வேண்டும்

வேண்டும்.....வேண்டும்


அனைவர் மனதையும் ஆட்டிப் படைக்கும் 
ஒற்றைச் சொல் ஒன்று 
உண்டு என்றால் அது வேண்டும் என்பதுதான்.
இந்த வேண்டும் என்ற சொல்லை
வேண்டாம் என்று நகர்த்தி வைத்துவிட்டு
அந்த இடத்தில் வேறு ஏதாவது ஒரு சொல்லைப் 
போட்டுப் பாருங்கள்.
சரியாக அமைந்துவிடுமா?

நான் ஆசை அற்றவன் அதனால்
வேண்டும் என்ற சொல்லுக்கே
இடமில்லை என்று சொன்னால்
நம்ப முடிகிறதா?

ஆசை அற்ற புத்தரும் ஏதோ ஒன்று வேண்டும்
என்றுதானே ஆடம்பர வாழ்க்கையை விட்டு
வெளியேறினார்.

இந்த வேண்டும் என்ற சொல்
மட்டும் நம் கூடவே வரவில்லை
என்றால் நாம் என்றோ 
வேண்டாதவர்கள்
ஆகியிருப்போம்.

அதிகாலை எழுந்ததும் எல்லாரும்
நல்லா இருக்க வேண்டும் சாமி என்ற
வேண்டுதலோடுதான் நம் நாளே
தொடங்குகிறது.

அடுத்தது காபி வேண்டும்.
கத்தரிக்காய் வேண்டும்.
என்று வேண்டும் பட்டியல் நாள் முழுவதும்
நம்மோடு பயணப்பட்டுக்கொண்டே இருக்கும்.

எதற்கு உங்களுக்கு இந்த
வேண்டாத வேலை
என்கிறீர்களா?

எனக்கு நீங்கள் வேண்டுங்க...
அதனால் நீங்கள் வேண்டும்...
வேண்டும் என்று சொல்லும்வரை
நான் உங்களை விட்டுவிடப் போவதில்லை.

இது என்னப்பா புதுசு புதுசா
பொட்டலம் கட்டிக்கிட்டு வாரீங்க...
 என்ற உங்கள் முணுமுணுப்பு
என் காதுகளில் முட்டிமோதி....
விழத்தான் செய்கிறது.

எனக்கு வேணும்....எனக்கு
வேணும்....எனக்கு
நல்லா வேணும்.

என்பதால்தானே தருமி அடுத்தவர்
எழுதிக் கொடுத்த பாடலைத்
தன் பாடல் என்று சொல்லி நன்றாக
வாங்கிக் கட்டிக் கொண்டார்.

அவருக்கு மட்டும் வேண்டும்
என்று சொல்லும்போது எனக்கு 
மட்டும் வேண்டாமா?

இப்படிதாங்க ஒரு மனிதர்
ஒரு நாள் இறைவனிடம் சென்று 
"எனக்கு இந்த உலகத்தில்
இருக்கவே பிடிக்கவில்லை.
அனைவரும் சுயநலக்காரர்கள்.
பேராசை பிடித்தவர்களாக
 இருக்கிறார்கள்.
 வேண்டும்...வேண்டும் என்று
எதிலும் ஒரு மன நிறைவில்லாமல் 
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதில் நானும் விதிவிலக்கல்ல.

எவ்வளவுதான் பணம் சம்பாத்தியம்
பண்ணியிருந்தாலும் மறுபடியும்
மறுபடியும் வேண்டும் வேண்டும்
என்கிறது மனசு.
எதிலும் ஒரு திருப்தியே இல்லை.
எனக்கு இப்போதெல்லாம் 
இந்த வேண்டும் என்ற
சொல்லைக் கேட்டாலே 
ஒரே அலர்ஜியாக
இருக்கிறது "என்றார்.

