கார வீடு

கார வீடு 


காலையிலிருந்தே அன்னக்கிளி ஒரு

படபடப்போடு இருந்தார்.நடப்பதெல்லாம்

கனவா இல்லை நனவா....எதையுமே

நம்பமுடியவில்லை.


எத்தனை ஆண்டு கனவு.

கார வீடு கட்டிக் காலமெல்லாம் வாழ வேண்டும் என்ற கனவு கண்கள் கசக்கியதும் காணாமல் போனது போல இருந்தது.

இதுதான் நமக்கு நிரந்தரம்.

கண்கள் கூரையைப் பார்த்தன.

அந்தநாள் நினைவுகள் நெஞ்சை அழுத்த.....


சிறுகச்சிறுக சேர்த்து வைத்தப்

பணத்தில் கட்டிய வீடு. ஒவ்வொரு

செங்கலுக்கும் ஒருநாள் உழைப்பு

கொடுக்க வேண்டியிருந்தது.


இருபத்தைந்து ஆண்டுகாலம்

குடிசை வாழ்க்கை.

வெயில் காலங்களில் ஓட்டைவழியாக

சூரியவெளிச்சம் அத்துமீறி அடாவடித்தனம்

பண்ணும்.


மழைக்காலங்களில் எங்கு எல்லாம்

ஓட்டைத் தெரிகிறதோ அந்த இடங்களைத்

தேடிப் பிடித்து தாராளமாய் தண்ணீர்

ஊற்றுவதும் சொட்டுச் சொட்டாக

சொட்டிச் சேட்டை செய்துவதுமாய்

மழை விளையாட்டுக் காட்டும்.


இது பலநாள் நிகழ்வானதால் 

இதை எல்லாம்

அன்னக்கிளி பெரிதாக எடுத்துக்

கொள்வதில்லை.

ஒருநாள் பாடென்றால் பெரிதாகத் தெரியும்.

நித்தம் நித்தம் இதே பாடுதான் வாழ்க்கை

என்று ஆகிவிட்டதால் எல்லாமே பழகி

விட்டது.


வெயில் அடித்தாலும்  தாங்கிக் கொள்ளும்.

குளிரும் மழையும் வந்து கும்மாளம் போட்டாலும்

தாங்கிக் கொள்ளும். அப்படி ஒரு உடல்வாகு

அன்னக்கிளிக்கு அமைந்துபோனது காலம்

செய்த கோலம் என்பதா இயற்கை கொடுத்த வரம் என்பதா?

எது எப்படியோ எதையும் தாங்கும் இதயம் இதையும்தாங்கும் என்ற நினைப்பில் அப்பபாபோ பேரிடர்வந்து பெரும் புயலாய்த் தாக்கி விட்டுச் செல்லும்.   



மழைக்காலங்களில் 

ஓட்டைகளிலிருந்து ஒழுகும் தண்ணீரைப்

பிடிக்க அன்னக்கிளி வீட்டில்

தனி பாத்திரம் என்று எதுவும் கிடையாது.

கையில் எந்த பாத்திரம் கிடைத்தாலும்

ஓட்டைக்குக் கீழே வைத்துவிடுவார்.

சில சமயங்களில் சாப்பிடும் தட்டையும்

வைத்துவிடுவிட்டு அவர்பாட்டுக்கு

வேறு வேலைகளைப் பார்த்துக்

கொண்டிருப்பார். 

மழைக்காலம் வந்துவிட்டாலே 

சொட்டு சொட்டாய் மழைநீர்

வீட்டுக்குள் உள்ள பாத்திரத்தில் விழுந்து

ஓர் இனிமையான  இசையை 

 மீட்டிக்கொண்டிருக்கும்.



வெளியில் ஓவென்று ஒப்பாரி ரோடு

மழையடிக்க வீட்டிற்குள் டிக்...டிக்கென்று

சிற்றொலி வந்து சிலிர்க்க

வைக்கும்.

கட்டிலில் படுத்தபடியே எத்தனைநாள்

இந்த இசையை ரசித்திருப்பார்.


நாலாப்பக்கமும்

சிதறி ஈரமாக கிடக்கும்.

அதை எல்லாம் அன்னக்கிளி ஒரு

ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை.

