நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால்....

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால்...

உதவி கேட்டு வந்தாலே ஓடி ஒளிந்து
கொள்ளும் காலம் இது.
அப்படியே ஒருவர்க்கு உதவி
செய்தோம் என்றால் அவர் திரும்ப
நமக்குச் செய்வாரா ?மாட்டாரா?
என்று கணக்குப் போட்டுப் பார்த்த
பின்னர்தான் முன்கை நீளும்.
இது மனித இயல்பு.


காரணம்  எல்லாவற்றையும் கொடுத்துவிட்டால்....
நாளைக்கு நமக்கும்
வேண்டுமே என்ற அச்சமாகக் கூட
இருக்கலாம்.

ஆனால் உதவி என்றாலே எந்தவித
எதிர்பார்ப்பும் இல்லாமல் 
செய்யப்பட வேண்டும்.

சொல்வது எளிது.
 நாம் செய்த உதவிக்கு
என்ன பயன்? என்ற கேள்வி 
எழலாமலில்லை..

பயன் இல்லாமல் போகாது.
என்றாவது ஒருநாள்
நாம் செய்த உதவிக்கான பலன்
நம்மை வந்து சேரும்.

நம்பலாமா?

ஏன் நம்பக்கூடாது?

என்றோ தென்னை மரத்தின் வேருக்கு
நாம் ஊற்றிய நீர்
ஆண்டுகள் பல கடந்தும் நமக்கு
இளநீராக கிடைக்கிறதல்லவா?
இந்த உதவியை நாம் எதிர்பார்த்தோமா?
ஆனாலும் தென்னைமரம் நாம்
செய்த உதவியை மறக்காமல்
இருந்து பலன் தருகிறதல்லவா?
இதுதான் உதவிக்கான பலன்.

இனி யாருக்கும் நான் செய்த உதவிக்கான
பலன்  கிடைக்குமோ ? கிடைக்காதோ ?
என்ற ஐயம் வேண்டாமாம்.

இதோ ஔவை சொல்வதைக் கேளுங்கள்.


"நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டாம் நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருததால்"

                            மூதுரை பாடல் : 1

"ஒருவர்க்கு உதவி செய்யும்போது
உதவியை எதிர்பார்த்து செய்ய
வேண்டாம்.
தாளுண்ட நீரை அதாவது
வேர்ப்பகுதியில் நாம் ஊற்றிய 
 நீரை உறிஞ்சி எடுத்து ,தளராது
வளர்ந்து நிற்கும்
தென்னை மரமானது
ஒருநாள் நாம் ஊற்றிய நீரைவிட
இனிமையான இளநீரைத்
 தந்து நிற்கும்.
அதுபோல என்றோ நீங்கள் செய்த
உதவிக்குப் பெரிதான பலன்
கிடைப்பது உறுதி" என்கிறார் ஔவை.

நல்ல கருத்து இல்லையா?

இப்போது நம்பிக்கை வந்திருக்குமே!

இனி நாம் செய்யும் உதவிக்கு
பலன் கிடைக்குமோ ?கிடைக்காதோ என்ற ஐயம்
ஒருபோதும் ஏற்படாதல்லவா?

நாம் ஒருவர்க்குச் செய்யும்
உதவிக்கான பலன் கண்டிப்பாகக்
கிடைத்தே தீரும்.






Comments

Popular Posts