நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்....

நல்லார் ஒருவர்க்குச்  செய்த உபகாரம் 

நேற்று செய்த உதவியை
இன்றே மறந்துவிட்டு
நீ யாரோ?நான் யாரோ ?
என்று கண்டும் காணாமலும்
சென்று கொண்டிருக்கும்
மனிதர்கள் வாழும் உலகம் இது.

என்ன பெரிய உதவி .?
நீ உதவி செய்ததற்கு
நானும்தான் பதிலுக்கு உதவி
செய்துவிட்டேன்
என்று சரிக்குச் சரியாக
உதவிக்குக் கணக்கு வழக்கு
எழுதி கணக்கு முடிப்போர் 
 உண்டு.
 
உதவியின் அளவு
கணக்கு வழக்குகளுக்குள்
அடங்குவதல்ல என்பதைப்
புரிந்தோர் ஒரு சிலரே.

உதவி என்பது யாருக்கும்
செய்தோம்?
எந்த இடத்தில் செய்தோம்?
எப்போது செய்தோம்?
என்பதில்தான் அதன் மதிப்பும்
மரியாதையும் அடங்கியிருக்கிறது.

இதைத்தான் வள்ளுவரும்,
உதவி வரைத்தன்று உதவி உதவி
செய்யப்பட்டார் சால்பின் வரைந்து
 என்பார்.

தரமில்லாதவர்களுக்கு
உதவியைப் பற்றிய மரியாதை 
தெரியாதவர்களுக்கு உதவி செய்வது
நமது மரியாதையை இழந்து 
போவதற்கு ஒப்பானது.
இவை எல்லாம் காலம் கற்பிக்கும்
பாடங்கள்.
இந்த அறிவு எத்தனைபேர் 
எத்தனை இடங்களில்
சொல்லித் தந்தாலும் காலங்கடந்து
பட்டு பட்டு 
அதன் பின்னர் தான் புத்தி வரும்.

கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்
செய்வதுபோல என்று
வைத்துக் கொள்ளுங்கள்.
அது இருக்கட்டும்.

 ஔவை உதவி பற்றி
 என்ன சொல்கிறார் 
 என்பதை இப்போது கேளுங்கள்.


"நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே-அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்"

   மூதுரை பாடல் : 2


நல்லவர் ஒருவர்க்குச் செய்யும் உதவி
கல்லின் மேல் எழுதப்பட்ட எழுத்து
எப்படி அழியாமல் என்றும்
அனைவரும் காணும்படி 
நிலைத்திருக்குமோ 
அப்படியே நிலைத்திருக்கும்.
அதாவது உதவி பெற்றவர்கள் என்றென்றும்
நாம் செய்த உதவியை நினைத்திருப்பர்.
மறக்காதிருப்பர்.

ஆனால் இரக்கமற்ற நெஞ்சத்தார்க்குச்
செய்யும் உதவியானது
நீர் மேல் எழுத்தானது
 கண்ணுக்குக் காணாமலேயே 
மறைந்து போவதுபோல
அந்த நொடியே மறந்து போய்
விடும். அதாவது உதவி பெற்றதும்
நன்றியுள்ளவர்போல இருப்பதாகத்
தோன்றும். எல்லாம் அந்த நேரம் மட்டும்தான்.
அதற்குள் நீர் மேல் எழுத்து போல
காணாமல் போய்விடும்.

நல்லவர்க்குச் செய்யும் உதவி
கல்லின் மேல் எழுத்தும்
இரக்கமற்ற கல் நெஞ்சுக்காரர்களுக்குச்
செய்யும் உதவி நீர்மேல் எழுத்தும்
உவமைகளாகக் கூறப்பட்டுள்ளன.

அருமையான உவமைகள்.
என்றென்றும் நினைவுகூரத்தக்கவை.

ஔவை மொழி என்றால் சும்மாவா?









Comments