கள்ளி மேல் கை நீட்டார்
கள்ளி மேல் கை நீட்டார்
மலர்களைப் பார்த்ததும் இயல்பாகவே
மகிழ்ச்சி அரும்பும்.
சிலருக்கு தொட்டுப் பார்க்க ஆசை வரும்.
சிலருக்கு முகர்ந்துப் பார்க்க ஆசை வரும்.
இன்னும் சிலரை அந்த இடத்தைவிட்டு
கடந்து போக விடாதபடி கால்களை
அங்கேயே கட்டிப்போட்ட படி நிறுத்தி வைக்கும்.
இப்படி மலர்கள் என்றால் அனைவருக்கும் ஏதோ ஒருவகையான ஈர்ப்பு இருக்கத்தான்
செய்யும்.
பெண்கள் மலரைக் கண்டதும்
கொய்து கொண்டையில்
வைத்துக் கொள்ள வேண்டும் என்று
ஆசையாகக் கை நீட்டுவர்.
ஆனால் எல்லா மலர்களும் சூடிக்கொள்ள
உகந்ததாக இருக்குமா?
நாம் பார்க்கும் போது அழகாக சிரிக்கிறது கள்ளி மலர்.
அதற்காக அதனைக் கொய்து தலையில் சூடிக்கொள்ளவா முடியும்?
அவற்றைப் பார்க்கும் போதே
அள்ளிக்கொள்வது போலச் சிறிய அரும்புகளை உடையவையாகத்தான் இருக்கும்.
ஆனால் அவை சூடிக்கொள்வதற்கு ஏற்ற மலர்கள் அல்லாமையால் யாரும் கள்ளிச் செடியின் மீது கை நீட்டமாட்டார்கள்.
அதுபோல, மிகப்பெரும் செல்வம் உடையவராக ஒருவர் இருக்கின்றார்.
அதனால் பலரின் கண்கள் அவர்மீது
இருக்கும்.
அவருடைய பணம் பலரைக் கவரலாம்.
ஆனால் அவர் செல்வம் யாருக்கும் பயன்படாமையாக இருந்தால்....
கொடுக்கும் நற்குணம் அவரிடம்
காணாமற் போயிருந்தால்....
அவர் பணம் இருந்தும்
பாராட்டும் தகுதியற்றவராகவே கருதப்படுவார்.
யாரையும் தன்பால் நெருங்க விடாத
கள்ளிப்பூ போன்றுதான் இருப்பார்.
அறிவுடையோர் அவரிடம்
ஒருபோதும் சேர விரும்ப மாட்டார்கள்.
ஈதல் இல்லாதவனிடம் இருக்கும்
செல்வம்
கள்ளிப்பூ போன்றதுதான்.
இப்படியொரு அழகிய உவமையுடன்
கூடிய பாடல் நாலடியாரில் உள்ளது.
பாடல் இதோ உங்களுக்காக....
அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களைநள்ளார் அறிவுடை யார்.
நாலடியார் பாடல்: 262
அள்ளிக் கொடுக்கும் அளவுக்கு
ஏராளமாக செல்வம் இருப்பினும்
கிள்ளிக்கொடுக்க மனமில்லாவர்
கள்ளி பூக்களுக்கு ஒப்பானவர்.
அருமையான உவமை இல்லையா?
இனி கள்ளிப்பூவைக் காணும் போதெல்லாம்
ஈயாத புல்லர் நினைவு வராமலா போய்விடும்.?
Comments
Post a Comment