உன்னோடு வாழ்தல் அரிது....
காட்டில் ஒரு வேப்ப மரத்தடியில்
அமர்ந்து புத்தகம் 
படித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது கையில் கம்மோடு ஒரு
பாட்டியும் வந்து அருகில்
வந்து அமர்ந்தார்.

சற்று நேரம் இருவரும் பேசிக்
கொண்டிருந்தோம்.
பாட்டியின் பேச்சில் 
எனக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது.
பாட்டியிடம் பேசி ஏதாவது தெரிந்து
கொள்ள வேண்டும் என்பதற்காக,

"பாட்டி அரியது எது 
என்று சொல்ல முடியுமா ?"
என்று கேட்டேன்.


"அரிது அரிது மானிடராய்ப்
பிறத்தல் அரிது"
என்று சொன்னார்.


இப்போது எனது  மனம்
மானிடப்பிறப்புதான் அரிது என்று
ஒரு கணக்குப் போட்டு வைத்தது.
கணக்கைப் போட்டு முடிக்கும் முன்னரே

"என்ன முடிவுரை  எழுதியாயிற்றா?
இன்னும் முடியல..."
என்று சிரித்தார்.பாட்டி.

"மானிடர் ஆயினும்
கூன் குருடு செவிடு பேடு
நீங்கிப் பிறத்தல் அரிது"
 என்று தொடர்ந்து அரிதான மற்றுமொரு
காட்சியை முன் வைத்தார் பாட்டி.

"உண்மையும் அதுதானே எந்தவித
உடல் பலவீனமும் இல்லாத 
மனிதன் பிறப்பது அரிது
என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்"
 என்றேன்.

சிரித்துக்கொண்டே பாட்டி,
"பேடு நீங்கிச் பிறந்தகாலையும்
கல்வியும் ஞானமும் நயத்தல் அரிது"
என்று அடுத்த வரியை முன் வைத்து
சிந்திக்க வைத்தார்.

ஆனாலும்," இது என்ன பெரிய காரியம்?
கல்வியும் ஞானமும் பெறுவதற்கு
யாருக்குத்தான் விருப்பம்
 இல்லாதிருக்கும் .
 இதைப்போய் அரிது என்கிறீர்கள்"
 என்றேன் சாதாரணமாக.

"ஓ....அப்படியா...? இது உனக்கு 
அரிதாகத் தெரியவில்லையா?
அப்படியாயின் இன்னொன்றையும்
கேள் என்றபடி,
"தானமும் தவமும் தான் செயல்
அரிது "என்றார்.

உண்மை...உண்மை...
இப்போது தாங்கள் சொல்வது உண்மையிலேயே 
அரிதான செயல்தான் என்று ஒப்புக்கொண்டேன்.


அரிதானவற்றை அறிந்துகொண்ட
 ஒரு பெருமிதத்தோடு நடந்தேன்.
எங்கே செல்கிறாய் ?என்ற கேள்வியைத்
கேட்டு என்னைத் திரும்ப வைத்தார்
பாட்டி.

ஏன்....எதற்கு என்று கேள்விகளை
ஒன்றன்பின் ஒன்றாகக் கேட்டேன்.

*இதில் மாற்றுக் கருத்தே இல்லையா?"
 என்றார் .
 
"நீங்களே சொல்லிவிட்ட பிறகு
இதிலென்ன மாற்றுக் கருத்து இருக்கப்
போகிறது?
மாற்றுக் கருத்து உண்டா என்று கேட்டால்..?"

"அப்படிக் கேட்டால் எந்த ஒரு கருத்துக்கும்
எதிர்க்கருத்து இருக்கும். 
ஏன் எதற்கு? என்ற கேள்வி எழும்.
உண்மை இருக்குமா இருக்காதா
 என்ன ஒரு ஐயத்தை எற்படுத்தும்.
உண்மையை அறிய வேண்டும் என்ற தேடல்
இருக்கும் .உனக்கு இல்லையா ?
என்று கேட்டேன் "என்றார் பாட்டி.

