போகிப் பண்டிகை


போகிப் பண்டிகை கதை இல்லாமல் பண்டிகைகள் இல்லை.
யோகிக்குக் கதை இருக்கும்போது
போகிக்குக் கதை இல்லாமல்
இருக்குமா என்ன?

போகிக்கும் கதை ஒன்று இருக்கிறது.

ஒரு கடினமான சூழல் அல்லது
உழைப்புக்குப் பிறகு
கிடைக்கும் நன்மையைக் கொண்டாடி
மகிழ்வது தான் பண்டிகைகள்.

அந்தவகையில் போகியும் கடினமான
காலத்தைக் கடந்து வந்து விட்டோம்
என்ற மகிழ்ச்சியை அனைவருக்கும்
தெரிவிக்கும் முகமாகவே கொண்டாடப்படும்
ஒரு பண்டிகையாகும்.

பழையவை ஒழிந்தன.
தொல்லைகள் தொலைந்தன.
ஆணவம் ஒழிந்தது. ஒழிக்கப்பட்டது.
இனி நாளும் மகிழ்ச்சி.
களிப்பு.

புதியவை புகுந்தன.
புத்தொளி பிறந்தது
என்ற ஒரு புதுமையான எண்ணத்தோடு
போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

புதிய வாழ்க்கையை எதிர்பார்த்து
பழைய குப்பைகளை எல்லாம் முற்றிலுமாக
அகற்றி தூய்மையோடு வருங்காலத்தை
எதிர் நோக்கி கொண்டாடப்படும்
பண்டிகை போகிப் பண்டிகை.
கதை கதை என்றீர்களே...
அந்தக் கதை என்ன என்று சொல்லுங்கள்
என்று கேட்பது என் 
காதுவரை கேட்கிறது.

போகிப் பண்டிகை பற்றிய
ஓர் அருமையான
புராணக் கதை ஒன்று உள்ளது.

நீரின்றமையாது உலகம்.
நீராதாரம் மழை.
மழைக்குக் கடவுள் இந்திரன்.


மழை இன்றேல்
உழவில்லை. 
உழவின்றேல் உணவில்லை.
உணவின்றேல் உயிர்களில்லை.
உயிர்களின்றேல் உலகமில்லை.
உலகமே வெறுமையாகிவிடும்.
இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அனைவருக்கும் தெரிந்த உண்மை 
இந்திரனுக்குத் தெரியாதிருக்குமா?
எப்போதுமே இந்திரன் மனதில்
ஒரு கர்வம் உண்டு.

என்னால்தான் மாதம் மும்மாரி பொழிகிறது.
நாட்டில் நல்ல விளைச்சல் ஏற்படுகிறது.
உயிர்கள் உயிர் வாழ்கின்றன.
எல்லா அறம் செயல்களும் நடைபெறுவதற்கு
நான்தான் காரணமாக இருக்கிறேன்
என்ற பெருமிதம் உண்டு.
பெருமிதத்தோடு நின்றுபோனால் பரவாயில்லை.
அது ஒரு கட்டத்தில்
ஆணவமாக மாறிப்போனது.


என்னால்தான்
நாட்டு மக்கள் எல்லாம் நலமாக 
வளமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அப்படியானால் எனக்கு மட்டுமே
அவர்கள் விழா எடுத்துக் கொண்டாட
வேண்டும். வேறு யாருக்கும்
விழா எடுத்துக் கொண்டாடக் கூடாது
என்று நினைத்தான் இந்திரன்.

இந்திரனின் இந்த ஆணவம்
 கண்ணபிரானுக்குத்
தெரிய வந்தது. இந்திரனின் ஆணவத்தை
அடக்க நினைத்தார் கண்ணன்.

அதனால் கோகுலத்தில் வாழ்ந்து வந்த
கண்ணபிரான் கோவர்த்தன மலைக்கு
வழிபாடு செய்யும்படி கோகுல மக்களிடம்
கேட்டுக் கொண்டார்.
கண்ணன் கோகுலத்துப் பிள்ளையாயிற்றே.
அதனால் கண்ணன் பேச்சுக்கு மறுபேச்சேது?

உடனே மக்கள் அனைவரும்
கோவர்த்தன மலைக்கு விழா 
எடுத்து கொண்டாடிக் கொண்டாட
ஆரம்பித்தனர்.

