புத்தாண்டு வந்தாச்சு

      புத்தாண்டு வந்தாச்சு புத்தாண்டு வந்தாச்சு.
புதிய டைரி வாங்கியாச்சு.

புதுப்பக்கங்களில் புதுப்புது
தீர்மானங்கள் அலங்காரமாக
எழுதி வைச்சாச்சு.


இனி என்ன...மற்றதெல்லாம் 
வழக்கம்போல் தான்.
இதுதான் அன்றாட நிகழ்வு என்பதுபோல
வருடாந்திர நிகழ்வாகிப் போய்விட்டது.

ஆனாலும் சிலரிடமிருந்து
வேறுவிதமாக மனதின் ஒலி
நேரடியாக ஒலிபரப்பட்டு வருவதைக்
கேட்க முடிகிறது.

புதிய தீர்மானங்கள் எடுத்திருக்கோமில்ல..
பார்த்துகிட்டே இருங்க....நாளையிலிருந்து
நான் புதிய ஆள் என்ற
பேச்சு காற்றோடு என் காதுவரை வந்தாச்சு.
என் காதுகளுக்கு மட்டுமா வந்திருக்கும்.?
உங்கள் காதுகளுக்கும் வந்திருக்கும்.

இந்தப் புத்தாண்டில் நான்
அப்படி இருப்பேன்.
இப்படி இருப்பேன் என்று ஆளுக்கொரு 
உருட்டு உருட்டிக்
கொண்டிருப்போம்.

ஆனால் என்னடி மீனாட்சி
கடந்த ஆண்டு எடுத்த புத்தாண்டு
தீர்மானங்கள் என்னாச்சு ?என்ற
பாட்டு காத்தோடு வந்து கீச்சுமூச்சுக்
காட்டி மிரட்டிக் கொண்டிருக்கிறது.

பழையதை எல்லாம் 
நினைவுபடுத்தாதுங்கப்பா.
இன்றிலிருந்து நான் புதிய ஆள்
என்று உதடுகள் சொன்னாலும்
கடந்த ஆண்டு தீர்மானங்கள்
யாவும் நேற்றோடு
 காற்றோடு போயாச்சு
என்ற முணுப்பு மட்டும் மெதுவாக 
உதடுகளில் உரசிப்போகிறது.
நம்மை உள்ளுக்குள் சிரிக்க வைக்கிறது.

எல்லாருடைய வாழ்விலும்
ஆண்டுதோறும் நடைபெறும் 
நிகழ்வுதான் இவை எல்லாம்.
இதற்கு நானும் நீங்களும் 
விதிவிலக்கா என்ன?

எத்தனை புத்தாண்டு வந்தாலும்
மிஞ்சி மிஞ்சி போனால் 
இரண்டு வாரங்கள்தான்
தீர்மானங்களும் அவற்றை நிறைவேற்ற
வேண்டும் என்ற உறுதியும்
இருக்கும்.
அதற்குப் பிறகு தீர்மானமும் 
மறந்து போகும். உறுதியும் தளர்ந்து
போகும். அந்த நினைப்பிலேயே
தொய்வு விழுந்துவிடும்.

இதுவரை எந்த ஆண்டில் எடுக்கப்பட்ட
தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.
இனி எதற்கு புதிய தீர்மானங்கள்?

இந்த ஆண்டு மட்டும் புதிதாக
என்ன நிகழ்ந்து விடப் போகிறது?
இப்படி உள்மனது சொன்னாலும் இந்தப்
பாழாய்ப்போன மனது கேட்கவா செய்கிறது?


கடந்த புத்தாண்டுக்கு எடுத்த தீர்மானங்கள்
அத்தனையும் சட்டசபையில் 
நிறைவேற்றப்பட்டு
நிறைவேற்றப்படாத தீர்மானங்களாக 
ஓர் ஓரமாக வரிசைகட்டி
நின்று சிரித்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த ஆண்டு எடுத்த தீர்மானமே இன்னும்
நிறை வேற்றப்படாத நிலையில் புதிதாக
தீர்மானங்கள் எடுக்க வேண்டுமா?
வேண்டாம்டா சாமி என்று
ஒதுங்கிச் போகத்தான் ஆசை.

 
 ஆனால் இந்த உலகம் நம்மைச் சும்மா
 இருக்க விடுகிறதா?
 இந்தப் புத்தாண்டுக்கு என்னென்ன
  தீர்மானங்கள்
 எடுத்திருக்கிறீர்கள் ?
 என்று கேட்டு துளைத்து எடுத்து விடுகிறதே.
ஒருசிலர் இதே வேலையாக 
வைத்துக்கொண்டு 
சுற்றிக்கொண்டு
திரிகின்றனர். அதற்காக மெப்பாக
 ஒன்றிரண்டை சொல்லி வைப்போம்.
 
