மாட்டுப் பொங்கல்

மாட்டுப் பொங்கல் 

பொங்கல் என்றாலே கரும்பு
எப்படி முதன்மை இடம் பிடிக்குமோ அது போன்று
பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படும்
மாட்டுச் பொங்கலில் ஜல்லிக்கட்டு 
முதன்மை இடம் பிடித்துவிடும்.
ஜல்லிக் கட்டு இல்லாத மாட்டுச்
பொங்கலா என்று கேட்கும் அளவிற்கு
இன்று ஜல்லிக்கட்டு உலகமெங்கும்
பிரபலமாகிவிட்டது.

ஜல்லிக்கட்டிற்கு என்றே மாடுகள்
பிரத்தியேகமாக பயிற்சி கொடுத்து
தயார்படுத்தப்படுகின்றன.

இந்த இடத்தில் எனக்கு ஒரு
கேள்வி எழுகிறது.

ஜல்லிக்கட்டு விழாவில்
காளைமாடுகள் மட்டும்தான்
கொண்டாடப்பட வேண்டுமா?
மற்ற மாடுகள் என்ன பாவம்
செய்தன?

அவையும் கொண்டாடப்பட 
வேண்டியவைதானே!

மாடு என்றால் செல்வம்.
நம் வீட்டிற்கு செல்வம் கொண்டுவர
மாடாக உழைத்த மாட்டிற்கு நன்றி
சொல்லும் நாள் மாட்டுச் பொங்கல்.
இதில் காளை மாடு ,பசுமாடு
என்ற பாகுபாடு கூடாது.
பசுமாடும் பால்தந்து கிராமத்துப்
பெண்களின் பொருளாதாரத்தை
உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மாட்டுச் பொங்கல் நாளில் எல்லா
மாடுகளும் கொண்டாடப்படட்டும்.

ஒரு நாளில் அப்படித்தான் மாட்டுப்
பொங்கல் நடைபெற்றது.
கிராமத்தில்  பொங்கல்
நாளில் அனைத்து மாடுகளும்
குளிப்பாட்டும் பட்டு
கொம்புகள் வண்ணம் தீட்டப்பட்டு
அலங்கரிக்கப் பட்டிருக்கும்.
கழுத்தில் பூக்கள் கட்டப்பட்டிருக்கும் 

இன்றும் கிராமங்களில் அது 
நடைபெற்று வருகிறது.
ஆனால் ஊடகங்கள் வந்தபிறகு
ஜல்லிக்கட்டு மட்டுமே மாட்டுப்
பொங்கல் என்பதுபோல பிரதானப்
படுத்தப்படுகின்றன.ஏறுதழுவுதல் என்பதும் ஜல்லிக்கட்டும்
ஒன்றுதான்.
ஏறுதழுவுதல் என்று சங்க இலக்கியங்களில்
எழுதிய காலங்களில் பணத்திற்காக
இந்த விளையாட்டு விளையாடப்படவில்லை.
வீரத்தை மெய்ப்பிக்கும் கட்டாயம்
அன்றைய காளையருக்கு இருந்திருக்கிறது.
அதுவும் காளையோடு மல்லுக்கட்டி
மெய்ப்பிக்க வேண்டுமாம்.
அப்படி மெய்ப்பிக்காவிடில் என்ன நிகழும்
என்கிறீர்களா?

ஒன்றும் நிகழாது?

ஒன்றும் நிகழாது என்றால் எதற்கு
இத்தனை அமர்க்களம் போராட்டம்
என்கிறீர்களா?

நான் ஒன்றும் ஆகாது என்றது
திருமணம் ஆகாது என்று சொன்னேன்.

அதற்குப் சாட்சியாக
சங்க இலக்கிய பாடல் ஒன்று இருக்கிறது.

"கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்..."
                -   கலித்தொகை

காளையின் கொம்புக்கு அஞ்சும்
ஆண்மகனை ஆயர்குலப் பெண்கள்
விரும்ப மாட்டார்களாம்.
அதனால் அவர்களுக்குத் திருமணம்
ஆகாமலே போகலாம்.
இதுதான் அன்றைய சூழலாக
இருந்திருக்கிறது.

இப்படி வீரத்தை மெய்பிக்கும்
விளையாட்டாக இருந்தது
மாட்டின் கழுத்தில் கட்டப்பட்ட
சொல்லி அதாவது 
பணமுடிப்புக்காக விளையாடும் போது
ஜல்லிக்கட்டாக மாறிப்போயிருக்கலாம்.


சல்லி என்றால் காசு என்பது
நமக்குத் தெரியும்.
சல்லிக்காசு கையில் இல்லை
என்று சொல்லி இருப்போம்.
இந்த சல்லி பணமுடிப்பாக
மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும்.
அந்தக் காளையை அடக்கி அந்த
வீரன் பணமுடிப்பை எடுத்துக் கொள்கிறான்.

இது ஜல்லிக்கட்டு என்றாகிவிட்டது.

சல்லியை நோக்கித்தானே இந்த ஓட்டம்.

மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும்
வளையம் சல்லி என்று அழைக்கப்பட்டதாகவும்
அந்த வளையத்தில் தான் பணமுடிப்பு
கட்டப்படுவதாகவும் செய்திகள் உண்டு.

இப்போதும் புளியங்கொம்பினால் வளையம்
செய்து கழுத்தில் கட்டிவிடும்
வழக்கம் ஒரு சில கிராமங்களில் உண்டு.

எது எப்படியோ ஏறுதழுவுதல் சல்லிக்கட்டு
எதுவாக இருந்தாலும் வீரம் சார்ந்த
தமிழரின் விளையாட்டு என்பதில்
மாற்றுக்கருத்து இல்லை.
இது நமது பாரம்பரியம்.
தமிழரின் அடையாளம் என்று உலகம்
எங்கும் கொண்டாடப்படுவது
தமிழராகிய நமக்குப் பெருமை.

மாட்டுப் பொங்கல் நாளில் எல்லா
மாடுகளுக்கும் மரியாதை செய்வோம்!
Comments

Popular Posts