"அதனால் நீ சொல்ல வருவது என்ன 
என்பதை நான் தெரிந்து
கொள்ளலாமா? "என்றார் கடவுள்.

"அதனால் இந்த வேண்டும் என்ற 
சொல்லையே
இந்த உலகத்தில் 
இல்லாமல் செய்து விடுங்களேன்"
என்றார் அந்த மனிதர்.

"வேண்டும் வேண்டாம்....
அப்புறம்.... ..."என்று கேட்டுவிட்டு
அந்த மனிதர் வாயிலிருந்து அடுத்து
என்ன வார்த்தை வரப்போகிறது என்று
எதிர்பார்த்து காத்திருந்தார் கடவுள்.

"நல்லவர்கள் வாழும்
உலகம் வேண்டும்" என்றார்
அந்த மனிதர்.

கடவுள்....ஹா...ஹா..ஹா..
என்று உரத்தக் குரலில்
சிரித்துவிட்டார்.

"நீங்கள் இப்படி
சிரிக்கும் அளவிற்கு அப்படி
என்ன நான் 
தப்பாகக் கேட்டுவிட்டேன்"
என்றார் அந்த மனிதர்.

"நீ கேட்டதே தப்பான கேள்விதானே!
ஏதோ வேண்டும் என்றாயே....
மறுபடி சொல்....என்ன வேண்டும்?
சற்று உரக்கச் சொல் "என்றார் கடவுள்.

கடவுள் கேட்ட கேள்வியின் 
உள்ளார்ந்த பொருள் புரியாமல்
"நல்லவர்கள் வாழும்
உலகம் வேண்டும்" என்றார் அந்த மனிதர்
அப்பாவித்தனமாக.

"வேண்டும் வேண்டாம் என்றாய்.
பிறகு இன்னொரு உலகம் வேண்டும்
என்கிறாய்?
உனக்கே இது முரண்பாடாகத்
தெரியவில்லை.

இப்போதுகூட நீ நல்லவர்கள்
வாழும் உலகம் வேண்டும்
என்றுதானே கேட்டாய்.
எதுவுமே வேண்டாம் என்று 
கேட்கவில்லையே!

இந்த உலகில் உள்ளவர்கள் 
அனைவருமே ஒன்று வேண்டாம்
என்று சொல்வது இன்னொன்று
வேண்டும் என்பதற்காகத்தான்.
இந்த உண்மையை நீ புரிந்துகொள்"
என்றார் கடவுள்.


"அது எப்படி? புத்தர்
அரண்மனையும் ஆடம்பர வாழ்க்கையும்
வேண்டாம் என்றுதானே துறவறம்
சென்றார்."

"புத்தர் அரண்மனை வாழ்க்கை வேண்டாம்
என்றார்.
ஆனால் துறவு வாழ்க்கை வாழ வேண்டும்
என்றுதானே சென்றார்.
அப்படியானால் புத்தருக்கும்
ஏதோ ஒன்று வேண்டியிருந்தது.
அது நிம்மதியாக இருக்கலாம்.
அல்லது அமைதியாக இருக்கலாம்.
வேண்டும் என்பதை நீக்கிவிட்டு
யாரும் வாழ்ந்ததாக சரித்திரமில்லை."


"அப்படியானால் இந்த வேண்டும்
என்ற சொல்லைக் கட்டிக்கொண்டு தான்
கடைசிவரை வாழ வேண்டுமா?

"ஏன் இத்தனை சலிப்பும் வெறுப்பும்?
வேண்டும் என்ற ஒற்றைச் சொல்லைக்
வைத்துக் கொண்டு வாழ்ந்து பார்.
அதன் பின்னர் நடைபெறும் பின்
விளைவுகள் உன்னை வேண்டும்
என்ற சொல்லின் பின்னால் ஓட வைக்கும்.
அப்படி ஒரு மந்திர சக்தி இந்த
வேண்டும் என்ற சொல்லுக்கு உண்டு."

