வல்லான் வகுத்ததே வாய்க்கால்
வல்லான் வகுத்ததே வாய்க்கால்
"வல்லவன் வகுத்ததே வாய்க்கால் "
இந்தப் பழமொழியைக் கேட்கும்போது
வெறுமனே பழமொழிதானே
என்று கேட்டுவிட்டு கடந்து சென்றுவிட
முடியாது.
இந்தப் பழமொழி சிலருக்கு மகிழ்ச்சியைக்
கொடுக்கலாம்.
ஆனால் பலருக்கு இது என்னப்பா
வல்லான் வகுத்ததே வாய்க்கால்
என்று கேட்க வேண்டும் என்று
தோன்றும்.. ஆனால்
கேட்க மாட்டோம்.வாய்க்குள்ளேயே விழுங்கிக்
கொள்வோம். ஏன் இந்த விழுங்கல்
என்றால் அந்த வல்லான்
மேல் உள்ள அச்சம்.
அச்சப்படும் அளவிற்கு
இதில் என்ன இருக்கிறது?
அப்படி பெரிய ஆளா இந்த வல்லான்?
யாரிந்த வல்லான்?
ஏன் இவர்மீது இத்தனை அச்சம்?
வல்லான் வகுத்ததே வாய்க்கால்
என்றால்தான் என்ன ?
என்று அடுக்கடுக்கான கேள்விகளை
நமக்குள் எழுப்பி நம்மைக் குமைய
வைப்பதுதான் இந்தப் பழமொழி.
வல்லான் என்றால் ஆற்றல் மிக்கவன்,வீரன்
இப்படிப் பொருள் கொண்டிருப்போம்.
அது பொருளாக இருக்கலாம்.பதவியாக
இருக்கலாம். வலிமையாக இருக்கலாம்
மிகுந்த ஆற்றலோடு நீர்ப்பெருக்கு
வருகிறது. அங்குமிங்கும் உடைப்பெடுத்து
தனக்கென ஒரு வழியை ஏற்படுத்திவிடும்.
தனக்கான போக்கைத் தானே அமைத்துக்
கொள்ளும். அதற்கு யாராலும் தடையிட்டுவிட
முடியாது. ஆட்சி பலம் ,பண பலம்,
பதவி பலம் இருப்பவர்களால் மட்டுமே
ஒரு பாதையை வகுக்க முடியும்.
பாதையைத் தீர்மானிக்கும்
காரணிகள் இவைதான்.
இவர்கள் போடும் பாதைக்கு
மாற்றுப்பாதை யாராலும்
போட்டுவிட முடியாது.
"வல்லான் வகுத்ததே வாய்க்கால்
வடக்கேயும் பாயும்
தெற்கேயும் பாயும்"
என்று இதைத் தான் சொல்லியிருப்பார்கள்.
பதவி பலம் உடையவர் பலம் எப்படி இருக்குமாம்
தெரியுமா?
"அதிகாரி வீட்டுக் கோழி முட்டை
குடியானவன் வீட்டு அம்மியை உடைக்கும்"
அடேயப்பா....பதவிக்கு எவ்வளவு
பலம் பாருங்கள்.
எப்போதுமே வலிமையின் ஆதிக்கம் அதிகம்.
இயற்கையின் நியதியும்கூட அதுதான்.
"வல்லவன் ஆட்டிய பம்பரம் மரத்திலும் ஆடும்."
"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்."
வல்லவன் தான் எல்லாவற்றுக்கும்
எல்லாமாய் இருக்கிறான் என்ற
ஒரு பிம்பம் நமக்குள் பதிந்து போனது.
மனதிற்கு ஆறுதல் தேட நினைக்கிறோம்.
அப்போது ஏதோ ஒன்றைச் சொல்லி
நம்மைத் தேற்ற முற்பட்டிருக்கிறார்கள்.
எப்படி என்று கேட்கிறீர்களா?
"எளியாரை வலியார் வாட்டினால்
வலியாரைத் தெய்வம் வாட்டும்"
இந்த நம்பிக்கையில்தான்
எளியவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
"திக்கற்றவர்களுக்குத் தெய்வமே
துணை"
என்பதுதானே உண்மை.
"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில்
உண்டு"
என்று ஒரு பழமொழி உண்டு.
இதைத்தான் வள்ளுவரும்,
"வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து"
என்றார் வள்ளுவர்.
தன்னைவிட மெலிந்தாரைத் துன்புறுத்தச்
செல்லும்போது தன்னைவிட வலியவரின் முன்
தான் அஞ்சி நிற்கும் நிலைமை வந்தால்
எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க
வேண்டும்.
அதை நினைத்துப் பார்த்துவிட்டால் எளியவரை
துன்புறுத்தும் எண்ணம் வராது என்பதற்காக
வள்ளுவர் இப்படி சொல்லியிருக்கிறார்.
அது எத்தனைபேர் உள்ளத்தில் தோன்றும்.
இவை எல்லாம் நம் ஆறுதலுக்காகச்
சொல்லப்பட்டவையே தவிர
வேறொன்றுமில்லை.
"வல்லான் வகுத்ததே வாய்க்கால்
வடக்கேயும் பாயும்
தெற்கே முள் பாயும்"
என்பதுதான் உண்மை.
.
Comments
Post a Comment