மரம் பழுத்தால் வவ்வாலை....
மரம் பழுத்தால் வவ்வாலை...
நமக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள யாருமே இல்லையே என்று
வருந்துகிறீர்களா?
பிறப்பால் மட்டும் வருவதல்ல உறவு. நமது செயலால்
நமக்கு உறவுகளாக ஓராயிரம் பேர் வருவர்.
நமது மனதில் ஈரம் இருக்க வேண்டும்.
கண்களில் கருணை இருக்க வேண்டும்.
உற்ற
நேரத்தில் இல்லாதவர்களுக்கு உதவும்
நற்பண்பு இருக்க வேண்டும்.
இவையெல்லாம் இருந்துவிட்டால்
யாருமில்லையே என்ற கவலை
உங்களுக்கு வேண்டாம்.
இந்த நற்பண்புகள் எங்கிருந்தும்
உறவுகளை உங்களிடம்
கொண்டு வந்து சேர்க்கும்.
அது எப்படி?
யார் சொன்னது?
இது எப்படி சாத்தியமாகும்?
ஏன் சாத்தியமாகாது?
மரத்தில் பழம் பழுத்துத் தொங்குகிறது.
எந்த மரமாவது என் மரத்தில்
பழம் பழுத்திருக்கிறது.
வாருங்கள் என்று வவ்வால்களை அழைத்ததுண்டா?
இல்லை வேறு எந்தப் பறவைகளுக்காவது அழைப்பு விடுத்ததுண்டா?
இல்லையே..
பிறகு அதெப்படி எல்லாப் பறவைகளும்
அந்த மரத்தை நாடி ஓடி வருகின்றன?
காரணம் அதன் பழம்.
அதன் இனிமையும்
அதன் மணமும்
எல்லாப் பறவைகளுக்கும்
அழைப்பு விடுத்துவிடுகிறது.
பறவைகளைத் தன்னிடம் கொண்டு வந்து
சேர்த்துவிடுகிறது.
இப்போது
அந்த மரம் பறவைகளின்
விருப்பமான இடமாகிப் போகிறது.
பறவைகளின் கொண்டாட்டம்
பழ மரத்தைச் சுற்றியே இருக்கும்.
கன்றை ஈன்ற
பசு தன் பாலை கரவாது
சுரந்து கொடுக்கும் பண்பு கொண்டது.
அதுபோல இல்லை என்று
வருவோர்க்கு இல்லை என்று
சொல்லாது ஈந்து மகிழும் பண்பு
நம்மில் இருக்குமானால் உலகத்தவர்
அனைவரும் நமக்கு உற்றார்
ஆகிவிடுவர்.
இனி தனிமை இல்லை.
இந்தக் கருத்து கொண்ட நல்வழி
பாடல் இதோ உங்களுக்காக...
"மரம் பழுத்தால் வௌவாலை வா என்று கூவி
இரந்து அழைப்பார் யாவரும் அங்கில்லை – சுரந்து அமுதம்
கன்று ஆ தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத்தவர்."
பொருள் :
"மரத்தில் பழம் பழுத்திருந்தால், பழத்தைத் தின்று பசியாற வாருங்கள் என்று
வௌவாலை வருந்தி அழைப்பதற்கு மரத்தருகில் எவரும் இருப்பதில்லை.
கன்றை உடைய பசு தானாகவே பாலைச் சுரந்து கொடுப்பது போல ஏழை எளியவர்க்கு இல்லை என்று சொல்லாமல், தம்மிடம் உள்ள மிகுதியான செல்வத்தைக் கொடுத்து அவர்தம் துன்பத்தைத் தீர்ப்பாராயின் அத்தகைய
ஈகைப் பண்பு கொண்டவர்க்கு உலகத்தார் அனைவரும் உறவினர் ஆகிவிடுவர் ."
என்கிறார் ஔவை.
ஆ - பசு
Comments
Post a Comment