மனங்களைக் கொள்ளையடியுங்கள்.
மனங்களைக் கொள்ளையடியுங்கள்
.
கொள்ளையடிக்க வேண்டுமா?
மொகலாய மன்னர்கள் கோவில்களில் கொள்ளையடித்துச் சென்றார்கள் என்று படித்திருக்கிறோம்.
முகமூடிக் கொள்ளையர்கள் கடைகளில் கன்னக் கோலிட்டு திருடிச் சென்றதாக கேள்விப்பட்டிருக்கிறோம்.
லாரி லாரியாக மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக வாசித்திருக்கிறோம்.
இது என்ன புதுக்கொள்ளை?
" மனக் கொள்ளையா? வேண்டவே வேண்டாமப்பா.
ஆளை விடுங்கடா சாமி....."என்று அலர வேண்டும் போல் தோன்றுகிறதா|
"இதுக்குப்போய் அலட்டிக்கலாமா? "என்று பாடவேண்டும் போல் தோன்றுகிறது.
கொள்ளை என்றாலே ஏதோ தீண்டத் தகாத ஒரு செயல் என்று ஓடி
ஒளியப் பார்க்கிறோம்.
"அப்போ நீங்க இதுவரை கொள்ளையடித்ததே இல்லையா?" "அட...போங்கங்க ...உங்கள் வாழ்நாளில் பாதி நாளை வீணாக கழித்து விட்டீர்கள்" என்று உங்களுக்காக பரிதாப்படுகிறேன்.
" உங்கள் பரிதாபம் யாருக்கு வேணும்? விசயத்துக்கு வாங்க " உங்கள் அவசரம் புரிகிறது.
பெற்றோர் மீது கொள்ளைப் பிரியம் இல்லையா?
மழலைகளின் சிரிப்பில் உங்கள் மனம் கொள்ளைப் போனதில்லையா?
பனி படர்ந்த புல்வெளியைக் காண்பதில் கொள்ளை மகிழ்வு கண்டதில்லையா?
திருநெல்வேலி அல்வா என்றால் எனக்கு கொள்ளை பிரியம் என்று நாக்கில் தண்ணீர் ஊற... ஊற.. பேசியதில்லையா?
இப்படி வண்டி வண்டியாய் கொள்ளையை மனதில் வைத்து கொண்டு கொள்ளைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் பார்க்கிறீர்கள்!
யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்?
கொள்ளை நம் கூடப் பிறந்த குணம் ஐயா!
அதை நம்மைவிட்டு பிரிக்க முடியுமா என்ன?
எப்படியோ நீங்களும் நானும் கொள்ளையர்கள் தான் என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.
வேறு வழி இல்லை.
நீங்கள் செய்த கொள்ளைக்கு இன்னொரு பெயர் உண்டு.
' அலாதி 'என்பது தான் அதற்கான பெயர்.
" இந்த அலாதியைச் சொல்வதற்குதான் இத்தனை அகராதியா?" முணுமுணுப்பது கேட்கத் தான் செய்கிறது.
"அட விடுங்கங்க... எல்லாம் போகட்டும்.இப்போ விசயத்திற்கு வருவோம்."
எல்லா செயலிலும் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு.
" ஏன் நோய் நுண்ணுயிரிகளில் கூட நன்மை செய்பவையும் உண்டு.
தீமைசெய்பவையும் உண்டு "என்று நாம் படித்ததில்லையா?
அதுபோல் தான் கொள்ளையிலும் நன்மை தரும் கொள்ளையும் இருக்கத்தான் செய்கிறது.
"வாருங்கள் .கொள்ளையை வீட்டிலிருந்தே தொடங்குவோம்."
எல்லாவற்றிற்கும் தொடக்கப்புள்ளி வீடாகத்தான் இருக்கும். இருக்கவும் வேண்டும்.
முதலாவது நீங்கள் வைக்கும் குறி பெற்றோராக இருக்கட்டும்.
" பெற்றோர் மனதை கொள்ளையடிக்க வேண்டுமா? "
" வேண்டாமடா சாமி...நான் இந்த விளையாட்டுக்கு வரல."
வேறு எதாவது நடக்கிற காரியமாக கூறுங்கள்.
" இதெல்லாம் முடிகிற காரியமா?"
