பசி நடக்காது

பசி நடக்காது 


தமிழ்ப் புலவர்கள் என்றதும் கண்முன்

வந்து போகும் பெயர்களில் முதன்மை இடத்தில் இருப்பவர்கள் கம்பரும்

வள்ளுவரும் தான்.


இவர்களால் தமிழுக்கும் பெருமை.

தமிழர்களுக்கும் பெருமை.

ஏன் தமிழ் நாட்டிற்கே பெருமை.


அதனால்தான் பாரதியார் தனது பாடலில்


"கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல

பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்

பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு 

.....    ..... .....


வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை

அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி

யாரம் படைத்த தமிழ்நாடு"


என்று பாடி கம்பரையும் வள்ளுவரையும்

முதன்மைப்படுத்தியுள்ளார்.


 கம்பர் என்றதும் நம் கண் முன்னர் வந்து

போவது கம்பராமாயணம் என்பது யாராலும் 

மறுக்க முடியாத உண்மை.

ஆனால் கம்பர் ,கம்பராமாயணத்தோடு

தன் படைப்பை நிறுத்தி விடவில்லை.

இன்னும் பல நூல்களையும் படைத்துள்ளதாக அறிய முடிகிறது .


சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி, ஏர் எழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், மும்மணிக்கோவை என்னும் நூல்களும் கம்பர் இயற்றிய நூல்களாகவே   அறியப்படுகின்றன. 

இவை தவிரவும் கம்பர் எழுதியதாகப் பல தனிப்பாடல்களும் கிடைத்துள்ளன.


கம்பர் உழவுத் தொழிலில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதற்கு ஏர் எழுபது என்ற

அவரது நூலே சாட்சி.

 உழவுத் தொழிலின்

நுட்பங்களை அறிந்தவர் என்பது

அவரது ஏர் எழுபது என்ற நூலிலுள்ள 

பாடல்களைப் படிக்கும்போது நம்மால்  அறிந்து கொள்ள முடிகிறது.


 ஏர் எழுபது என்னும் நூலில் மொத்தம் எழுபத்தொன்பது  பாடல்கள் உள்ளன. எழுத்தொன்பது பாடல்களை

எழுதிவிட்டு ஏர் எழுபது என்று பெயர்

 வைக்கக் காரணம் என்ன என்ற கேள்வி

எழலாம்.


 ஏர் எழுபது என்ற நூலில் உள்ள பாடல்களில் முதலில் உள்ள ஒன்பது பாடல்களும் இறைவாழ்த்து, நாட்டுவாழ்த்து 

பாடல்களாக இருக்கிறது. 


மீதம் உள்ள எழுபது பாடல்களே இந்த நூலின் பாடுபொருள் சார்ந்த பாடல்கள். எனவே ஏரைப் 

பற்றிய செய்திகள் 

எழுபது பாடல்களில் மட்டுமே உள்ளதால் இந்த நூலின் தலைப்பில் எழுபது என்னும் எண்ணிக்கையைச் சேர்த்து ஏர் எழுபது எனப் பெயரிட்டுள்ளார்

என்பதை அறிய முடிகிறது.


உழவினைத் தொடங்குவதற்கு நாள் குறித்தல், உழவுத் தொழில் மேன்மை, கலப்பையின் சிறப்பு, கலப்பையின் ஒரு பகுதியான மேழி என்னும் கைப்பிடியின் சிறப்பு, கலப்பைப் பகுதியையும் ஏரின் பகுதியையும் இணைக்கும் ஆணியின் சிறப்பு முதலாக ஏரின் எல்லாப் பகுதிகளின் பெயர்களையும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். காளையின் கழுத்தில் பூட்டப்பட்டிருக்கும் நுகம், நுகத்தின் துளை, நுகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஆணி, காளையையும் நுகத்தையும் இணைக்கும் பூட்டாங்கயிறு முதலாக உழவுத் தொழிலில் பயன்படுத்தப்படும் எல்லாப் பொருள்களையும் குறிப்பிட்டுப் பாடப்பட்டுள்ள அருமையான நூல் இது.


போர்த்தொழிலுக்கு அடிப்படையானது ஏர்த்தொழில் தான் என்பதையும் செங்கோலை விடவும் ஏர் நடத்துவதற்குப் பயன்படும் சிறிய கோலே சிறந்த கோல் என்பார் கம்பர்.