அடுப்புக்கு மேலும் கட்டிலுக்கு நேராகவும்

ஒழுகாமல் இருந்தால் போதும்.

அப்படியே ஒழுகினாலும் எங்கேயாவது

போய் இரண்டு தென்னம் ஓலை எடுத்து

வந்து ஓலை முடைந்து ஒழுக்குக்கு

நேராகச் செருகி ஒழுக்கை நிப்பாட்டப்

பிரயாசப்படுவார்.


ஆனால் ஒழுகாத வீட்டிற்குள்

ஒரு நாளாவது வாழ்ந்து உயிர்விட

வேண்டும் என்ற ஆசை உண்டு.


 அந்தக் கொடுப்பினை 

தனக்கு இல்லையே.

வருகிற வருமானம் வயித்துப்பாட்டுக்குத் தான் ஓடுது.


ஆனால் மனசுக்குள் நாமும் ஒரு காரவீடு கட்டி

அதில் வாழ வேண்டும் என்ற 

ஆசை மனதிற்குள் இருந்து

கொண்டுதான் இருந்தது.


கூப்பிட்ட ஆளுக்கு தோட்டவேலைக்குப்

போவார் அன்னக்கிளி.

சித்தாள் வேலைக்குப் போவார்.

ஓய்வாய் இருந்தால் யாரும் பாத்திரம் கழுவ கூப்பிடாலும் ஒட்டிப் போய் வேலை செய்து கொடுப்பார்.

எந்த வேலையையும் விட்டு வைப்பதில்லை.

நாலுகாசு சம்பாதிச்சு 

ஒரு வீடு கட்டணும் என்பது 

ஒரு கனவாகவே

இருந்து கொண்டிருந்தது.

கனவு வீடு எங்கோ கண்களில் தெரிய கால்கள் ஓயாது ஓடிக்கொண்டிருந்தது.


இடையில் இரண்டு மகனுகளுக்கும் படிப்புச்

செலவு என்று வந்து நிற்க 

வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையில் முட்டுக்கட்டை 

முன்னால் வந்து நிற்கும்.


இருந்தாலும் வீடு கட்டணும்

என்ற ஆசை மட்டும் நின்றபாடில்லை.

செம்புலிங்கம் மாமா "எதுக்கு

இப்படி ஓடி ஓடி வேலை செய்யுறா.

அவனுவ படிச்சி ஒரு வேலைக்குப்

போனதும் வீடு

கட்டுவானுவ...நீ சும்மா இரு"

என்று சொல்லிப் பார்த்தார்.


"ஒரு கார வீடு கட்டணும்."

 சொல்லிக் கொண்டே இருப்பார்.


கையாளு வேலைக்குப்

போனார்..அப்போதுதான்

வீடு கட்டணும் என்ற ஆசை

மேலும் அதிகமாகியது.


நம்மளும் இப்படி நல்லா கட்டுன வீட்டுல

 இருக்க மாட்டோமா? என ஒரே ஏக்கமா

 இருக்கும்.

 மேஸ்திரியிடம் "எண்ணே சிம்பிளா

 ஒரு வீடு கட்டணும்ன்னா 

 எவ்வளவு பணம் முடக்கணும்?"

  என்று கேட்டுப் பார்த்தார்.

 

" கையில் பணம் வச்சுருக்கியா? ஒரு

 பத்து லட்சத்தைக் கிளப்பு.

 உடனே ஜாம்...ஜாம்ன்னு

 கட்டித் தந்துடலாம் "என்று கிண்டலடித்தார்

 மேஸ்திரி. 

 

" அவ்வளவு ஆவுமா?"

 

" அவ்வளவு ஆவுமாவா ? 

 அதுக்கு மேலேயும் ஆவும்."

 

" அதுக்கு நான் எங்க போவ...

 நான் சிம்பிளா இந்த ஓலையைப்

 பிரிச்சுப் போட்டுட்டு ஒரு காரவூடு

  கட்டலாம்ன்னு நினைச்சேன்."

  

"  உனக்குத்தான் ஒண்ணுக்கு இரண்டு

  பிள்ளைகள் இருக்கே.....