"அப்படி என்ன சக்தி இருக்கிறது
என்பதைச் சொல்லித் தாருங்களேன்.
அது புரியாமல்தானே புலம்புகிறேன்."

"அவங்க வேண்டாம்.
இவங்க வேண்டாம்.
அது வேண்டாம்.
இது வேண்டாம்.
என்று வேண்டாதவர்களோடும்
வேண்டாதவற்றோடும்
மல்லுக்கட்டிக் கொண்டு 
நிற்பதை விட....

வேண்டும்...வேண்டும்.
நல்லவை செய்ய வேண்டும்.
நல்லவற்றை விரும்ப வேண்டும்.
நல்லவர்களோடு இருக்க வேண்டும்.
நல்ல குடும்பம் வேண்டும்.
நல்ல புத்தகங்களைப்
படிக்க வேண்டும்.
நல்ல சொற்களைப் பேச வேண்டும்.
நல்ல உழைப்பு வேண்டும்.
நல்ல உடல் நலம் வேண்டும்.
இப்படி வேண்டியவற்றை மட்டும் செய்.
வேண்டாதவை போயே போய்விடும்
வேண்டும் என்ற சொல்லில் இருக்கும்
சுகம் உனக்கும் புரியும்.
அதனால் நீ பெறுவதெல்லாம்
நன்மையானதாகவே இருக்கும்?"

"உண்மையாகவா?
அதாவது 
எதிர்மறை சிந்தனைகளை நீக்கி
நேர்மறையானவற்றை நோக்கி
நடந்தாலே எல்லாம் நன்மையானதாக
நடக்கும்.வீணாக வேண்டாம்....
வேண்டாம் என்று புலம்ப வேண்டியிருக்காது
என்கிறீர்கள் இல்லையா?"
சற்று புரிந்தும் புரியாதது போல்
கேட்டார் அந்த மனிதர்.

"புரிகிறது... புரிகிறது....
உன் கேள்வி என்ன என்பது
புரிகிறது.
இப்போதுதான் நீ சரியான வழிக்கு
வந்திருக்கிறாய்.
சரியானவற்றைச் செய்ய வேண்டும்.
சரியான நேரத்தில் செய்ய வேண்டும்.
சரியானவற்றைப் பேச வேண்டும்.
சரியான நட்பைக் தேர்வு செய்ய வேண்டும்.
சரியான உணவை உட்கொள்ள வேண்டும்
 சரியானவற்றோடு பயணப்பட வேண்டும்
என்று மனதில் கணக்குப் போடத் 
தொடங்கிவிட்டாய் இல்லையா?
இனி நீ நன்மையை மட்டுமே
காண்பாய்.

இப்போது வேண்டும்.. வேண்டும்
என்று மனம் கேட்குமே!"

சிரித்துக்கொண்டே கடவுள் மறைந்து
போனார்.

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்.


என்ற பாரதியின் இந்தப்
பாடலைப் படித்தாலே
வேண்டும் என்ற சொல்லில் 
இருக்கும் ஓர்
ஈர்ப்பு உங்களுக்குப் புரியும்.


நேர்மறை சிந்தனையோடு இருங்கள்.
இதைச் சொல்வதற்காகவா இந்த
வேண்டும் என்ற
ஒற்றைச் சொல்லைத் தூக்கி வந்தார்
கடவுள் ?என்ற நினைப்பு மனதிற்குள்
ஓடிக்கொண்டிருக்கிறது இல்லையா!

கடவுள் சொல்லாமல் நான் சொன்னால்
கேட்கவா போகிறீர்கள்.?

வேண்டும்...வேண்டும்..
வேண்டும்....நல்ல சிந்தை
மனதில் இருந்திடல் வேண்டும்!














Comments

  1. உங்கள் நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும் கட்டுரைகள் அவசியம் வேண்டும்.😐

    ReplyDelete

Post a Comment

Popular Posts