயா, கொஞ்சம் நில்லுங்கள் .
நான் இந்தப் புத்தகத்தின் கடைசி வரிகளைப்
படித்துவிட்டு வருகிறேன் "என்று தன் கடைசி
நிமிடங்களிலும் படிப்பதற்காக
சற்று அவகாசம் கேட்டிருக்கிறார்
பகத்சிங்.
"தூக்குமேடை போகும்வரை இவனால்
எப்படி இப்படி வாசித்துக் கொண்டே
இருக்க முடிகிறது "என்று வியந்து
போனாராம் ஜெயிலர்.
வாசிப்பின்மீது கொண்ட ஆவல்தான்
பலரின் வாழ்க்கை மாற்றத்திற்குக்
காரணமாக இருந்திருக்கிறது.
எப்படி ஒரு நல்ல பேச்சாளர் அத்தனை பார்வையாளர்களையும் தன் பேச்சால்
கட்டிப்போடுகிறாரோ அப்படி ஒரு ஈர்ப்பு
நல்ல புத்தகங்களுக்கும் உண்டு.
அதனால்தான் வாசிக்கும் பழக்கம்
கொண்டவர்களால் அதை நிறுத்த
முடிவதில்லை.
டால்ஸ்டாய் எழுதிய புத்தகம்தான்
சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை
ஒரு மகாத்மா காந்தியாக நமக்குத் தந்தது.
மகாத்மாவின் சத்திய சோதனை என்ற
புத்தகம்தான் தன்னை உருவாக்கியதாக
மார்ட்டின் லூதரே கூறியிருக்கிறார்.
எற்றர்னல் வெலாசிட்டி என்ற புத்தகம்தான்
அப்துல் கலாம் ஒரு அணு விஞ்ஞானியாக
வருவதற்கு காரணமாக அமைந்ததாம்.
புத்தகங்கள் முன்னால் எத்தனை மணி
நேரமும் தலை குனிந்திருக்கலாம்.
தப்பே இல்லை. படித்தப் புத்தகங்கள்
எப்படியும் ஒருநாள் நம்மைத்
தலைநிமிர வைக்கும்.
இது உண்மை. இதற்கு வரலாற்று
நாயகர்கள் அனைவருமே சாட்சி.
"கைப்பொருள் தன்னில்
மெய்ப்பொருள் கல்வி."
ஆதலால் கற்றுக் கொண்டே இருங்கள்.
"பெற்ற பிள்ளை கைவிட்டாலும்
கற்ற கல்வி ஒருபோதும்
கைவிடாது."
நாம் கற்றதும் பெற்றதும்
கைமண்ணளவு மட்டுமே.
இன்னும் கற்க வேண்டியவை
ஏராளம்... ஏராளம் உண்டு.
தாராளமாய் நேரத்தைப் புத்தகத்திற்குக்
கொடுப்பவர்கள் தோற்றுப்போனதாக
வரலாறு இல்லை.
வரலாற்றைப் புரட்டிப் போட்டவர்களும்
புரட்சியின் மூலம் சமூக சீர்திருத்தத்திற்கு
வித்திட்டவர்களும் கூட படிப்பாளிகள்தான்.
நல்லதோர் வீணை செய்து நலங்கெட
புழுதியில் வீசலாமா?
நல்ல நல்ல புத்தகங்களை
வாசிக்காமல் கிடப்பில் போடலாமா?
"தொட்டனைத் தூறும் மணற்கேணி
மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் கல்வி "
என்றார் வள்ளுவர்.
படியுங்கள்...படியுங்கள்...
படித்துக் கொண்டே இருங்கள்.
அறிவு ஊற்றாகப் பாயும்.
"நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு"
என்கிறார் ஔவை.
கற்ற புத்தகங்களுக்கு ஏற்பதான் நம்
அறிவும் இருக்கும்.
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே "
என்பார் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
என்ற மன்னன்.
என்ன இடர் நேரிடினும் படிப்பதை
ஒருபோதும் துறத்தலும் கூடாது.
நிறுத்தலும் கூடாது.
ரஷ்ய புரட்சிக்குப் பின்னர் லெனின்
செஞ்சதுக்கத்திலே உரையாற்றிக்
கொண்டிருக்கிறார்.
" உலக அரங்கில் அமெரிக்காவைவிட
ரஷ்யா வல்லரசு நாடாக வேண்டும் .
அதற்காக நாம் ஒவ்வொருவரும்
நம் கடமையை செவ்வனே
செய்ய வேண்டும் "
என்று நாட்டு மக்களிடையே
பேசுகிறார் லெனின்.
அப்போது கூட்டத்தில் இருந்த
ஒரு மாணவன் எழும்பி "அதற்காக நான்
என்ன செய்ய வேண்டும்?" என்று
கேட்டான்.
" படியுங்கள் . அது ஒன்றே போதும்"
என்றார் லெனின்.
மாணவனுக்குப் படியுங்கள் என்றாரே
நமக்கு என்ன சொல்லப் போகிறார்
என்று அறிய விரும்பிய ஒரு பெண்
"நாங்கள் என்ன செய்ய வேண்டும் ?"