  என்ன படிப்பு படிக்கிறானுவ என்று

  சொன்னே...?"


"மூத்தவன் சிஏ படிச்சு முடிச்சுட்டான்.

இளையவன் வாத்தியார் வேலைக்குப்

படிச்சுகிட்டு இருக்கான்."


 " நல்ல படிப்பு படிச்சிருக்கானுங்க

 இல்லியா? அப்புறம் உனக்கு என்ன

 கவலை....அவனுங்க ஒரு வேலை 

 பார்த்த பிறகு நல்ல வீடா கட்டுவானுங்க.

 அவனுவ வீடு கட்டுவதைப் 

 பாத்துகிடுவானுவ...

  நீ சும்மா கம்முனு கிட ...

  கடனவுடன வாங்கிகிட்டு

  கண்ணகண்ண தள்ளிகிட்டு

  நிற்காத சொல்லிபுட்டேன்"

  என்று உரிமையோடு பேசினார்

  மேஸ்திரி.


"ஒரு கலியாணம் காச்சி வந்தா

எங்க கொண்டு வைப்பேன்?"

 குடிசை வீட்டுல இருந்தா

 யாரு பொண்ணு கொடுப்பாவ...

 என்று கேட்கிறான் என் மவன்."

 என்று தனது ஆசையோடு தன் பிள்ளைகள்

 ஆசையும் நல்ல வீட்டில் வாழ வேண்டும்

 என்பது தான் என்பதை சொல்லி

 வைத்தாள்.

 

"  ஓ..நீ அப்புடி வாரீயா...

  அப்போ கட்டு .நல்ல வீடா கட்டு.

ஆனா ஒண்ணு .கட்டும்போதே

இரண்டு பேருக்கும் தனித்தனியா

வீடு கட்டு...

பின்னால இரண்டு பேருக்கும் 

பிரச்சினை வரும்.

எங்க அம்மா அப்பா தனித்தனியா

வீடு கட்டி வைக்காததினால்

 பொழுது விடிஞ்ச நேரத்தில் இருந்து

 அடையும்வரை

 எனக்கும் என் தம்பிக்கும் வீட்டுச் 

 சண்டைதான்.

ஒத்த வீட்டை மறைச்சி இரண்டாக்கி

குடி இருக்கோம்.

என் மனைவிக்கும் என் தம்பி

 சம்சாரத்துக்கும்

ஒத்துப் போகல...

விடிஞ்சா அடைஞ்சா அவளுக

பஞ்சாயத்தைத் தீர்க்க முடியல...."

என்று தன் வீட்டு பஞ்சாயத்து இப்படி

இருக்கு. பாத்து பக்குவமா நடந்துக்கோ என்று

சொல்லாமல் சொன்னார் மேஸ்திரி.


"கோவணம் கட்டுவதற்கே

துணியைக் காணோம். இதில்

இழுத்துப் போர்த்த துணிக்கு

எங்க போவது?"


"தெரியுது இல்ல...கவனமா

நடந்துக்க...இந்த காலத்துப்

புள்ளைகளை நம்ப முடியாது.

ஒருத்தி கையைப் பிடிச்ச உடனே

நீ யாரோன்னு கண்டுகிடாம

போயிட்டே இருப்பானுவ..."


"என் பிள்ளைகள் எல்லாம் அப்படி

கிடையாது. ஐஞ்சு நிமிசம் என்னை

காணலன்னா தவியா தவிச்சுப்

போயிடுவானுவ..."


"இப்போ அப்படித்தான் இருப்பாவ அப்பு...

இப்படி இருக்கிறவனுவளதான்

நம்ப முடியாது."


அன்னக்கிளிக்கு  சுருக்கென்று ஏதோ

தைப்பதுபோல் இருந்தது. அப்படியே

முகம் வாடிப் போனது.


"ஏன்...நான் ஏதும் தப்பா

சொல்லிட்டேன் என்று நினைக்கிறியா?"


"சே...சே...அப்படி எல்லாம் 

நினைக்கல...."


"அப்புறம் ஏன் முகம் எல்லாம்

வாடிப்போய் நிற்குற....நான் 

ஒண்ணும் உன் புள்ளைகளைக்

குத்தம் சொல்லம்மா....உலகம்

போகுற போக்கு அப்படி இருக்குன்னு

சொன்னேன். "


"அங்க நின்னுகிட்டு என்ன

பேச்சு..."குரல் கொடுத்தார் வீட்டுக்காரர்.