 அதில் சிறப்பான ஒரு பாடல்

இதோ உங்களுக்காக....


கார்மேகம் விண்ணில் நடந்தால்

 நல்ல மழை பொழியும். 

நல்ல மழை பொழிந்தால் 

ஆறுகளில் தண்ணீர் நடக்கும். 

நீர் நிலைகளில்  நீர் நிறைந்திருக்கும். நீர்நிலைகளில் நீர் நிறைந்திருந்தால்

கால்வாய் வழியாகத் தண்ணீர் 

தாராளமாய் நடக்கும். 

கால்வாய்களில் தண்ணீர்  

தாராளமாய் நடந்தால் 

அது வயல்களுக்குள்ளும்

 நடக்கும்.


 வயல்களுக்குள் நீர் நடந்தால்

நல்ல விளைச்சல்  நடக்கும். 

இப்படி எல்லாமே நல்லபடியாக நடக்கும். இவை எல்லாம் எப்போது தெரியுமா?


 வேளாண் பெருமக்கள் வேளாண்மைத் தொழிலை நல்லபடியாக மேற்கொள்ள விரும்பி, தங்கள் கலப்பையை எடுத்துக்கொண்டு போய் உழவு செய்தால் ஏரோட்டம் நன்றாக நடக்கும்

ஏரோட்டம் நன்றாக நடந்தால்

 நாட்டில் உள்ள எல்லாத் தொழில்களும் நல்லபடி நடக்கும்; இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்க் கலைகளும் போற்றிப் பாதுகாக்கப்பட்டுச் சிறந்த முறையில் நடக்கும்; மேலோர், கீழோர் என்னும் வேறுபாடு எதுவும் இல்லாமல் எல்லோருக்கும் சீரான வாழ்க்கை முறை அமைந்து சமத்துவம் பரவி நடக்கும்; உணவில்லாக் கொடுமை இல்லாத காரணத்தினால் மக்களின் எல்லா விதமான திறமைகளும் வெளிப்பட்டுப் போற்றத்தக்க வகையில் நடக்கும்; உயர்வாக மதிக்கத்தக்க சிறந்த அறங்கள் எல்லாம் இடைவிடாமல் நடக்கும். இப்படி எல்லாம் சிறந்த முறையில் நடைபெறுகிற காரணத்தால் நாட்டில் ஆட்சி நல்லபடியாக நடக்கும்.


 எல்லாமும் நடைபெறும் இந்த நாட்டில் ஒன்றே ஒன்றுதான் நடக்காது. அது எது தெரியுமா? பசி என்ற கொடுமைதான் எங்குமே நடக்காது என்று பாடியுள்ளார் கம்பர்.


"கார் நடக்கும், படி நடக்கும், 

காராளர் தம்முடைய ஏர் நடக்குமெனில் இயல் இசை நாடகம் நடக்கும்,

சீர் நடக்கும், திறல் நடக்கும், 

திருவறத்தின் செயல் நடக்கும்

பார் நடக்கும் எங்கும் பசி நடக்காது! "


 (19)


.

காரோடு நீரை நடக்க வைத்து

தேரோடு திருவிழா சீரோடு நடக்கும் 

என்று சொல்லி

அறனோடு செயல் நடக்கும்

அதனால் நல்லாட்சி நடக்கும்.

ஆனால் ஒன்று மட்டும் 

இங்கு நடக்காது .அது யாதெனில் பசி நடக்காது என்று

முத்தாய்ப்பாக முடித்து வைத்தார்.


கம்பரின் சொல் விளையாட்டு எப்படி எல்லாம் இங்கே 

 விளையாடியிருக்கிறது

பாருங்கள்.


 நடக்கும் என்னும் சொல்லைப் பயன்படுத்தி எட்டு வகையான செயல்கள் நடப்பதை நம் கண் முன்னர் கொண்டு வந்து நிறுத்தி, நேர்மறையாகப் பாடலைக் கொண்டு சென்ற கம்பர் ,ஒரே ஒரு நடக்காது என்னும் எதிர்மறைச் சொல்லை எதிர்பாராது புகுத்தி

எதிர்பாராத பக்கம் நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

அதன்மூலம் தனது மொழி நடையைப் பிறர் எவரும் எட்டாத உயரத்திற்கு  கொண்டு சென்றிருக்கிறார்.


"பார் நடக்கும் எங்கும் 

பசி நடக்காது"



Comments