"இருக்கிறது என்றால் வேறு ஏதாவது 
சொல்லப் போகிறீர்களா?"
என்றேன்.

"கேட்க விரும்பினால் 
நாளை வா சொல்கிறேன் "என்றார்.

மறுநாளும் அதே இடத்தில் போய்
நின்றேன்.

"வரமாட்டாயோ என்று நினைத்தேன்"
என்றபடி என் தோளைத் தொட்டார்.

"அரிதானவற்றை அறிந்து கொள்ள
எனக்கு எப்போதுமே ஆர்வம்
உண்டு .
சொல்லுங்கள்...கேட்கிறேன்" என்றேன்


"..நாளும் ஒருவரோடு வாழ்தல்
எனக்கு அரிதாக இருக்கிறது"
என்றார் சலிப்போடு.

"அரிதானவற்றை அறியவைத்த 
உங்களுக்கே அரிதாக
இருக்கிறதா?"
யாரந்த மனிதர்?
முடிந்தால் உதவி செய்கிறேன்"
என்றேன்.

"உன்னால் கூடாது "
 என்றபடி ஒரு பாடலைப் 
 பாடினார்.


"ஒருநாள் உணவை ஒழியென்றால்
ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் -
ஒருநாளும்
என்நோவு அறியாய் இடும்பைக்கூர்
என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது"

என்று பாடி முடித்தார்.

இது என்ன உன்னோடு வாழ்தல் அரிது
என்கிறாரே...யாரோடு வாழ்தல் அரிது
என்கிறார் என்று எனக்கு ஒன்றும்
புரியவில்லை.

பாட்டி, யாரோடு வாழ்தல் அரிது என்கிறீர்கள்?
என்றேன்.

வேறு யாரோடு...இந்த வயிற்றோடு தான்
தினம் தினம் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது.
என்று சலித்துக் கொண்டார்.

"ஒருநாள் பசிக்காமல் அமைதியாய் இரு
என்றால் கேட்கமாட்டேங்குது."

"அது எப்படி கேட்கும்?
வயிறு பசிக்கத் தானே செய்யும்."

"அதற்காக நித்தம் நித்தம் சோத்துக்கு
நான் எங்கே போவேன்?
நேற்று சற்று அதிகமாக உணவு
கிடைத்தது.
நாளைக்குக் கிடைக்குமோ ?
கிடைக்காதோ? அதனால்
இரண்டு மூன்று
நாட்களுக்குத் தேவையானதை
நிரப்பிக்கொள்" என்றேன்.
"மாட்டேன்...மாட்டேன்..
இரண்டு மூன்று நாட்களுக்குத் 
தேவையானதை  என்னால் உண்ண முடியாது
என்று மறுத்து விட்டது."

"சரிதானே...ஒரே நேரத்தில் இரண்டுநாள்
உணவையும் எப்படி 
எடுத்துக்கொள்ள முடியும்?
ஜீரணமாகுமா?"

"இப்போது நான் என்னதான்
செய்வது?
நாள் தவறாமல் ஒவ்வொரு
வேளையும் இந்த வயிற்றை
நிரப்புவதே எனக்குப் பெரிய
வேலையாகப் போய்விட்டது.
வயிற்றை நிரப்பவே பலரோடும் போராட
வேண்டியிருக்கிறது.
இந்த வயிற்றோடு வாழ்தல்
என்னால் முடியவில்லை.
அதனால்தான்
வயிறே உன்னோடு வாழ்தல்
அரிது என்கிறேன்"
என்றார்.

அரிதானவற்றை அறிய வைத்த
ஔவை பாட்டியே உன்னோடு வாழ்தல்
அரிது என்கிறார் என்றால்....

இந்த வயிற்றோடு வாழ்தல்
அரிதுதான் என்பதை 
ஒப்புக்கொண்டுதான்
ஆக வேண்டும்.

Comments

Popular Posts