இந்தச் செய்தி இந்திரன்
காதுகளுக்கு எட்டியது.

இந்திரனுக்கு மக்கள்மீது
கோபம் என்றால் கோபம் 
பெருங்கோபம் ஏற்பட்டுவிட்டது.

அதெப்படி ?நான் மழையை அனுப்பினேன்.
நீங்கள் விளைச்சலைப் பெற்றீர்கள்.
நல்ல விளைசாசலால்தானே
ஒரு மகிழ்வான வாழ்க்கை உங்களுக்கு
அமைந்தது.
உங்கள் மகிழ்ச்சிக்குக் காரணம் யார்?
நான்தானே!

என்னை விட்டுவிட்டு அதாவது
என்னை மறந்துவிட்டு
கண்ணன் சொன்னான் என்பதற்காக
கோவர்த்தன மலையை வழிபடுகிறீர்.?

அவ்வளவு திமிரா உங்களுக்கு?
ஏதாவது செய்ய வேண்டும்.
என்ன செய்யலாம்?....என்ன செய்யலாம்?

இது தவறாக இருக்கிறதே?
இவர்களுக்குச் சரியான பாடம் 
புகட்ட வேண்டும் .

என்ன செய்யலாம்.?
வேண்டாம் வேண்டாம்
என்று சொல்லுமளவிற்கு விடாமழையைக்
கொடுத்து இவர்களை 
துன்பத்திற்குள்ளாகினால்....
ஐயோ...சாமி ....எங்களைக்
காப்பாற்றுங்கள் என்று
என் காலடியில் வந்து விழுவார்கள்.
இதுதான் நான் இவர்களுக்கு 
கொடுக்கப்போகும் சரியான தண்டனை
என்று நினைத்தான் இந்திரன்.

"ஏழுநாட்கள் விடாமல் மழை 
பெய்யட்டும்" என்று கட்டளையிட்டான்
இந்திரன்.

அடைமழை ஏழு நாட்கள் பெய்தால்
என்னாவது?

குளம் குட்டை எல்லாம் உடைப்பெடுத்து
ஓடின.
ஊரெங்கும் தண்ணீர்.
வீடுகளுக்குள் எல்லாம் தண்ணீர்.
மக்கள் அங்குமிங்கும் ஓடினர்.
 என்ன செய்வதென்று அறியாது
திகைத்தனர்.

யாரிடம் போய் முறையிடுவது.?
கண்ணனைத் தவிர உதவ யார்
இருக்கிறார்கள்?
கண்ணனிடம் ஓடினர்.

"கண்ணா!
நீ சொன்னதால் தானே நாங்கள்
கோவர்த்தன மலையை வழிபட்டோம்.
இப்போது பாருங்கள்....
இந்த இந்திரன் மழையாய்ப்
பொழிய வைத்துவிட்டாரே...
எங்கள் உடைமைகள் எல்லாம்
போய்விட்டதே... மழைக்குத்
தங்குவதற்கும் கூட இடம் இல்லையே!
இப்போது நாங்கள் என்ன செய்வது? 
நீதான் இந்தச் சிக்கலிலிருந்து
எங்களைக் காப்பாற்ற வேண்டும்" என்று
கதறி அழுது முறையிட்டனர்.

கண்ணபிரான் பார்த்தார்.
தாமதிப்பதற்கு இது நேரமல்ல.
இத்தனை பேரையும் மழையிலிருந்து
உடனடியாக காப்பாற்ற வேண்டும்.
இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது.

கோவர்த்தன மலையைக் 
குடையாகப் பிடிப்பதைத்
தவிர வேறு வழியில்லை.

கோவர்த்தன மலையை 
தனது ஒற்றைவிரலில் அப்படியே
குடையாகத் தூக்கிப் பிடித்து
ஒட்டுமொத்த மக்களையும் 
மழையிலிருந்து காப்பாற்றினார் கண்ணபிரான்.

இதை அறிந்த இந்திரன்
அப்படியே ஆச்சரியப்பட்டுப் போனான்.
என்னவொரு வல்லமை!
ஒற்றை விரலில் கோவர்த்தனமலையை
குடையாக தூக்கும் அளவுக்குத்
அசாத்திய வல்லமை!

