தளர்ந்து வளையுமோ.....?
தளர்ந்து வளையுமோ....?
"மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்"
என்றார் வள்ளுவர்.
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால்
கவரிமா உயிர் வாழாதாம்.
அதுபோல சான்றோர் மானம்
இழக்க நேரிட்டால் உயிரை
விட்டு விடுவராம்.
தன்மானத்தோடு வாழ வேண்டும்
என்ற எண்ணத்தோடு
வாழ்பவர்களுக்கு தனது தன்மானத்திற்கு
ஓர் இழுக்கு ஏற்படும் சூழல்
ஏற்படும்போது அவர்களால்
அதனைச் சாதாரணமாக
எடுத்துக்கொண்டு
கடந்து போக முடியாது.
நமக்கு இப்படி ஒரு சூழல் வந்துவிட்டதே
என்று எண்ணி எண்ணி
மனம் வெம்பி போகும்.
ஒரு கட்டத்தில் அதனை
தாங்கிக்கொள்ள முடியாது
மனம் ஒடிந்து
அவமானப்பட்டு அப்படியே
மடிந்து போவர்.
எவ்வளவுதான் ஒரு மனிதனால்
தாங்கிக்கொள்ள முடியும்?
வளைந்து கொடுக்க முடியாதநிலை
வரும்போதுதான் ஒடிந்து போகின்றனர்.
உயிர் விடத் துணிகின்றனர்.
தாங்க முடியாத நிலையில் அது
ஒருவரை இறப்பு வரை
கொண்டு சென்றுவிடுகிறது.
இதே கருத்தைத்தான்
ஔவையும்
"உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல்தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம்
தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்"
மூதுரை. பாடல் : 6
என்று சொல்கிறார்.
ஒரு தூணின் மேல் ஒரு
குறிப்பிட்ட அளவுதான்
பாரத்தை ஏற்ற முடியும்?
அளவுக்கு அதிகமாக
பாரத்தை ஏற்றிவிட்டால்....
வளைந்து போகுமா?
தூண் எப்படி வளையும்?
ஒடிந்து தானே போகும்.
இதுதான் தூணின் இயல்பு.
அதுபோலத்தான் தன்மானம் மிக்கச்
சான்றோர் பண்பும் இருக்கும்.
அதாவது தனது தன்மானத்திற்கு ஓர் இழுக்கு
ஏற்பட்டபோது வளைந்து அனுசரித்துப்
போக அவர் மனம் இடங்கொடுக்காது.
அப்படியே மனம் ஒடிந்து
மடிந்து போவாரே தவிர
பணிந்து போக மாட்டார் என்கிறார்
ஔவையார்.
அருமையான கருத்து இல்லையா?
Comments
Post a Comment