உவப்பத் தலைக்கூடி
உவப்பத் தலைக்கூடி.....
உவப்பத் தலைக்கூடி
இருக்கும் அன்பு
நண்பர்கள் அனைவருக்கும்
என் முதல் வணக்கம்.
பள்ளி வளாகத்தில் கால்பதித்ததும்
சில்லென்று துளிர்விட்ட
நினைவுகள் என்னைச்
சிலிர்க்க வைத்தது.
எதிரே உங்கள் முகங்களைக்
கண்டதும்
சொல்ல முடியாத மகிழ்ச்சி
என்னைத் திக்குமுக்காட
வைக்கிறது.
இதோ இங்கே நிற்பது நானா...?
நானா ....
நான்தான் உங்கள் முன்னால்
நின்று கொண்டிருக்கிறேனா?
நினைத்துப் பார்க்க முடியாத
இன்ப அதிர்ச்சி.
உங்களோடு என் அன்பைப்
பகிர்ந்துகொள்ள
இப்படியொரு வாய்ப்பை வரமாக
அளித்த இறைவனுக்கு
முதலாவது நன்றி
சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.
காலம் வரைந்துவிட்ட
கோலம் நம்
அனைவர் முகத்திலும் தெரிகிறது.
கண்கள்
அதே பழைய
துடிப்புடன் கூடிய நினைவில்.
பேசாதவற்றைப் பேசத்
துடிக்கும் உதடுகள்.
என்னப் பேசுவது எனத் தெரியாத
ஊமைமொழிப் பரிமாற்றங்கள்.
நலமா
எனக் கேட்கும்
பாசப் பிணைப்பு
பார்வையில்.
இவை யாவும் என்னை
எங்கெங்கோ கொண்டு
செல்கின்றன.
அனைவர் கண்களிலும்
ஏதோ ஒரு பனிமூட்டம்.
எதையோ காணாததொரு
வாட்டம்.
ஆசிரியர் முகம்
காண வேண்டும்
என்ற தேட்டம்
உள்ளுக்குள் ஓட்டம்
என்பது புரிகிறது.
வகுப்பறையில் எதிரொலித்த
ஆசிரியரின் கம்பீரக் குரலைக்
கேட்க வேண்டும்
என்ற நாட்டம்
நம் கால்களை இங்கேயே
கட்டிப் போட்டு
வைத்திருக்கிறது.
கலங்கரை விளக்காய்
இருந்த ஆசிரியர்களின்
அர்த்தமுள்ள அடையாளம்
நம் பள்ளி.
இங்கே பயணித்த கால்கள்
நம் சுவடுகளைத் தேடுகின்றன.
துரத்திய கால்களைத்
திரும்பிப்
பார்க்க வைக்கின்றன.
பூப்பூவாய்ப் பூத்த புதுப்புது
எண்ணங்கள்....
புன்னகையோடு தோளில்
கைபோட்டு நடந்த தோழர்கள்
அப்பப்பா எத்துணை
ஆனந்தமான நாட்கள்...!
கொடிக்கம்பமும்
அதைச் சுற்றி விளையாடிய
விளையாட்டும்
வா இன்னொரு முறை
விளையாடலாம் என்று
அழைக்கின்றன.
பார்த்த இடங்கள்
பேசிய கதைகள்
நினைவலையாக
நெஞ்சில் வந்து
கொஞ்சி விளையாடுகின்றன.
கல்வெட்டுகளாய்
பள்ளி எங்கும்
பழைய நினைவுகள்
ஆசிரியரின் கண்டிப்பும்
தண்டிப்பும்
முழங்காலிட்ட கால்களும்
வாய்தா கேட்டு
வாசலில் நிற்கின்றன.
உங்களைப் பார்த்ததும்
என்னை மறந்தேன்
ஆசிரியையாக முப்பதாண்டு கால
பயணத்தைத் தொலைத்தேன்.
இந்தப் பள்ளியின் மாணவியாக
பதின்ம பருவ பெண்ணாக
உங்கள் முன் நிற்பது போன்ற
உணர்வில் மிதக்கிறேன்
என் பள்ளி
என் பெருமை என்று
உரக்கக் கூறுவதில்
பெருமிதம் கொள்கிறேன்.
பேரானந்தம் அடைகிறேன்.
கடந்து வந்தப் பாதையும்
பாதை அமைத்துத் தந்த
பள்ளியும் நம் ஆசிரியர்களும்
என்றென்றும்
நினைவுகளால் நம் நாட்களை
இனிமையாக்கட்டும்.
இந்த நேரத்தில்,
"உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்".
என்ற குறள் தான் என் நினைவில்
வந்து போகிறது.
மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனம் கலங்குவதும் அறிவுடையோர் செயல் என்று
வள்ளுவர்
எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்.
மகிழ்ந்து பழகினோம்.
கண்கள் கலங்க விடை பெற்றுச்
சென்றோம்..
மறுபடியும் அதே நிலையில்
அதே மனநிலையில்
நின்று கொண்டிருக்கிறோம்.
நம் எண்ணங்களுக்கு
தீனியிட்டு
வண்ணம் தீட்டி
வடிவமைத்துத் தந்த
இனிய பள்ளி நாட்களை
நெஞ்சம் சுமக்க
மகிழ்வோடு
கடந்து செல்ல
விரும்புகிறேன்.
இப்படியொரு கூடுகையை
ஏற்பாடு செய்து
நம்மை மகிழ்வித்த
அன்பு நண்பர்களுக்கு நன்றி.
காலம் இன்னொரு கூடுகையில்
நம்மை ஒன்று சேர்க்கட்டும்.
இறையருள் என்றென்றும் நம்மை
வழிநடத்தட்டும்.
நண்பர்களுக்கு என் அன்பையும் நன்றியையும் முன் வைக்கிறேன்.
நன்றி..... வணக்கம்.
Comments
Post a Comment