" நல்ல பிள்ளை என்று பெயரெடுத்துவிட வேண்டும் என்று நானும் படாதபாடு படுகிறேன். ஒன்றும் வேலைக்கு ஆகமாட்டேன் என்கிறது."
என்ற உங்கள் அங்கலாய்ப்பு என் காதுகளில் விழத்தான் செய்கிறது.
" இதற்குப் போய் அலட்டிக்கலாமா?"
பெற்றோர் மனங்களைக் கொள்ளையடிக்கும் மந்திரம் உங்கள் கைவசம் இருக்கும்போது ஏனிந்த சலிப்பு?
"பேச்சுக்குப் பேச்சு... வாய்க்கு வாய் ...ஆம் அம்மா .... ஆம் அப்பா ... சரி அம்மா ....சரி அப்பா ....என்று சொல்லிப் பாருங்கள். "
"மாட்டேன் என்பதை வந்து செய்கிறேன் அம்மா "என்று நாசூக்காக சொல்லுங்கள்.
மறுப்போ வெறுப்போ கொஞ்சலோடு சேர்ந்து வெளிப்படட்டும்.
இப்போது உங்கள் பெற்றோர் மனம் உங்கள் கைவசம்.
" ப் பூ...இவ்வளவு தானா?
எப்படி அசத்துறேன் பாருங்க."
களத்தில் இறங்கிவிட்டீர்கள் அல்லவா!
வெற்றி உங்களுக்குதான்.
முதல் கொள்ளை எளிதாக முடிந்து விட்டதல்லவா|
இனி வரிசையாக கொள்ளையில் இறங்கிவிட வேண்டியது தான்.
பள்ளிப்பருவத்தில் உடன் பயிலும் மாணவர் மனங்களைக் கொள்ளையடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
இது ஒன்றும் பெரிய காரியம் அல்ல.
கொஞ்சம் கரிசனம் எடுத்துப் பேசுங்கள்.
" நேற்று பள்ளிக்கு வரவில்லையா? உடம்பு சரியில்லையா?" கரிசனமாக விசாரியுங்கள்.
உங்கள் கரிசனம் அவர்களின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பும்.
அவர்கள் மனதை உங்கள் கையில் விழ வைக்கும்.
அடுத்த கொள்ளை ஆசிரியராக இருக்கட்டும்.
" ஐயா ...சாமி இது மட்டும் கூடவே கூடாது. நடக்கவும் நடக்காது.
வேறு ஆளை பிடியுங்கள்.
ஓட்டம் பிடிக்கறேன் சாமி. ஆளை விடுங்க". ஓட நினைக்கிறீர்களா?
"எங்க ஓடுறீங்க? ப்ளீஸ் ...ஒரு நிமிடம் கேளுங்க."
ஆசிரியர் என்ன உங்களுக்கு ஆகாதவரா என்ன!
" பெற்றோரையே கொள்ளையடித்து விட்டீர்கள்.
மிக எளிதாக ஆசிரியர் மனங்களையும் கொள்ளையடித்து விடலாம்.வாருங்கங்க"
இதில் மட்டும் வெற்றி கண்டுவிட்டால் எந்நாளுமே வெற்றி உங்களுக்குத்தான்.
ஆசிரியர் மனங்களைக் கொள்ளையடிக்கும் ஒரே வழி நம்மால் முடிவதைச் செய்து நம்மை முன்னிலைப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
படிப்பில் மட்டுமல்ல. பேச்சால் ஆசிரியரின் மனங்களை எளிதில் கொள்ளையடித்துவிட முடியும்.களத்தில் இறங்கி பாருங்கள்.
அசந்து போவீர்கள்.
மக்களின் மனங்களைக் கொள்ளையடிக்கத் தெரிந்தவர்தான் நல்ல அரசியல்வாதியாக இருக்க முடியும்.
பார்வையாளர்களின் மனங்களைக் கொள்ளையடிக்கத் தெரிந்தவர் நல்ல பேச்சாளர்.
இப்போது நாமும் கொள்ளையில் இறங்கிவிட வேண்டியதுதான் என மனம் கணக்கு போடுமே!
உங்கள் கணக்கு எப்போதும் சரியானதாகதான் இருக்கும்.
தொடங்கட்டும் உங்கள் வெற்றி கணக்கு.
This is very good.
ReplyDeleteVery nice!!
ReplyDeleteIt boosts ourselves
ReplyDelete