பருவத்தால் அன்றிப் பழா

பருவத்தால் அன்றிப் பழா 



நல்ல மழை
பருவம் தப்பக்கூடாது என்று
உழுது விதை விதைத்தாயிற்று.

அதன்பின்னர் ஒரு மாதத்திற்குள்
வயல் எங்கும் பச்சைப்பசேல் என்ற காட்சி.
பார்க்கப் பார்க்க பெருமிதம்.
இன்னும் ஓரிரு மாதங்கள்தான்
கதிர் வந்துவிடும்.
வீட்டு வறுமையும் போய்விடும்.
வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி
இதுவரை வந்தாயிற்று.
ஆனால் வீட்டில் வறுமை.
நாளைய விடியலுக்கு என்ன
செய்வது ?
கேள்வி முன் வந்து நிற்க
வயதுக்கு ஓடுகிறார் உழவர்.
இன்றைக்காவது கதிர் முற்றி
அறுவடைக்குப் தயார் நிலைக்கு
வந்துவிடுமா?
என்ற ஒரு நப்பாசை.
ஆனால் கதிர்கள் இன்னும்
விளையவில்லை.. என்ன செய்வது?
தலையில் கை வைத்தபடி
வரப்பிலேயே இருந்து விடுகிறார்.

விவசாயிக்குத்தான் இந்த நிலை என்றால்....

பறவைகளுக்கும் இதே நிலைதான்.
காடு முழுவதும் மரங்கள் வளர்ந்து
நிற்கின்றன.
ஆனால் ஒரு மரத்திலாவது
பழங்களைக் காணோம்.
பறவைகள் அங்குமிங்கும்
அலைமோதுகின்றன.
இரைக்கால எங்கெங்கெல்லாமோ
பறந்து திரிகின்றன.
எங்கும் பழங்கள் இல்லை.
பூவும் பிஞ்சும் காயும் என்று
உண்பதற்கு தயார்நிலையில்
இல்லை.
பறைவைகள் இரை கிடைக்காமல்
கூடுக்குத் திரும்புகின்றன.
பறவைகளுக்குப் பழங்கள்
வேண்டும் என்பதற்காக
மரங்களில் உள்ள
காய்கள்  உடனே பழுத்து விடுமா என்ன?
அதற்கென்று ஒரு காலம்
உண்டல்லவா?

பூக்க ஒரு காலம் உண்டு.
காய்க்க ஒருகாலம் உண்டு.
அதுபோல பழுக்கவும் காலம் உண்டல்லவா?
கம்பால் அடித்து பழுக்க வைத்துவிட
முடியுமா?

எதற்கும் ஒரு காலம் உண்டு.
அந்தந்த காலத்தில்தான் அது அது
நடக்கும்.நாம் ஆத்திரப்படுவதால் ஒன்றும்
நடந்துவிடப் போவதில்லை.
இதைத்தான் ஔவை,


"அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா -தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா "

              மூதுரை பாடல்  5

என்று கூறுகிறார்.

"எவ்வளவுதான் முயன்றாலும்
காரியம் கைகூடுவதற்கு என்று
ஒரு கால நேரம் உண்டு.
அதற்கு முன்னால் நடைபெற வேண்டும்
என்று  எண்ணாதீர்கள்.
மரம்  உயர்ந்து
வளர்ந்திருந்தாலும் மரம் முழுவதும்
பூக்களும் பிஞ்சும் நிறைந்திருந்தாலும்
பழுக்கும் காலம்
வரும்போதுதான் பழங்கள் பழுக்கும்.
இந்த எதார்த்தநிலையை புரிந்து
கொண்டாலே போதும்.
எந்த செயலும் நடைபெறுவதற்கு எ
உரிய காலம் என்று
ஒன்று உண்டு .
காலம் கனிந்து வரும்வரை
காத்திருக்க
வேண்டும் "என்கிறார் ஔவை.

அது ஏன் இன்னும் நடக்கவில்லை.
இது ஏன் நடக்கவில்லை என்று ஆயிரத்தெட்டு
கேள்விகளை எழுப்பி மனதை நிம்மதி
இழக்கச் செய்ய வேண்டாம்.
காலம் கனிந்து வரும்போது
எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
இந்த எதார்த்தத்தைப்
புரிந்து கொள்ளுங்கள்.

அருமையான நம்பிக்கையூட்டும்
கருத்து இல்லையா?

Comments