குலத்தளவே ஆகுமாம் குணம்


குலத்தளவே ஆகுமாம் குணம் 


நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

முடியாதல்லவா !
அதே போன்றுதான்
சிலரின் பிறவிக் குணத்தை யாராலும்
மாற்ற முடியாது.

அது  என்ன பிறவிக்குணம்?

 இப்படியொரு கேள்வி எழாமலில்லை.
 
 சில செயல்கள் நமது
  பழக்கத்தால் வருவன.
 எடுத்துக்காட்டாக 
 செந்தமிழ் நாப்பழக்கம் வருவது.
 கல்வி  மனப்பழக்கம்
 ஒழுக்கம் நடைப் பழக்கம்
 என்கிறார் ஔவை. ஆனால் நட்பும்
 தயையும்
 கொடையும் பிறவிக்குணம்
 என்று சொல்லியிருக்கிருக்கிறார்.
 
 சிந்திக்க வேண்டிய செய்தி.
 
 சில குணங்கள்  பழகப்பழக
 வந்துவிடும்.
 ஆனால் இன்னும் சிலவற்றை பழக்கத்தினால்
 ஏற்படுத்திக் கொள்ள முடியாது
 என்பதுதான் நிதர்சனமான உண்மை.
கொடை பிறர் மெச்ச வேண்டும் 
என்பதற்காக
செய்வோரும் உண்டு.
அவர்கள் எதிர்பார்த்த புகழும்
அங்கீகாரமும் கிடைக்காதபோது
நாளடைவில் அந்தக் கொடை
குறைந்து போகும்.
இல்லாமலே போய்விடும்.

அதனால்தான் பிறவிக்கு குணத்தால் 
வருவதுதான்
கொடை, தயை, நட்பு எல்லாம்
என்பது  ஔவை கருத்து.
அப்படி பிறவிக் குணத்தால் 
உந்தப்பட்டு செய்யப்படும்
 நற்காரியங்கள் எந்த இடத்திலும் 
 எதற்காகவும் நின்று போகாது 
 தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும்.
என்கிறார் ஔவை.

இந்தக் கருத்துக்கு வலு சேர்ப்பது போல்
மூதுரையில் இன்னொரு பாடலும்
வைத்திருக்கிறார் ஔவை .

 
இதோ பாடல் உங்களுக்காக...


"நீரளவே ஆகுமாம் நீராம்பல்
தான் கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு-
மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற
செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்"

  மூதுரை      :பாடல்    7



ஒரு தடாகத்தில் அல்லி பூத்திருக்கிறது.
அதன் இயல்பு என்ன?
எவ்வளவு நீர் வரத்து அதிகமானாலும்
அந்த நீரின் மேல் தலை தூக்கி நிற்பதுதான்
அல்லியின் இயல்பு.
அல்லி உயர்வதற்கு நீர் மட்டமே
காரணம்.

கல்வி அறிவு எப்படி இருக்கும்?
கற்க கற்க அறிவுப்
பெருகும். கற்கும் நூல்களைப் பொருத்தே
அறிவு இருக்கும்.

செல்வம் தான்செய் நற்பேற்றின்
 காரணமாக
வந்து குவியும்.தவத்தின் பயனாகவே
செல்வம் பெருகும்.

ஆனால் 
ஒருவனுடைய குணம் மட்டும் 
அவன்  பிறந்த  குலத்திற்கு
ஏற்பவே  அமையும்.

இதுதான் பாடலின் கருத்து.

 வளர்ப்பும் சூழலும்
எப்பேர்பட்டவனையும் மாற்றிவிடும்.
ஒருவனை நல்லவனாகவோ
 தீயவனாகவோ மாற்றுவது
 பெற்றோர் கையில்தான்
 இருக்கிறது என்று ஒரு சிலர்
 வாதிடுவர்.
 
 இன்னும் சிலரோ இல்லை..இல்லை...
 ஒருவனுடைய குணம் முற்றிலும்
 வளரும் சூழ்ல் மற்றும்
 நட்பு வட்டத்தைச் சார்ந்ததாகவே இருக்கும்
 என்பர்.இப்படியாக
 வளர்ப்பின் மேலும் சூழல் மேலும்
பாரத்தைப் போட்டு விட்டு ஒதுங்கி
 நின்று கொள்ளும் 
 இயல்பு இன்னொரு தரப்புக்கு உண்டு.
 
 இவற்றுள் எது உண்மை ?
 
  ஆய்வுகள் இன்றும் நிகழ்ந்து 
  கொண்டுதான் இருக்கின்றன.
 
 இரண்டு தரப்பினர் கூறும்
 கருத்திலும் உண்மை  இல்லாமலில்லை.
 நமது பட்டறிவு நம்மை அங்கேயும்
 இங்கேயும் திரும்பிப் பார்க்க
 வைக்கிறது.
 
 குழப்பமடைய வைக்கிறது.

ஆனாலும்  இயல்பாகவே மனதில்
ஈரம் இருக்கும் ஒருவரால் தான்
பிற உயிர்கள்மீது அன்பு செலுத்த
முடியும்.
இந்த இயல்பு எப்படி வந்தது?

ஊட்டப்பட்ட  அல்லது கட்டி எழுப்பப்பட்ட
எதுவும் கடைசிவரை நிறம் மாறாததாக..
தன்மையை இழக்காததாக ...
இருந்துவிடுவதில்லை.

இதுபோன்று தான் குணமும்
எப்போதும் நிலையானதாக
இருப்பதில்லை.
நேற்று நல்லவராக இருந்தவர்
இன்று நல்லவராக இல்லை.
அப்படியானால்  ஒருவனுடைய
குணம் எதைச் சார்ந்ததாக இருக்கிறது?

ஔவை சொல்லும் பிறவிக்குணம்
என்பதை ஒத்துதானே ஆக வேண்டும்.

குலத்தின் படியே நற்குணம்
வாய்க்கப் பெறும்.
என்பதுதான் ஔவையின் 
ஆணித்தரமான கருத்து.

நல்ல சிந்தனைக்குரிய 
கருத்து இல்லையா?

Comments

Popular Posts