என்னால் இது கூடுமா?

அப்படியே அசந்து நின்றுவிட்டான்.

பின்னர் நேரே கண்ணனிடம் வந்தான்.

கண்ணா!

நீராதாரமே என் கையில்தான்
இருக்கிறது.
என்னால்தான் இவ்வுலகம் வாழ்ந்து
கொண்டிருக்கிறது. நான் இல்லை என்றால்
இவ்வுலகில் ஒரு ஜீவராசிகள் கூட
வாழ்ந்துவிட முடியாது.அதனால்
என்னை விடப் பெரியவன் இவ்வுலகில்
எவனும் இல்லை என்று இதுவரை
 ஆணவத்தோடு இருந்தேன்.
 அந்த இருமாப்பும் ஆணவமும் தான்
 என்னை இந்தச் செயலைச்
 செய்ய வைத்துவிட்டது.
 
ஆனால் மலையைக் குடையாகப்
பிடித்து ஒரு நொடியில் என்
ஆணவத்தை தவிடுபொடியாக
நொறுக்கிவிட்டாய்.
என்னை மன்னித்துவிடு.
நீதான் என்னைவிடப் பெரியவன்
என் ஆணவம் இன்றோடு அழிந்தது
என்று கண்ணனிடம் 
சரணடைந்துவிட்டான் இந்திரன்.

இந்திரனின் ஆணவம் தொலைந்தது.
உண்மைதான்.

ஆனால் என்ன இருந்தாலும் மழைக் கடவுள்
இந்திரன் அல்லவா?

அவரைக் கொண்டாடாமல்
 அப்படியே விட்டுவிடலாமா?
 அப்படியொரு எண்ணம் கண்ணன்
 மனதில் உதயமானது.
 அவருக்கும் ஒரு விழா எடுப்பதுதான்
 சிறப்பாக இருக்கும்.
 
 அதனால் இந்திரன் கர்வம் தொலைந்த
 இந்த நாளில் அதே இந்திரனுக்கு
 இந்திரவிழா எடுத்துக்
 கொண்டாடும்படி கண்ணபிரான்
மக்களைக் கேட்டுக் கொண்டாராம்.
 
அதன்படி, இந்திரனின் ஆணவம் தொலைந்த
 அந்தநாளில் இந்திர விழா எடுத்து
 இந்திரனையும் மகிழ்ச்சிபடுத்துவது அதன் பிறகு 
 வழக்கமாக நடைபெற்று வருகிறதாம்.
 
 
இப்படித்தான் போகிப்
 பண்டிகையாக இன்றுவரை
 கொண்டாடப்பட்டு வருகிறது
 என்பது புராண வரலாறு கூறும்
 செய்தி.
 
நல்ல கதையாக இருக்கிறதில்லையா?

 போகி என்றால் மகிழ்ச்சி.
மகிழ்ச்சியைக் கொண்டாடும்போது
மனமும் இடமும் தூய்மையாக 
இருக்க வேண்டியது
அவசியமல்லவா?

அதனால்தான் போகிப் பண்டிகை நாளில்
பழைய பொருட்களை எல்லாம் எரித்து
இருந்த இடத்தைத் தூய்மைப்படுத்து
கின்றனர்.பயன்படாத பழைய
பொருட்களை எல்லாம் எரிக்கின்றனர்.
இருக்கும் இடத்தைத் தூய்மைப்படுத்துகின்றனர்.

 இடமும் இதயமும் தூய்மையாக
 இருந்தால் எண்ணமும் தூய்மையாக இருக்கும்.
 எண்ணம் தூய்மையாக இருந்தால்
 யாருக்கும் இடையூறு செய்ய வேண்டும் என்ற
 எண்ணம் வராது.
 இடையூறு இல்லாத சூழல்
 இன்பமானது.
மகிழ்ச்சியானது.

விழாக்கள் என்றாலே மகிழ்ச்சிதானே!
அந்த மகிழ்ச்சியோடு
தூய்மையான உள்ளத்தோடு
போகிப் பண்டிகையைக் கொண்டாடுவோம்.


அனைவருக்கும் 
போகிப் பண்டிகை நல்வாழ்த்துகள்.
Comments

Popular Posts