நான் என்னென்ன தீர்மானங்கள் எடுக்கப்
போகிறேன் என்றால்....
கடந்த வருடம் எடுத்த அதே தீர்மானம்தான்.

மற்றபடி வேறெந்த மாற்றமும்
இல்லை. 


இப்படிச் சொல்லி கடந்து போக
 நினைக்கையில்
இந்த ஆண்டு என்னென்ன தீர்மானங்கள்
எடுக்க வேண்டும் என்ற கட்டுரை 
போட்டுவிட்டீர்களா
என்ற கேள்வி ஒன்று வந்து
என்னை உசுப்பி விட்டுவிட்டது.


கடந்த வருடம்
ஒருநாளைக்கு ஒரு கட்டுரையானது
எழுத வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
ஒரு கட்டுரைதானே...இது என்ன பெரிய
வேலையா? தொடர்ந்திடலாம்
என்று நினைத்தேன்.

நாலு கட்டுரைகள் எழுதினேன்.
 நாலு நாள் நாலுவிதமாக எழுதியாயிற்று.
ஐந்தாவது நாள் என்ன எழுதுவது?
எதைப்பற்றி எழுதுவது என்ற கேள்வி
கண்முன் வந்து சிரிக்க...அட போடா நீயும் 
உன் தீர்மானமும் என்று எழுதி வைத்த
டைரி என்னைப் பார்த்து சிரிக்க...
டைரியை
அலமாரியில் புத்தகங்களுக்கு 
அடியில் மறைத்து வைத்துவிட்டேன்.

இப்போது நான் உங்களுக்காக
என்ன எழுதுவது ?

இந்த ஆண்டு நமக்கான ஆண்டாக
இருக்கட்டும்.நமக்கான
தேடல் மட்டுமே இந்த ஆண்டு
தீர்மானமாக இருக்கட்டும்.

நாம் நாமாக இருந்தால் போதும்.
நம்மை நாம் தெரிந்து கொண்டால்
மட்டுமே நமக்குள் இருக்கும்
நிறை குறைகள் அறியப்படும்
குறைகள் களையப்பட வேண்டும்
என்ற எண்ணம் வரும்.
குறைகள் களையப்பட்டால் இயல்பாகவே
நமது நிறைகள் பளிச்சென்று தெரிய 
ஆரம்பிக்கும்.

என்னிடம் என்ன இருக்கிறது ?
என்ன இல்லை?
என்ன வேண்டும் ?
என்ன வேண்டாம்?
இப்படி ஒரு பட்டியல் தயாரித்து
அந்த இருக்கிறதை எடுத்துக்கொண்டு
வேண்டியதை பெற்றுக் கொள்வதற்கான
தேடலில் ஈடுபடும் ஆண்டாக
இந்த ஆண்டு இருந்திடட்டும்.


நீங்களும் உங்களில் இருந்து இந்த
ஆண்டைத் தொடங்குங்கள்.
ஒரு தேடலில் இந்த ஆண்டு தொடங்கட்டும்.
அது கல்வியாக இருக்கலாம்.
புத்தக வாசிப்பாக இருக்கலாம்.
அறிவுத்தேடலாக இருக்கலாம்.
பொருள் தேடலாக இருக்கலாம்.
 

தேடல் மட்டுமே இந்த ஆண்டு
தீர்மானமாக இருக்கட்டும்.
கிடைத்தால் வெற்றி.
இடையில் விட்டுவிட்டாலும்
மனம் பாதிப்புக்குள்ளாகாது.

தேடல் வளர்ச்சியைக் கொடுக்கும்.

நம்மிடம் இருப்பதில் இருந்து
இந்த ஆண்டு தொடங்கட்டும்.
வளர்ச்சி யாரையும் சாராததாக
நடைபெற வேண்டும்.
அப்போதுதான் இடையில் எந்தத் தடையும்
ஏற்படாது.

தடையில்லா வளர்ச்சியை நோக்கியப் 
பயணம் தொடங்கட்டும்.

இந்த ஆண்டு உங்களின் ஆண்டாக
உங்கள் உயர்வின் ஆண்டாக
உங்கள் வளர்ச்சியின் ஆண்டாக
வளத்தின் ஆண்டாக
நன்மைதரு ஆண்டாக 
உங்கள் தேடலுக்கான பலனைக்
கொடுக்கும் ஆண்டாக அமைய
வாழ்த்துகள்!
 

Comments

Post a Comment

Popular Posts