அத்தோடு பேச்சு முடிந்தது.

யார் என்ன சொன்னாலும் வீடு

கட்டணும் என்ற நினைப்பு மட்டும்

அன்னக்கிளியைவிட்டுப் போகவே இல்லை.


முன்னை மாதிரி ஒற்றை வீடு

கட்ட வேண்டும் என்ற நினைப்பு

போய் இப்போது இரண்டு பேருக்கும் 

தனித்தனியா

வீடு கட்டிக்கொடுத்துடணும் 

என்ற நினைப்பு புதிதாக மனதிற்குள் வந்து

குடியேறிவிட்டது.



எப்படியாவது மகன் திருமணத்திற்கு

முன்பாக வீடு கட்டியே ஆக வேண்டும்

என்பதில் உறுதியாக இருந்தார் அன்னக்கிளி.


ஒரு நேரமும் ஓயாத வேலை.

மகளிர் சுய உதவிக் குழுவில் போதாதற்கு

லோன் எடுத்து பணம் சேர்த்து வைத்துக்

கொண்டார்.


எல்லா பணத்தையும் போட்டு

எப்படியோ வீடுகட்டத் தொடங்கி விட்டார்.

அந்தி பகலாக தன் வீட்டு வேலையையும்

பார்த்துப் பார்த்து செய்தார்.


பார்ப்பவர்கள் எல்லாம்" கூலி வேலை

செய்து இவ்வளவு பணம் எங்கே

சேர்த்து வைத்திருந்தாய் "என்று

கேட்க ஆரம்பித்தனர்.


"சீட்டுநாட்டைப் போட்டு கொஞ்சம்போல

பணம் சேர்த்தேன். வேறு எங்குபோய்

பணம் சேர்க்கிறது? 

நம்மளை மாதிரி ஏழை பாழைகளுக்கு

வேறு எங்க பணம் சேர்க்கத் தெரியும்"

சொல்லிவிட்டுச் சிரிப்பார் அன்னக்கிளி.


"இருந்தாலும் நீ விவரமான ஆளுதான்

ஆயா....நானும் இருக்கேனே இரண்டு

ஊதாரி பய புள்ளைகளை வைத்துகிட்டு...

கால்காசு சேர விடமாட்டானுவ....

காசு கொடு...காசு கொடு என்று

அந்தி பகலா ஒரே நச்சரிப்பு."

தன் வீட்டு நிலைமையைச் சொல்லி

வருத்தப்படுவாள் பக்கத்து வீட்டு பாலாமணி.


இருக்கிற பணத்தை வைத்து

கொஞ்சம் கொஞ்சமாக கட்டினார்.

கட்டி முடிப்பதற்குள் வருடம் இரண்டு

ஆகிவிட்டது.



ஒன்றுக்கு இரண்டு வீடு.

இரண்டு மகன்களுக்கும் தனித்தனியான

வீடு. மனசு திருப்தியாக இருந்தது.

மகன்களுக்கு விமர்சையான திருமணம்.

எல்லாம் அவள் நினைத்ததுபோல் நடந்தது.


பெரியவனுக்கும் சின்னவனுக்கும்

எந்தப் பிரச்சினையும் வந்துவிடக்கூடாது

என்று ஒரு அடிகூட முன்னாபின்னா

இல்லாமல் பாகம் வைத்து  பிரித்து

சரியாக கட்டியிருந்தார்.


ஆனால் பின்னால் இருந்த ஓலை குடிசையை 

மட்டும் பிரிக்க மனம் இல்லை.

யாதுக்கும் இருந்துட்டுப் போகட்டும்

பழைய சாமான்களைப் போட்டு வைக்கலாம்

என்று விட்டு வைத்திருந்தார்.



இளையவனுக்கு திருமணம் ஆகி

மூன்று மாதங்கள்தான் ஆகியிருக்கும்.

அன்னக்கிளி இளைய மகனோடுதான் 

இருந்தார்.


