நின்றன நின்றன நில்லா...

நின்றன நின்றன நில்லா...


இந்த வாழ்வு நிலையில்லாதது.

நாம் நிரந்தரமாக இந்த உலகில் 

வாழப் போகிறவர்கள் என்ற நினைப்பில்

வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நேற்று இருந்தது இன்று நம்மிடம் இல்லை.

நாளை என்ன நடக்குமோ நமக்குத் தெரியாது.


இப்படித்தான் வாழ்வோம் என்று

யாரும் முடிவு செய்ய முடியாது.

இங்கு நிரந்தரம் என்று எதுவும் இல்லை.


விருப்பம் போல் வாழ்வது வாழ்க்கையல்ல.


வாழுங்கள். அது உங்கள் விருப்பம்.

ஆனால் வாழும்போதே அறக்காரியங்களைச்

செய்து வாழுங்கள்.

இதுதான் பட்டறிவாளர்கள் நமக்குச்

சொல்லித்தரும் பாடம்.


 நல்லது செய்வதற்கு

நாள் பார்க்கக் கூடாது.

நாள் பார்த்து ,காலம் பார்த்து

செய்வேன் என்று காத்திருந்தால்

நல்லது நடைபெறாமலேயே

போய்விடலாம்.


சிறிது காலம் கழித்து நல்ல காரியங்கள் செய்துவிட்டு வருகிறேன் என்று கூறினால் கூற்றுவன் உங்களுக்காகக் காத்திருக்கப்

போவதில்லை.


இதனை உணர்த்தும் அருமையான நாலடியார் பாடல் உங்களுக்காக.


‘நின்றன நின்றன நில்லா’என உணர்ந்து,ஒன்றின ஒன்றின வல்லே, செயின், செய்க-சென்றன சென்றன, வாழ்நாள்; செறுத்து, உடன்வந்தது வந்தது, கூற்று!

                         -  நாலடியார் 


அழகிய ஓசைநயம் மிக்க இப்பாடல் 

வாழ்வின்  நிலையாமையை அழகுபடக் கூறுகிறது.


அதன் பொருளும் அதில் வரும் ஓசை நயமும்

என்னைக்  கவர்ந்தது.


“நாம் வாழும் நாட்கள் செல்கின்றன. செல்கின்றன......சென்றுகொண்டே இருக்கின்றன.எமன் சினம் கொண்டு நம்மை நோக்கி விரைந்து வருகிறான். வருகிறான்....வந்துகொண்டே இருக்கிறான்.


நிலையானவை என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் 

அனைத்து செல்வங்களும் நில்லேன்...நில்லேன்...நில்லேனென்று  நிலைக்காமல் நம்மைவிட்டுச் சென்று கொண்டே இருக்கின்றன.


இந்த உண்மையை உணர்ந்து அறச் செயல்களைச் செய்க....செய்க.... விரைந்து இன்றே இப்போதே  செய்க"

என்கிறார் நாலடியார்.


அருமையான பாடல் இல்லையா?





Comments