பொறாமை

                     பொறாமை


சேவற்கோழி ஒன்று வயல்வெளியில் இரை பொறுக்கிக் கொண்டிருந்தது.
    தொலைவில் பெட்டைகோழிகள் சில இரை தேடிக் கொண்டிருந்தன.
    அவற்றோடு ஒப்பிடுகையில் சேவலின் தோற்றம் சற்று கம்பீரமாக தெரியும்.
    நான் தான் அழகு என்று கொண்டையைக் கொண்டையை ஆட்டும் சேவல்.
             நாளும் ஒரு தடவையாயாவது தன் அழகைப்பற்றி
  தம்பட்டம் அடிக்காவிட்டால் சேவலுக்கு தலையே வெடித்துவிடும் போல் இருக்கும்.
        இன்றும் அந்த பெருமையோடு  வயலைச் சுற்றி ச்சுற்றி வந்தது சேவல்.
  தொலைவில்...      அங்கே...யாரது?     நம்பவே முடியவில்லையே.
    எத்தனை அழகு? எத்தனை  அழகு? கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது  சேவல்.
   தன்னைவிட  அழகான   ஒருவர் நம்ம ஏரியாவில் இருக்கலாமா?
   கூடாது...கூடவே கூடாது.
    இந்த மயில் இப்படி இங்கு வந்தது?
   இதுவரை இந்த மயிலை நம்ம இடத்திற்கு வந்ததில்லையே.
  
        அம்மாடியோவ்...இந்த மயிலைப் பார்த்தால் இந்த கோழிகள் என்னை திரும்பி கூட பார்க்க மாட்டார்களே !
       மயிலைப் பார்க்க பார்க்க சேவலுக்கு பற்றிக் கொண்டு வந்தது.                     என்ன செய்வது?
       மயிலின் அழகிற்கு முன்னால்  தான் ஒன்றுமில்லாதது போன்ற ஓர் உணர்வு.
        தாழ்வு மனப்பான்மையில் கூனி குறுகிப் போனது சேவல்.
நாளை மற்ற நாள் இந்த ஏரியாவிற்கே மயில் வரக்கூடாது.
  என்ன செய்யலாம்?   ...ரூம் போட்டு யோசித்தது சேவல்.
       ம்...இப்படி செய்தால் என்ன?
       அதுதான் சரியான வழி.   இந்த பிரச்சினைக்கு  இதுதான் நிரந்தர     தீர்வாக இருக்கும்.
       ஒரு முடிவோடு களத்தில் இறங்கி வேலை செய்தது.
       இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.
மயில் தோகை விரித்து ஆடும் காட்சி கண்முன்னே வந்து தூங்க விடாமல் செய்தது.
        பொறாமை   தீயில் வெம்பியது சேவல்.
        இத்தனை நாளும் தான் மட்டும் தான் இந்த ஏரியா ஹீரோ என்று நினைத்து வந்த சேவலுக்கு தனக்கு வில்லனாக மயில் களத்தில் இறங்கியிருப்பது பிடிக்கவில்லை.
        தனக்கு போட்டியாக இன்னொருவரா?
        கூடவே கூடாது. தீர்த்துக் கட்டிவிட வேண்டியதுதான்.
கங்கணம் கட்டி வேலையில் இறங்கியது.
         தீர்த்துக் கட்டுவது அவ்வளவு எளிதான காரியமாக தெரியவில்லை.
     தோகையை வெட்டி விட்டுற வேண்டியதுதான். அதுதான் சரியான வழி.
      அதற்கான வேலையில் இறங்கியது சேவல்.                        
        விடியும் முன்பாக சிறுவர்கள் பட்டம் விடுவதற்காக வைத்திருந்த மாஞ்சா கயிற்றை எடுத்துக்கொண்டு வயலுக்குப் புறப்பட்டது.
        மயில் நேற்று இங்கேதான் வந்து ஆடியது.
        நாளையும் இங்கு வரும்.வரட்டும்...வரட்டும்.
        மயில் வந்து ஆடிய இடத்தில் குறுக்கும் நெடுக்குமாக மாஞ்சா கயிற்றை கட்டி வைத்தது.
        மயில் எப்படியாவது வயலுக்கு வரும். தோகையை விரித்து அங்கேயும் இங்கேயும் ஆட்டும்.
        இறகுகள் மாஞ்சாவில் மாட்டிக் கொள்ளும்.
அதிலிருந்து மீள்வதற்காக மயில் பறக்க முயற்சிக்கும்.
       அப்போது இறகுகள் வெட்டுபட்டு கீழே விழும்.
       இறகுகள் இல்லா மயில் எப்படி இருக்கும்?  மொட்டை மயில் மொட்டை மயில் என்று பார்ப்பவர்கள் சிரிப்பர்.
       இப்படி மனதிற்குள் கற்பனை செய்து பார்த்து சிரித்துக் கொண்டது சேவல்.
       நாளும் அதிகாலையில் செல்லும் சேவல் இன்று சற்று தாமதமாகவே    புறப்பட்டு போயிற்று.
      வயல் ஓரமாக நின்று எட்டி எட்டிப் பார்த்தது.
       மயில் வீழ்ந்து கிடப்பதாக தெரியவில்லை. சிறிது தூரம் வயலுக்குள் இறங்கி தேடிப் பார்த்தது.
எங்கும் காணலியே....ஒருவேளை செடிகளுக்குள் விழுந்து கிடக்குமோ?
       மொட்டை மயிலைப் பார்க்கும் ஆர்வத்தில் அங்குமிங்கும் தேடியது.
கயிறு இங்கே தானே கட்டினேன்.
      கயிறு கட்டிய இடத்தில் போய் தலையை உயர்த்தியது.
      மறுநொடியில்...ஆ...ஆ..சேவலின் குரல்வளையை யாரோ நெறிப்பது போல் இருந்தது.
      மாஞ்சா கயிறு சேவலின் கழுத்தில் மாட்டிக்கொண்டது.
      சேவல் அங்குமிங்கும் துள்ளியது.
      துள்ளிய வேகத்தில் தலை அறுபட்டு கீழே விழுந்தது.
      தலையில்லா சேவல் உடல் கொஞ்ச நேரம் துடிதுடித்து அப்படியே அடங்கிப் போனது.
      பாவம்...சேவல்.    பொறாமையால் தான் விரித்த  வலையில் தானே மாட்டிக் கொண்டு மாண்டு போனது.
      பொறாமை இத்தனை கொடியதா?
      இவற்றை எல்லாம் பார்த்துப் பதைபதைத்துப் போன குயில்,
     
  "அழுக்காறு என   ஒருபாவி திருச் செற்று
    தீயுழி உய்த்து விடும்"
            என்று அய்யன் வள்ளளுவர் இதைத்தான் சொல்லி வைத்தாரோ!
    ஊருக்கெல்லாம் கேட்கட்டும் என்று உரக்க பாடியபடி  பறந்து சென்றது.
      
      
      
      

                            

Comments

Post a Comment

Popular Posts