இளைய மகனின் மனைவி

வசதியான வீட்டுப் பெண்.


அன்னக்கிளி தன்னோடு இருப்பது

சற்று நெருடலாகவே இருந்தது.

மூத்த மகன் வீட்டில் போய் இருக்க வேண்டியதுதானே

என்று ஜாடைமாடையாக பேசினாள்.

அன்னக்கிளி புரிந்து கொள்வதாக தெரியவில்லை.


இப்போது நேரடியாகவே தன் கணவனிடம்

குறைகூற ஆரம்பித்தாள்.

உங்க அம்மாவை உங்கள் அண்ணண் 

வீட்டுக்கு அனுப்புங்க...

அப்படி நீங்க அனுப்பலன்னா நான் எங்க 

அம்மா வீட்டிற்குப் போய்விடுவேன்

என்று மிரட்டினாள்.


ஒரு வயித்துக் கஞ்சிக்கு

இப்படி பேசுறாள...

ஒன்றும் சொல்ல முடியல.


அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

இந்த ஆம்பிளை நகராமல் இருப்பானா?


மனைவி சொல்லே மந்திரமாச்சே...


மறுநாளே அம்மா முன் வந்து நின்றான்.

மெதுவாக "அம்மா உங்களுக்கு

எங்க கூட இருப்பதில் பிரச்சினை

ஒன்றும் இல்லையே...."என்று நாசுக்காக கேட்டான்.


ஏன் என்பதுபோல மகனைப் நிமிர்ந்து

பார்த்தார் அன்னக்கிளி.


"உங்களுக்கு பிடிக்கலை என்றால்

நீங்கள் தனியாக போக வேண்டாம்"

என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல்

பேசினான்.


"என்ன தம்பி சொல்லுற ?"என்று

சற்று கலங்கிப் போய் கேட்டார்

அன்னக்கிளி.


"அம்மா...உங்களுக்கும் அவளுக்கும்

ஒத்துக்கல இல்ல ...பேசாம நீங்க அந்த

பழைய வீட்டுலேயே இருந்துடுங்களாம்..".

நேரடியாகவே பேசி முடித்துவிட்டு

ஒன்றுமே தெரியாதவன் போல் அம்மா

முகத்தைப் பார்த்தான்.


"என்னப்பா சொல்லுற...."மறுபடியும்

ஒன்றும் விளங்காதவள் போல் கேட்டார்.


"தனியா போயிருங்களாம் என்கிறேன்.

உங்களுக்கும் பிரச்சினை இல்லை .எங்களுக்கும்

பிரச்சினை இல்லை" உனக்கும் எனக்கும் 

ஒட்டும் இல்லை. உறவும் இல்லை

என்பதுபோல சர்வ சாதாரணமாக

பேசி முடித்துக் கொண்டான்.


இப்போது அன்னக்கிளிக்கு தலை சுற்றுவது

போல் இருந்தது.

நெஞ்சை யாரோ கசக்கிப் பிழிந்து

குப்புற விழ வைத்தது போல்

இருந்தது.

காதுக்குள் ஏதோ ஒன்று

வீ...வீயென்று இரைந்து 

கொண்டிருந்தது.


காலுக்குக்கீழ் இருந்த நிலம்

கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து

கொண்டிருந்தது.


காரவீட்டில் வாழ வேண்டும் என்ற

இருபது ஆண்டு கால கனவு 

கணப்பொழுதில் நொறுங்கி தவிடு 

பொடியானது  போல் இருந்தது.


"அம்மா..."என்று மகன் சொல்லி

முடிக்கும் முன்னர்


"சரிப்பா...சரிப்பா." என்றவர்

மூலையில் சாத்தி வைத்திருந்த

போய் பழைய பாயையும்

போர்வையையும் எடுத்துக்கொண்டு 

பழைய ஓலை வீட்டை நோக்கி 

நடந்து வந்து பழைய நார்க்கட்டிலில் 

படுத்துக்கொண்டு கூரையைப் பார்த்தார்.


ஓட்டைக் கூரையும் ஒழுகும் மழைநீர்

சப்தமும் கண்முன் வந்து நின்றன.


கண்ணீரில் காரவீடு கரைந்து

காணாமல் போனது.
























"

Comments