என்று கேட்டார் .
புன்முறுவலோடு அந்த பெண்ணைப் பார்த்த லெனின்,"படியுங்கள்" என்றார் அமைதியாக.
இப்போது ஒரு பெரியவர் மனதில் ஒரு கேள்வி.
அவர்கள் இருவருக்கும் படியுங்கள்...
படியுங்கள் என்று ஒரே பதிலைச்
சொல்லி விட்டார்.
நமக்கு என்ன சொல்லப் போகிறார்
பார்ப்போம் என்று
நினைத்துக்கொண்டு,
" பெரியவர்களாகிய நாங்கள் என்ன
செய்ய வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள் "
என்று கேட்டார்.
அவருக்கும் "படியுங்கள் " என்ற
அதே பதிலைத்தான் கூறினார்
லெனின்.
ஒரு நாடு வல்லரசாக மாற வேண்டுமானால்
ஒட்டு மொத்த சமுதாயமும் படிப்பறிவு
பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
ஆதலால் முதலாவது நாட்டுக்கு
ஆற்ற வேண்டிய கடமை ஒன்று
உண்டென்றால் அது கற்றல்
மட்டுமாகவே இருக்கும் என்பது
லெனினின் எண்ணம்.
அதைத்தான் லெனின் தன்னிடம்
கேட்ட மூவருக்குமான பதிலாகக்
கூறினார்.
படிப்பது இளம்பிராயத்தினருக்கு
மட்டும் உரியதல்ல.
எல்லா வயதினரும் எப்போதும்
படித்துக்கொண்டே இருக்க வேண்டும்
என்பதுதான் இதன்மூலம் நாம் அறியப்படும்
செய்தி.
"படிக்காமல் இருப்பதைவிட பிறக்காமல்
இருப்பதே மேல் "என்பார் பிளேட்டோ.
அப்பப்போ...என்ன அழுத்தமான
கருத்து பாருங்கள்!
ஆபிரகாம் லிங்கன் எப்போதும் புத்தகங்களோடு
உறவாடிக் கொண்டிருப்பாராம்.
"நல்ல புத்தகங்கள் நல்ல நண்பர்கள்
அதனைப் பாதுகாத்து நம்முடனேயே
வைத்துக்கொள்ள வேண்டும் "என்பது
லிங்கனின் கருத்து.
ஆம்...பல நேரங்களில் புத்தகங்கள்
நம்மோடு பேசும்.
நமக்கு ஆறுதலைக் கொடுக்கும்.
வழிநடத்தும் கருத்துக்களைச் சொல்லித் தரும்.
" நான் இறந்த பின்னர் என் உடல் மீது
மலர் மாலைகளை வைக்க வேண்டாம்.
என் மடிமீது புத்தகங்களைப் பரப்புங்கள் "
என்று சொன்னவர் சுதந்திர இந்தியாவின்
முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு.
சாதனையாளர்கள் அனைவரும் தம்
மூச்சுக்காற்று நிற்கும்வரை தம்
படிப்பை நிறுத்தியதே இல்லை.
கலைஞர் இவ்வளவு உயரம் தொடக்
காரணம் அவரது வாசிப்பு மட்டுமே
என்பார். அவருடைய வாசிப்பு ஆர்வம்
அவரைப் பன்முகத்தன்மை கொண்ட
ஒரு மாமேதையாக
பேச்சாளராக படைப்பாளராக
உலகுக்கு அடையாளம் காட்டியது.
ஒரு அறிஞரைப் பேரறிஞர் அண்ணா
என்று செதுக்கித் தந்தது .
ஒரு சாதாரண விஞ்ஞானியை
அணுவிஞ்ஞானியாக்கி உலகமே அண்ணாந்து
பார்த்து வியக்க வைத்தது.
ஒரு சாதாரண குடிமகனை நாட்டுத்
தந்தையாக்கிப் பெருமைபடுத்தி நின்றது.
கூலித்தொழிலாளியை அமெரிக்க
குடியரசுத் தலைவராக்கி அழகு பார்த்தது.
வாசிப்புக்கு எவ்வளவு பெரிய
ஆற்றல் இருக்கிறது பாருங்கள்.
வாசித்தல் ஒரு மனிதனின் சுவாசக்காற்று
நிற்கும்வரை நடைபெற்றுக் கொண்டே
இருக்க வேண்டும்.
வாசிப்பவனுக்குத்தான் பிற உயிர்களை
நேசிக்கவும் தெரியும்.
போதிக்கவும் தெரியும்.
ஆதலால் வாசியுங்கள்.
சுவாசித்தலை மறக்கும்வரை
வாசித்துக் கொண்டே இருங்கள்.
வாசிப்போம்...வாசித்தலை நேசிப்போம்.
It encourages my attitude of reading veryuch.
ReplyDeleteஉங்களின் படைப்புகளே எங்களை மேதைகளாக்கிவிடும்.மிக்க நன்றி. வாழ்த்துகள்.
ReplyDelete