அன்னையும் அத்தனும் அல்லரோதோழி
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து
சென்றுவிட்டான். நெடுநாள் ஆகிவிட்டது.
அவன் இன்னும் வந்தபாடில்லை.
தலைவி ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
உடல் மெலிகிறது.
தலைவியால் எதிலும் முழுமையாகக்
கவனம் செலுத்த முடியவில்லை.
தலைவியின் ஏக்கம்
கவலை,உடல் வாட்டம் அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த தோழியால் அதற்கு மேலும் சும்மா இருக்க முடியவில்லை.
தலைவன் மீது கோபம் கொள்கிறாள்.
அவனை அன்பில்லாதவன் அதனால்தான் உன்னை இப்படித் தவிக்க விட்டுவிட்டு சென்றுவிட்டான் என்று கோபமாகப் பேசுகிறாள்.
தலைவன் தன்னைவிட்டுவிட்டுச்
சென்றுவிட்டானே என்ற கவலை
இருக்கத்தான் செய்கிறது.
இருந்தாலும் அவன்மீது பிறர் குறை கூறுவதையோ கோபமாகப்
பேசுவதையோ அவள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை .
கோபமாகப் பேசிய தோழிக்குப் பதிலாக
அமைந்த ஒரு குறுந்தொகைப் பாடல் என்னை நெகிழ வைத்தது.
இந்தப் பெண்களே இப்படித்தான் என்று சாதாரணமாக நினைத்துக் கடந்து போக முடியவில்லை.
தலைவன் தலைவி இருவருக்கும் இடையில் ஊடல் இருக்கும்.
அந்த ஊடலுக்கு இப்படி ஒரு சிறப்புக் காரணம் இருப்பதை இந்தப் பாடலைப் படித்ததும் தெரிந்துகொள்ள முடிந்தது.
அப்படி என்ன சிறப்புக் காரணம் என்கிறீர்களா?
இதோ இந்தப் பாடலைப் படியுங்கள் புரியும் .
பாடல் இதோ....
நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரையல் அவர்நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே.
-அள்ளூர் நன்முல்லையார். (குறு.93)
என்னுடைய அழகு தொலைந்து போகட்டும் .உடல் நலம்கெட்டு என்னுடைய உயிர் இவ்வுடலை விட்டு நீங்கட்டும். பரவாயில்லை.அவரைப் பற்றி மட்டும் தவறாகப் பேசாதே. அவர் நமக்கு அன்னையையும் தந்தையையும் போன்றவர் அல்லவா தோழி?
என்னோடு ஏற்பட்ட ஊடலில் தலைவன்
என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.
அன்பில்லாதவர்களிடையே ஊடல் எப்படி ஏற்படும்?
என்று கேட்கிறாள் தலைவி.
நல்ல கேள்வி.
ஊடலும் கூடலும் அன்புடையார் மாட்டு
நிகழ்வது இயல்புதானே!
அதற்காக முற்றிலும் தலைவனைக் குறைகூறுவதில் என்ன நியாயம்
இருக்கிறது? என்ற தலைவியின்
உள்ளத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டிய கல்விச் சித்திரம் இது.
இப்பாடலைப் படிக்கும் போதெல்லாம்
என்னவொரு உணர்ச்சிப் பிழம்பான வார்த்தைகளைப் கொண்ட
கவியோவியம் இது என்று வியந்ததுண்டு.
இப்பாடலின் பின்புலம் என்னவாக இருக்கும்? கணவனோ அல்லது காதலனோ ஏதோ ஒரு காரணத்திற்காக தலைவியிடம் ஊடல் கொண்டு பிரிந்து சென்றிருக்கக்கூடும். சென்றவன் வெகுநாட்களாய் திரும்பவில்லை.
இனித் தலைவன் வருவனோ மாட்டானோ என்ற நிச்சயமற்ற நிலை.
இவ்வளவு காலம் வராதவன் இனியா வரப் போகிறான். அட...இவள் ஒரு பைத்தியக்காரி .
இவள் உடல் அழகெல்லாம் அழிந்து கொண்டிருக்கிறது.அவன் இனி வரவே மாட்டான் என்று என்ற ஐயம் தோழியின் மனதில் எழ அவள் தலைவனைத் தவறாகப் பேசிவிட்டாள்...
அவ்வளவுதான்.
தலைவன் மீது தலைவி கொண்ட ஆணித்தரமான நம்பிக்கை பதிலாக
வந்து விழுகிறது.
தன் நலங்கள் தொலைந்தாலும் தானே இறக்க நேரிட்டாலும் அப்போதும் அவனைக் கடிந்து கொள்ள விரும்பாத பேரன்பு.
அவனை காதலனாக மட்டுமின்றி தாயுமானவனாகவும்கொண்டாடி மகிழும் நெருக்கம்.
'புலவி அஃதெவனோ அன்பிலங்கடையே?' என்ற வரியில் ஊற்றெடுத்துப் பெருகி நிற்கும்
அசாத்திய நம்பிக்கை....
இவள் அவன்மீது கொண்ட காதலை உரைப்பதற்கு வேறென்ன வார்த்தைகள் வேண்டும்?
அன்பில்லாவிட்டால் ஊடல் எங்கிருந்து தோன்றும்?
அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட ஊடல் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள கொண்டுள்ள மேலான
அன்பின் வெளிப்பாடு
என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறாள்.
அருமையான காதல் நிகழ்வை
நம் கண்முன் நிகழ்த்திக் காட்டிவிட்டார்
அள்ளூர் நன்முல்லையார்.
Comments
Post a Comment